ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் கலகத் தடுப்பு பொலிசாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 54 வது வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.இனி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் ஒருமுறைதான் நீடிக்கப்படும் என்கின்ற தீர்மானம் 4978 பேரின் ஆதரவுடன் இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தீர்மானத்தை எதிர்த்த சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய மற்றும் தயாசிறி ஜயசேகர தரப்புக்கு ஆதரவாக 337 பேர் தான் வாக்களித்திருக்கிறார்கள்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை நேரடியாகவே எதிர்த்துவரும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்புக்கு இதுஒரு பலத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறையும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னர் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தம், இப்போது மீண்டும் மாற்றப்பட்டு பதவிக்காலம் 6 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும் ஆறுதலாக அமைந்திருக்கிறது.
ஜனாதிபதி தேர்தல்
இன்று மாநாட்டின் மேடையிலேலேயே இருதரப்புக்கும் இடையிலான முறுகல் நிலையை நேரடியாகவே பார்க்க முடிந்தது.
தலைவரின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளுக்கு நீடிப்பதை தாம் எதிர்ப்பதாக சஜித் பிரேமதாச மேடையில் கூறியபோது, பெரும்பான்மை ஆதரவு தமது தரப்புக்குத் தான் இருப்பதாக ரணில் கூறினார்.
ஆனால் 1994-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியால் பலமான வெற்றியை பெறமுடியாமல் போயிருப்பதாக சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடா விட்டால், கட்சியின் தலைமைத்துவத்தையும் பொறுப்பேற்று தாமே அந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சஜித் கூறினார்.
அப்போது பேசிய ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியை பெரும் பலம்மிக்க கட்சியாக மாற்றப்போவதாகக் கூறினார். அதற்குத் தாமே தலைமை வகிப்பதாகவும் ரணில் கூறினார்.
அரசியல் பொருளாதார புரட்சியை சமூகத்தில் ஏற்படுத்தவே தமது கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதாகவும் வெறுமனே ஆட்சியை பிடிப்பதற்காக அல்ல என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாநாட்டு மேடையில் கூறினார்.
1994-ம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியை பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சி பல தேர்தல்களில் தோல்வியை தழுவிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.