12/14/2012

| |

- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகளுக்கான புகலிட ஆலோசனைக் குழுவினரின் ஊடக அறிக்கை



- 13.12.2012
இலக்கியச் சந்திப்புத் தொடரின் 40 வது தொடர் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் என நாங்கள் ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, வெளியாகிய இருவேறு எதிர்வினைகளை நாங்கள் பொறுப்புணர்வுடன் அணுகி அவை குறித்து எமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டியர்களாக உள்ளோம்.
முதலாவதாகத் தோழர்கள் பௌசர், கிருஷ்ணராஜா ஆகியோரின் அறிக்கை குறித்து எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறோம்.
அவர்களது அறிக்கை உண்மைக்கு மாறான தகவல்களாலும், சனநாயக நெறிகளிற்கு எதிரான தொனியுடனும் அமைந்திருப்பதை நாங்கள்வருத்தத்துடன் பதிவு செய்கின்றோம்.
38வது இலக்கியச் சந்திப்பு பிரான்ஸில் நிகழ்ந்தபோது 40வது சந்திப்பை இலங்கையில் நடாத்த நாங்கள் கோரியிருந்தோம். அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட பௌசர், கிருஷ்ணராஜா, ராகவன் ஆகிய மூவரும் அங்கு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்ததை நன்கு அறிவார்கள். எனினும் அதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய இடம் கனடாவில் நடைபெறவிருந்த 39 வது இலக்கியச் சந்திப்பாகயிருந்தது.
நாங்கள் 40வது சந்திப்பை இலங்கையில் நடாத்தக் கோரியதை நன்கறிந்திருந்த பௌசர், கிருஷ்ணராஜா, ராகவன் ஆகியோர் எங்களுடன் எதுவித ஆலோசனைகளையும் நடத்தாமலேயே 40 வது சந்திப்பை லண்டனுக்குக் கோரும் மின்னஞ்சலைக் கனடாக் குழுவினருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
கனடாச் சந்திப்பில் அடுத்த சந்திப்பு எங்கே எனத் தீர்மானிக்கும் வேளையில் கனடாச் சந்திப்புக் குழுவினர் லண்டனுக்குக் கோரியவர்களின் மின்னஞ்சலைச் சுட்டிக்காட்ட, அங்கிருந்த நண்பர் கற்சுறா அடுத்த சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான கோரிக்கை 38வது சந்திப்பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவ்வாறு முற்கூட்டியே கோருவதொன்றும் இலக்கியச் சந்திப்பின் வழமைக்கு மாறான செயல் அல்ல. எடுத்துக்காட்டாக 39 வது சந்திப்புக்கான கோரிக்கையை சுமதி ரூபன் 37வது நோர்வே சந்திப்பில் முன்வைத்ததைக் கணக்கில்கொண்டே 38வது பிரான்ஸ் சந்திப்பில் 39வது சந்திப்பு கனடாவில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
40வது சந்திப்புக் குறித்து கனடா இலக்கியச் சந்திப்புக் குழு ஒரு தீர்மானகரமான முடிவை அறிவிக்காமல், இலக்கியச் சந்திப்பை லண்டனுக்குக் கோரிய குழுவினரும் இலங்கைக்குக் கோரிய குழுவினரும் தமக்குள் பேசி ஒரு முடிவை எடுக்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. தொடர்ந்து இது குறித்த உரையாடல்களை மூன்று தரப்புகளும் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசிகள் வழியேயும் நிகழ்த்தின. இறுதியில், லண்டனுக்குக் கோரியிருந்தவர்கள் தங்களது சார்பில் இலங்கைக்குக் கோரிய குழுவினருடன் ராகவன் பேச்சுவார்தைகளை நடத்தி ஒரு தீர்வை எட்டுவார் எனத் தெரிவித்தார்கள். அதை நாங்களும் கனடாச் சந்திப்புக்குழுவின் தலைமை ஏற்பாட்டளாரான சுமதியும் ஏற்றுக்கொண்டோம்.
நாங்கள் ராகவனுடன் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து உரையாடல்களை நடத்தினோம். குறிப்பாக இந்தப் பிரச்சினை தொடர்பாக நாங்கள்தான் தொடர்ச்சியாக லண்டனுக்குக் கோரிய குழுவினருடன் உரையாடல்களை வலிந்து நடத்தினோமே அல்லாமல் அவர்கள் ஒருதடவை கூட எங்களுடன் இது குறித்துத் தொடர்பு கொள்ளவில்லை. இதன் நடுவே தமக்கு இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தும் நோக்கமில்லை என்ற செய்தியை மின்னஞ்சல் வழியே ராகவன் கனடாக் குழுவின் தலைமை ஏற்பாட்டாளர் சுமதிக்கு அறிவித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடாத்துவதில் தனக்கு மறுப்புகளில்லை எனவும் ராகவன் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அது லண்டனுக்குக் கோரிய பௌசர், ராஜா ஆகியோரின் ஒப்புதலுடன் நடப்பதே தனது விருப்பம் என்றார். கண்டிப்பாக எங்களது விருப்பமும் அதுவாகவேயிருந்தது.
கனடாச் சந்திப்பு நடந்து முடிந்து ஏழு மாதங்களாகியும் லண்டனுக்குக் கோரிய பௌசரும் ராஜாவும் ஒரு தீர்வை எட்டுவதற்கு எங்களுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். இது அவர்களின் காலத்தைக் கடத்தும் பொறுப்பின்மை அல்லாமல் ஒரு தீர்வை எட்டுவதற்கான வழியல்ல. அடுத்த யூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடத்துவதெனில் அதற்கான ஆயத்தங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்ற அவசரமான நிலை எமக்கு. எனவே இனியும் காலத்தை வெறுமனே வீணடிக்க முடியாது என்ற கட்டாயத்திலேயே 40வது சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முடிவை நாங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று.
எங்களது அறிவிப்பைத் தொடர்ந்து பௌசரும் கிருஷ்ணராஜாவும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒரு பொது அறிக்கை கிடையாது. அந்த அறிக்கை எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. பௌசரே ஓர் இணையத்தளத்தை நடத்திவரும் போதிலும் அவரது இணையத்தில் கூட அவ்வறிக்கை வெளியாகவில்லை. அந்த அறிக்கை சுசீந்திரனின்முகநூலில் வெளியிடப்பட்டது. முகநூல் குழுமம் நண்பர்களிற்குள் உள்ளடங்கிய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வெளி மட்டுமே. எனவே அவர்களது அறிக்கை ஓர் பொது அறிக்கையல்ல. அந்த அறிக்கையை அவர்கள் பொதுவில் வெளியிடத் தயங்குவதன் காரணங்களையிட்டு நாங்கள் சந்தேகங்களைத் தெரிவிப்பதில் நியாயமுண்டு.
இனி அவ்வறிக்கையைப் பரிசீலிக்கலாம்:
அறிக்கையில் ஒரு கருத்தெடுப்பை அவர்கள் கோரியிருக்கிறார்கள். அக்கருத்தெடுப்பில் கலந்துகொள்ள வேண்டிய முந்தைய இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டர்களின் பட்டியல் அறிக்கையில் இணைக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் அத்தகையதொரு பட்டியல் இணைக்கப்படவேயில்லை. இந்தக் கருத்தெடுப்பு நடவடிக்கையில் முந்தைய இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டார்களில் யார் யாரெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், யார் யாரெல்லாம் விடுபட்டிருப்பார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அந்தப் பட்டியலை இவர்கள் பொதுவில் முன்வைக்க மறுப்பது ஏன் என்ற கேள்வி, இவர்கள் தமக்குச் சார்பானவர்களிடம் மட்டுமே கருத்துகளைப் பெற்று அவற்றை முடிவாக வெளியிடப்போகிறார்கள் என்ற சந்தேகத்தை உண்டாக்கக் கூடியது.
38வது சந்திப்பைப் பிரான்ஸில் நடத்திய ஒரு பிரிவினரே நாற்பதாவது சந்திப்பையும் நடத்த முயல்கிறார்கள் என்று அவ்வறிக்கை குறிப்பிடுவது மிகத் தவறானது. யாழ்ப்பாணத்தில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழுவில் 16 பேர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் இருவர் மட்டுமே பிரான்ஸில் சந்திப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள். குறிப்பாக யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் 11 பேர்கள் இலங்கையில் வாழ்பவர்களே. 38வது சந்திப்பை நடத்திய இருவரது நோக்கங்களிற்குக் கட்டுப்பட்டு மற்றைய 14 பேர்களும் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க அவ்வறிக்கை முயன்றிருப்பது உண்மையை மறைப்பதும் மிகுதி 14 உறுப்பினர்களையும் அவமதிப்புச் செய்வதுமாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் இலக்கியச் சந்திப்பு நடைபெறாத நிலையில் சந்திப்பை லண்டனில் நடத்துவதே நீதியானது எனப் பௌசரும் ராஜாவும் சொல்வதுதான் உண்மையிலேயே நீதியற்ற கூற்று. ஒருபோதுமே இலக்கியச் சந்திப்பு நடந்திராத இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நிகழ்த்தவேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளாக லண்டனில் சந்திப்பு நடக்காததால் அங்கு நடத்துவதே நீதியானது என அவர்கள் சொல்வது வலுவற்ற வாதம் மட்டுமே.
30 வருட யுத்தத்தின் பின்னான இந்தக் காலப்பகுதி நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இதுவரை புகலிட நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதால் தாய் நிலப் படைப்பாளிகளிற்கும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளிற்கும் இடையேயான உறவுகள் வலுப்படும் என்பதையும், இலக்கியச் சந்திப்பின் கட்டற்ற சுதந்திர மரபைத் தாயகத்திற்கும் எடுத்துச் செல்லும் ஒரு எத்தனம் இதுவென்பதையும், தாய் நிலப் படைப்பாளிகளின் அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் புகலிடப் படைப்பாளிகள் விளங்கிப் பெற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு இதுவென்பதையும் பௌசரும் – ராஜாவும் விளங்கிக்கொள்வார்கள் என்றே – 40வது இலக்கியச் சந்திப்பின் புகலிட நிகழ்ச்சி-நிகழ்வுகளின் ஆலோசனைக்  குழு  நம்புகின்றது.
புகலிடத்திற்கு வெளியே சந்திப்பு எடுத்துச் செல்லப்படுவதால் பொது அரங்கத்தில் , பொதுச் சபையில் ஒப்புதல் பெறப்பட்டே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றெல்லாம் அந்த அறிக்கை தெரிவிப்பது அப்பட்டமான அராஜகமே தவிர வேறில்லை. இலக்கியச் சந்திப்புக்கு ஏது பொது அரங்கும் பொதுச் சபையும். இந்தப் பொதுக்களைத் தீர்மானிப்பது யார்? அதை வரையறை செய்வது எது? அவ்வாறெல்லாம் இலக்கியச் சந்திப்புக் கு யாரும் உரிமையும் நிரந்தரப் பாத்தியதையும் தலைமையும் கொண்டாட முடியாது. ஒரு சந்திப்புத் தொடரை ஒரு குழு நடத்தினால் அத்தோடு அது இலக்கியச் சந்திப்பின் பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அடுத்த சந்திப்புக்கான பொறுப்பை அடுத்த சந்திப்பை நடத்தவிருக்கும் குழு எடுத்துக்கொள்ளும். ஒட்டு மொத்த நவீனத் தமிழ் இலக்கியச் சூழலிலும் இவ்வாறான நீண்டகாலத் தொடர் செயற்பாடு இதுவரை நடந்ததேயில்லை. இத்தகைய சனநாய மரபிற்கும் இலக்கியச் சந்திப்பின் சுயாதீன இயங்கு வழிக்கும் எவர் ஊறு செய்ய முயன்றாலும் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
இதுவரையான இலக்கியச் சந்திப்பைச் நடத்தியவர்களிடம் ஒப்புதல் பெற்றே இலங்கையில் சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என அவ்வறிக்கை தெரிவிப்பது சனநாயத்திற்கு முரணானது. இலக்கியச் சந்திப்பின் பெறுமதி என்பது அதை இதுவரை நடத்திய குழுக்கள் மட்டுமல்லாமல் அவற்றில் பங்குகொண்ட கருத்துரையாளர்களையும் பார்வையாளர்களையும் உள்ளடக்கியதே. எனவே சந்திப்பு நடத்திய குழுக்களை முடிவெடுக்கும் அதிகாரம் நிரம்பியவர்களாக முன்னிறுத்தி உதிர்க்கப்படும் இந்தப் பொதுச் சபை, பொது அரங்கு எனும் கதையாடல்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்த விருப்பம் தெரிவித்திருக்கும் இலக்கியச் சந்திப்புக் குழுவின் புதிய உறுப்பினர்கள் மீது முந்தைய சந்திப்புகளை நடாத்திய குழுவினர்கள் சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய முயற்சிப்பது எந்த சனநாயக நெறிகளுக்கும் முரணானது, அத்துடன் அது இலக்கியச் சந்திப்பின் சுயாதீன மரபிற்கும் முரணானது.
இதுவரை இலக்கியச் சந்திப்பு நடாத்தியவர்களில் ஒரு பகுதியினரிடம் கருத்தெடுப்பு நடாத்தும் முயற்சியில் பௌசரும் ராஜாவும் ஈடுபட்டிருக்கிறார்கள். கருத்து வாக்கெடுப்பொன்றை நடத்தி தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை அவர்கள் இருவரும் எங்கிருந்து பெற்றார்கள், அந்த அதிகாரத்தை அவர்களிற்கு யார் வழங்கினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவர்களால் கருத்தெடுப்பைக் கோரி மின்னஞ்சல் சுற்றுக்கு விடப்பட்டிருப்பதை அசோக் யோகன் தனது ‘இனியொரு’ இணையத்தளக் கட்டுரையில் உறுதிப்படுத்துகிறார். ஆனால் இலக்கியச் சந்திப்பு நடத்திய எல்லோருக்குமே இந்த மின்னஞ்சல் அனுப்பப்பப் படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக 38வது இலக்கியச் சந்திப்பை நடாத்தியவர்கள் இந்தக் கருத்தெடுப்பு நடவடிக்கையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது கருத்துகளைக் கோரி மின்னஞ்சலோ வேறு எதுவோ கிடைக்கவில்லை. எனவே சனநாயத்திற்குப் புறம்பான,இலக்கியச் சந்திப்புத் தொடருக்கு மறைமுகமான அதிகார மையத்தை உருவாக்க முயலும் இந்த பாரபட்சமான கருத்தெடுப்பு நடவடிக்கையை நாங்கள் தீர்மானகரமாக நிராகரிக்கின்றோம்.
இலக்கியச் சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான எத்தனங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே யாழ்ப்பாணத்தில் சந்திப்பை நடத்துவதற்கான எதிர்ப்பைப் புகலிடத்திலிருந்து சிலர் தெரிவித்து வருகிறார்கள். 2010 சனவரியில் இலங்கையில் நடந்த சர்வதேச மாநாட்டை எதிர்த்த அதே நபர்களே அதே காரணங்களை முன்வைத்து யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பையும் எதிர்க்கிறார்கள். சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடப்பதற்கு முன்பாக மாநாடுக்கு அரசு ஆதரவு , அரசு நிதி என்றெல்லாம் பரவலாகப் பொய்களைப் பரப்பினார்கள். ஆனால் வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்த மாநாடு அந்தப் பொய்களை முறியடித்தது. மாநாடு நடந்து முடிந்த பின்பு வதந்தியாளர்கள் தமது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
இலங்கையில் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் சூழல் இல்லாத நிலையில் இங்கு சந்திப்பை நடத்துவது பொருத்தமில்லாதது எனவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் இடையீடு செய்து சாத்தியமான வழிகளிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கான திறப்புகளைச் செய்துவிடவே நாங்கள் விரும்புகின்றோம். சந்திப்பு நடக்க முன்பாகவே அரசு ஆதரவு, புலிகள் ஆதரவு அது இதுவெனக் கிளப்பப்படும் ஊகங்களை நிறுத்திக்கொண்டு, சந்திப்பு நடந்து முடிந்த பின்பு சந்திப்பின் செயற்பாடுகளை மதிப்பிட்டு அதனிலிருந்து விமர்சனங்களையும் தேவைப்பட்டால் கண்டனங்களையும்தெரிவிப்பதே அறம் சார்ந்த அரசியல் வழி என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இலக்கியச் சந்திப்பு என்பது ஒரு நாட்டில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்புக் கிடையாது. அராஜகங்களிற்கு எதிராகக் களப் போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பு வலிமையும் அதற்குக் கிடையாது. ஆனால் இதுவரையான இலக்கியச் சந்திப்புகள் அதிகாரத்திற்கு எதிரான குரல்களும், விளிம்பு நிலை அரசியலின் குரல்களும், வித்தியாசம் வித்தியாசமான முரண் கருத்துகளும், மாற்றுக் கருத்துகளும், திறந்த விவாதங்களும் ஒலிப்பதற்கான களமாக இருந்து வந்திருக்கின்றன. இதுவே இலக்கியச் சந்திபபுத் தொடரின் வரலாற்றுப் பாத்திரமாகும். இலக்கியச் சந்திப்பு தனது அரங்கில் கருத்துச் சுதந்திரத்தை எவருக்கும் மறுத்ததில்லை என்பதே அதனது ஆன்மாவாகும். இலங்கை இலக்கியச் சந்திப்பு அரங்கும் இலக்கியச் சந்திப்பின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதனது ஆன்மாவையும் காப்பாற்றி அடுத்த சந்திப்புத் தொடரைப் பொறுப்பேற்கவிருப்பவர்களிடம் கையளிக்கும் என உறுதி ஏற்கின்றோம்.
2013 யூலையில் 40வது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடக்கும். சந்திப்பை ஒட்டி, அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களையும் இணைத்து விளிம்பு நிலைக் கருத்தாடல்களை முன்னிறுத்திய இலக்கியத் தொகுப்பு நூலொன்றையும் வெளியிடவிருக்கின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பு காத்திரமானவற்றைச் சாதிக்க அனைத்துலகத் தோழர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.