முதலாவதாக ‘முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ நூல் பற்றியும், ‘புத்தனின் பெயரால்’ எனும் நூல் பற்றிய அறிமுகத்தை ஜோய் அவர்கள் மேற்கொண்டார். அவர் கூடுதலாக முட்டை பரோட்டாவும்  சாதா பரோட்டாவும் எனும் நூல் பற்றியே மிக ஆர்வத்துடன் பேசினார். ஜோய் அவர்கள் நீண்டகாலமாக பிரான்சில் வாழ்ந்து வருபவர். இலக்கியத்திலும், அரசியலிலும் ஆர்வமுள்ளவர். கவிதை எழுதும் ஆற்றலும் கொண்டவர். ‘அந்தக் கரையில்’ ‘எரிவதும் சுகமே’ என்ற தலைப்பில் இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவ்ந்துள்ளது. அவருடைய அனுபவம் இவ்வாறு இருந்தது:
ஜோய்: முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் எனும் நூல் வந்து ஷாநவாஸ் அவர்களின் இரண்டாவது நூலாகும். இவர் சிங்கப்பூரில் உணவு விடுதி ஒன்றின் உரிமையாளராகவும் இருந்து வருகின்றார். இவரது முதலாவது நூலாக ‘துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. ‘முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும் எனும் நூலின் அணிந்துரையை வாசித்தபோது இது ஒரு சமையல் குறிப்பு ஆவணமாக இருக்குமோ என்றொரு சந்தேகமே எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் இந்த நூலை தொடர்ந்து வாசித்தபோது மிக ஆவலைத்தூண்டுவதாகவே இருந்தது. எழுத்து நடை வந்து மிக எளிதாக எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக இலகுவாக அமைந்திருக்கின்றது. சிங்கப்பூரில் தமிழர்களின்  வாழ்நிலை அனுபவங்கள் இங்கே மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதை வாசிப்பவர்களுக்கு இது ஒரு பத்தி எழுத்தாக தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதை ஒரு சிறுகதை தொகுப்பாகவும் பார்க்கலாம் என்றுதான் சொல்வேன். மிக நிறைய அனுபவங்கள் இங்கே தொகுக்கப்பட்டடிருக்கின்றது. இந்த நூலாசிரியர் நாளாந்தம் சந்திக்கும் மனிதர்கள், உணவுப் பரிமாற்றங்கள் குறித்த உரையாடல்களெல்லாம் மிக சுவாரிசியமாக விபரிக்கப்பட்டிருக்கின்றது. இவருடைய அனுபவப் பதிவை இவ்வாறு நான் புரிந்து கொண்டேன்: நான் காலையில் வேலைக்கு சென்று வீடுதிரும்பியதும் அன்று நான் கண்ட அனுபவங்களை எவ்வாறு எனது மனைவியிடம் பகிர்ந்து கொள்கின்றேனோ அவ்வாறான ஒரு அனுபவ உரையாடலாகவே என்னால் இதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஒரு சிறுவனின் பால்ய பருவமானது அகப் புறச் சூழலால் எவ்வாறு வடிவமைக்கப் படுகின்றதென்பதற்கான பல்வேறு காரணங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் தொழில் நிமித்தமாக செல்பவர்கள் தமது குடும்பத்திற்காக அங்கே தனியாக வாழ்ந்து, பல்வேறு துன்பங்களை அனுபவித்து பலர் பின்பு அங்கேயே இறந்து போகின்ற நிலைமைகள் பற்றி அவர் விபரிக்கின்றார். இந்த விடயமானது இங்கு எங்களது புகலிட வாழ்வு அனுபவங்களோடு பொருந்திப்போவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது.  இங்கு புகலிடத்தில் எம்மத்தியிலும் வாழும் பலர் குடும்பத்தை, உறவுகளைப்பிரிந்து அவர்களுக்காகவே உழைத்து, வாழ்ந்து இங்கேயே இறந்து போன சம்பவங்களை நாங்கள் அறிந்திருக்கின்றோம். இதில் வந்து ‘மூன்றாவது கை’ எனும் தலைப்பில் ஒரு அனுபவம் எழுதப்பட்டுள்ளது அந்த பத்தி வந்து எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. இந்த நூல் குறித்த ஆழமான பார்வையை அரவிந்த அப்பாத்துரை அவர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்வார்.
அரவிந் அப்பாத்துரை: எல்லோருக்கும் வணக்கம். இது வந்து  புனைவுடன் கூடிய ஒரு இலக்கிய நூல். ஆனால் இந்த புத்தகத்தை வந்து வமர்சனம் செய்யும்போது இதை ஒரு இலக்கிய விமர்சனமாக முன்வைக்கவேண்டுமா? அப்படி முடியுமா என்றொரு கேள்வி எழுகின்றது. நான் சிங்கபூர் சென்றபோது ஒரு புத்தகக் கடையில் ஷாநவாஸ்  அவர்களை  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் இந்த புத்தகத்தை என்னிடம் தந்து இது பற்றிய அபிப்பிராயத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். நான் உடனடியாகவே இதிலுள்ள இரண்டு, மூன்று பத்திகளை வாசித்தேன். இந்த இலக்கிய உலகத்திலே இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியை இந்த நூல் முன்வைப்பதை உடனடியாகவே புரிந்து கொண்டேன்.  இலக்கியம் என்பதற்கப்பால். நவீன இலக்கியம் என்றால் என்ன?  நவீன இலக்கியத்திற்கு ஒரு குணாம்சம் இருக்கின்றது அதுதான், ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கான கதை சொல்லும் முறையை தேர்ந்தெடுப்பது. 20ஆம் நூற்றாண்டில் இலக்கியத்தை பிரித்தறியும் போக்கிற்கு இதுவே காரணமாக அமைந்தது. இவர் ஒரு வித்தியாசமான கதை சொல்லி, இவர் ஒரு தனித்துவமான எழுத்தாளர், என்றெல்லாம் சொல்வதற்கு காரணமே அவரவர் தமது கதையை தாமாகவே சொல்லவேண்டும் என்பதால்தான். மற்றவர்களது கதைகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களை பின்பற்றி சொல்லாமல் தனது தனித்துவமான பாணியில் கதையை சொல்லவேண்டும்.
இந்த நூலின் எழுத்தாளர் ஷாநவாஸ்  அவர்கள் வந்து  ஒரு ரெஸ்ரோரண்ட் உரிமையாளர். அவருடைய அன்றாட அனுபவங்கள் அங்கு வேலை செய்பவர்களோடும், உணவுப் பரிமாற்றங்களோடும் அவருக்குள்ள ஈடுபாடுகளின் பதிவுகளாக அமைந்துள்ளது இந்த நூல். ஒரு ஸ்லாமியராகவும், தமிழ் இந்திய உணவுகளையே விற்பனை செய்பவராகவும் இருக்கின்றார். நாம் பிரான்ஸ், ரசியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் உணவு தரம் குறித்து பார்த்தோமானால் அவை இடம் சார்ந்ததாகவும், பொருளாதாரம் சார்ந்ததாகவும் இருப்பதை பார்க்கலாம். ஆனால் நாம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவின் உணவு பழக்கத்தை நாலு வகையாக பார்க்கலாம். ஒன்று வந்த கடல் சார்ந்து வசிப்பவர்கள் மீன்சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இரண்டாவது மதம் சார்ந்ததாக இருக்கும், இந்துக்குள் சாப்பிடும் வகை வேறு, முஸ்லிம், கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள்  சாப்பிடும் வகை வேறு, பொதுவான விடயமும் இருக்கும், மதம் சார்ந்த வேறுபாடுகளும் இருக்கும். மூன்றாவது வந்து சாதி சார்ந்த சாப்பாட்டின் வேறுபாடுகள். ஒவ்வொரு சாதியினரின் சாப்பாட்டு அணுகு முறைகளும் வேறு வேறாக இருக்கும். நான்காவது வந்து பொருளாதாரம் சார்ந்த சாப்பாட்டு முறை. பணக்காரன் சாப்பிடுவதும், ஏழைகள் சாப்பிடுவதும் ஒரேவகையாக இருப்பதில்லை. தானியங்களின் வரலாறு இருக்கின்றது. உணவு சமைப்பதன் வரலாறும் இருக்கின்றது. உணவு பரிமாறும் வரலாறும் இருக்கின்றது. இதற்குரிய வரலாறுகள் மட்டுமல்ல இதற்கான சடங்கு முறைகளும் பேணப்பட்டு வருகின்றது.
ஷாநவாஸ்  அவர்களின் எழுத்து முயற்சியை நான் எப்படி பார்க்கின்றேன் என்றால் உணவு வகைகளையும் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் பார்வையில் சமுதாயத்தின் கதையை சொல்வதுதான் அந்த முயற்சி. இந்த நூலின் அடிப்படை நோக்கமாகவும் அதையே நாம் பார்க்கலாம். ஒரு கேள்வி எழலாம்  கதை வந்து எப்படி தோன்றுகின்றது ஏன் தோன்றுகின்றது. கதை எப்படி பரிணாமிக்கின்றது, அவ்வாறான கதைகள் யாரிடம் சென்றடைய விரும்புகின்றது. இவ்வாறான  கேள்விகள் எல்லா எழுத்தாளர்களிடமும் கேட்கப்படும் கேள்விகளாகவும் இருக்கின்றது.
இந்த ‘முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ நூலை பார்த்தோமென்றால்    சிங்கப்பூரிலுள்ள ஒரு உணவுக்கூடத்தை மையாமாக கொண்டே கதை பிறக்கின்றது. சிங்கப்பூரில் வந்து  இந்தியர்கள்,சீனர்கள்,மலாயர்கள் என மூன்று இன மக்கள் வாழ்கின்றார்கள்.இந்த மூன்று இன மக்களின் உணவுப் பழக்கங்கள் வித்தியாசமானவை. உதாரணத்திற்கு அரிசியை எடுத்துக் கொண்டோமென்றால் அரிசி வந்து இந்த மூன்று இன மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், ஆனால் இந்த அரிசியை சமைக்கும் முறை என்பது ஒவ்வொரு இனத்திற்கும் மாறு பட்டதாகவே இருக்கும். இதனூடாக இந்த இன மக்களுக்கிடையிலான உறவு வேறுபாடுகளையும் எடுத்துச் சொல்வதே இந்த பிரதியின் தனித்துவம் என்று சொல்லாம். இந்த நூல் இலக்கியத் தரமாகவும் அதே நேரம் சமூகவியல் பண்புகளையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. என்னை வந்து ஒரு கல்லூரியல் தமிழ் இலக்கியத்தை பாடமாக கற்றுக் கொடுங்க என்று சொன்னால் நிச்சயமாக நான் இந்த புத்தகத்தையும் இலக்கிய கல்விக்காக பயன்படுத்துவதற்கு முன்மொழிவேன். இந்த நூலின் முக்கியம் என்னவென்று சொன்னால் உங்களுக்கான இலக்கியத்தை நீங்கள் எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு துணை நூல்.
போனமுறை நாம் யோ.கர்ணனின் படைப்புகள் குறித்துப் பேசும்போது யுத்தத்தின் கொடூரமும் அதனது பாதிப்பும் அனுபவங்களுமே அவருடைய கதைகளுக்கான பின்புலமாக இருந்ததென்று பேசினோம். அதனால் அவருக்கு யுத்தத்திலிருந்து கதை பிறந்தது. சிங்கப்பூரில் வந்து சிவில் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு அங்கு சொல்வதற்கு பல்வேறு விடயங்கள் இருந்தாலும் அவருக்கு தனிப்பட்ட முறையில் பாதித்த விடயமாக உணவுப் பிரச்சனை இருந்ததால் அவர் அவைபற்றி எழுதியுள்ளார். மலேசியாவில் நல்ல இலக்கியம் ஒன்றும் வரவில்லை, காரணம் வந்து அங்கு மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அமைதியான சூழலில் உக்கிரமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல இலக்கியங்கள் எங்களால் படைக்க முடியவில்லை என்று சிலர் சொல்வதை நான் படித்திருக்கின்றேன்.
இந்த நூலாசிரியரும் சிங்கப்பூரில்  அமைதியான சூழலில் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் உணவுவகைகள், அதனுடன் மக்களுக்கு இருக்கும் உறவுப் பரிமாற்ற நிகழ்வுகள் குறித்தெல்லாம் மிக சுவையாக பதிவு செய்திருக்கின்றார். இதில் தானியங்களின் வரலாறுகள் பேசப்பட்டிருக்கின்றது. தானியங்களின் வரலாறு எவ்வாறு அரசியல் வரலாறாக மாற்றமடைந்தது போன்ற தகவல்களையும் நாம் இதில் அறிந்து கொள்ளலாம். இந்த நூலில் உள்ள ‘அயல்பசியும் அம்மாவின் கை மணமும்’எனும் பத்தியில் சாப்பிடும் முறைகள் பற்றிய பல்வேறு வினைச் சொற்கள் இருக்கின்றது. இந்த இலக்கியத்தை  பிறமொழிகளோடு நாம் தாராளாமாக பகிர்ந்து கொள்ளலாம. தமிழில் இப்படி ஒரு இலக்கியம் இருக்கின்றது என்பதை நாம் பெருமையாகவும் கூறிக்கொள்ளலாம். புகலிடத்தில் எம்மவர்கள் பலர் ரெஸ்ரோரண்ட் வேலை செய்து வருகின்றார்கள் அதனால் அவர்கள் பிறநாட்டு சமையல்களை கற்றுக்கொள்வதோடு எமது சமையல் முறைகளையும் புகுத்திவருகின்றார்கள் இப்போதெல்லாம் இங்கும் பல்வேறு சாப்பாடுகளில் curry கலந்த (மசாலப் பொடிகள்) சாபாட்டை விரும்பி சாப்பிடுகின்றார்கள். தமிழர்கள் இங்குள்ள உணவு விடுதிகளில் வேலை செய்து வரும் அனுபவமே அதற்கு காரணமாகும்.
எனவே இது வந்து தரமான இலக்கியமாக அமைந்திருக்கின்றது. புகலிடத்திலிருக்கும் இளம் இலக்கியவாதிகள், இலக்கியம் படைக்கும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நூலை படித்தால் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைப்பதோடு மிகுந்த இலக்கிய ஆர்வமும் ஏற்படும் என்பது எனது அபிப்பிராயம்.
உரையாடல்:
அரவிந் அப்பாத்துரை: கொஞ்சம் சுருக்கமாகவே நான் பேசியிருக்கின்றேன் இந்த புத்தகத்தைப் பற்றி உதாரணம் கொடுக்க முனைந்தால் நிறைய கூறலாம். ஏனென்றால் ஜப்பானிய உணவுவகைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும். சீன மக்கள் எப்படி குச்சியால் சாப்பிடுகின்றார்கள் என்ற விடயம் பற்றிபேசியிருக்கின்றார். அது பற்றியெல்லாம் நிறைய பேச வேண்டியிருக்கும். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் மட்டும் ஏன் இப்படி சமைக்கின்றார்கள். இந்திய இலங்கை உணவு வகைகளைவிட அங்கு வித்தியாசமாக ஏன் இருக்கின்றது, ஏனென்றால் அவர்களிடம் மலாய,சீன வகை உணவுகளின் பாதிப்புகள் இருப்பதால் அவை வேறுபாடாக இருக்கிறது என்று பதிவசெய்துள்ளார்.  உணவுவிடுதியில் வேலை செய்பவர்களின் மனநிலை பற்றிய ஒரு விசாரணையையும் இந்த புத்தகம் மேற்கொண்டிருக்கின்றது. இங்கு வேலை செய்பவர்கள் விருப்பத்துடன் வேலை செய்கின்றார்களா, விருப்பம் இல்லாமல் வேலை செய்கின்றார்களா. மிகப் படித்தவர்கள் ஏன் இந்த வேலையை விரும்பி மேற்கொள்கின்றார்கள் போன்ற தவல்கள் எல்லாம் இதில் அடங்கியிருக்கின்றது.
அசுரா: இதில் வந்து உணவு வகைகளின் சுகாதார முறைகள் எவ்வாறு பேணப்படவேண்டும் என்பதற்குரிய தகவல்கள் நிறையவே உள்ளது. மற்றது நாங்கள் இதுவரை இட்டலி வந்து தமிழர்களின் கண்டு பிடிப்பு என்றே நம்பியிருந்தோம். ஆனால் அது இந்தோனேசியாவின் கண்டு பிடிப்பென்பதை இந்த நூல் ஆசிரியர் கூறுகின்றார். இவரைத்தான் நாம் கேட்கவேணும் புட்டு, இடியப்பம் போன்ற உணவுகளும் யாருடைய கண்டுபிடிப்பென்பதை. மற்றது விமானத்தில் ஏன் பரோட்டா பயணிகளுக்கு கொடுப்பதில்லை என்பதற்கான தகவல்களை இந்த புத்தகத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம். பரோட்டா வந்து தொடர்ந்து சூடுகாட்ட கூடாதென்றும். விமானத்தில் சாப்பாட்டு வகைகள், சாப்பிடும் உபகரணங்களின் அளவுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய தகவல்களும் இதில் உள்ளது.
தேவதாசன்: சாப்பிட வருபவர்களின் மனநிலை குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது. ஒரு பெண் வேலை செய்பவராக இருந்தால் சாப்பிட வருபவர்களுக்கு இருக்கும் மன உணர்வுகள் எப்படியிருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கின்றது.
அரவிந் அப்பாத்துரை: இந்த புத்தகம் முன்வைக்கின்ற முக்கியமான கேள்வி வந்து கதை சொல்லும் முறை. அனைவருக்குமே கதை சொல்லவேண்டும் என்கின்ற ஆசை இருக்கின்றது.
தேவதாசன்: நீங்க சொல்ல வந்தீங்க இது வந்து இலக்கியமா இல்லையா என்று ஆரம்பித்தது விட்டு அதை விட்டு கடந்து போனதாக எனக்கு தெரிஞ்சுது.
அரவிந் அப்பாத்துரை: இல்லை,  சாதாரணமாக நாம் படிக்கும் கதைகளில் நாவல், சிறுகதை என்று எடுத்தீங்களென்றால், சிறுகதை என்றால் எப்படி இருக்கும், நீங்க உங்கட கதையை சொல்ல முற்படுகின்றீர்கள் உங்கள் கதையை சொன்னால்தான் உங்கள் வாழ்வு முழுமையடையும் என்ற நிலமை வருகுதென்று வையுங்க. அப்ப நீங்க என்ன சொல்லுவீங்க அதுதான் கேள்வி புரியுதா? இப்ப வந்து தமிழ் இலக்கிய வரலாற்றை பார்த்தோமென்றால் என்ன சொல்லியிருக்காங்க… முதல் வந்து இயற்கையை பார்த்து பாடல் எழுதினாங்க. அதற்கு பிறகு நிலத்தை சார்ந்து பாடல் எழுதினாங்க. அதற்கு பிற்பாடு அரசர்களை புகழ்ந்து பாடி பிழைப்புக்கு எழுதினாங்க புலவர்கள். அரசனிடமிருந்து கொடை கிடைக்காது என்றால் அந்த அரசனைப் பற்றி புகழ்ந்து எழுதியிருப்பானா என்ற கேள்வி வருகுது. அது பழைய கதை. ஆனால் இண்டைக்கு இலக்கியம் தொடர்ந்து வந்து கொண்டிருக்குது. இதில் உங்களை எழுதச் சொன்னால் நீங்க என்ன எழுதுவீங்க? நாட்டை விட்டு வந்து புகலிடத்தில் வாழ்ந்த  கதை சொல்லுவீங்களா இல்லை எதை எழுதுவீங்க. சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மனிதன் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் வந்து ஒரு எழுத்தாளர். அவர் எதைப்பற்றி எழுதுறாரென்றால் உணவகத்தில் நடைபெறும் சின்ன சின்ன நிகழ்வுகளுக்கு ஒரு இலக்கியப் பரிமாணம் கொடுத்து எழுதுறார். அது மட்டுமல்ல ஒரு வரலாற்று, அழகியல்  பரிமாணமும் கொடுக்கிறார். அதுதானே இலக்கியம்.
இங்க வந்து தமிழ் எழுத படிக்க தெரிந்த ஒரு பிள்ளை இருக்கு அது  பிரஞ்சு மொழியில் மட்டுமே கல்வி கற்று வளர்ந்து வருகிறது. அந்த பிள்ளை எழுத ஆசைப்படுதென்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரியான பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தை உதாரணம் காட்டி ஒரு சாதாரணமான விசயத்திற்கு எப்படி அழகான பரிமாணங்களை கொடுத்திருக்கின்றார். அதே மாதிரி உங்களுடைய வாழ்க்கையில் நடக்கிற விடயங்களை அழகு படுத்தி சொல்லாலாம் என்பதற்கு இந்த புத்தகம் வந்து நல்ல உதாரணம் என்று கூறலாம்.
எம்.ஆர்.ஸ்ராலின்: இந்தியாவில் வந்து உணவு வகைகள் எந்த வகையில் கட்டமைக்கப்பட்டிருக்குதென்று சொன்னீங்க. சாதிரீதியாக, பொருளாதார ரீதியாக, மதரீதியாக என்று. இந்த மாதிரியான விசயங்கள் சிங்கப்பூரில் உடைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூர் கலாச்சாரத்தில வந்து சீனர்கள், மலாயர்கள், தமிழர்கள் எல்லோரும் கலக்கும்போது அதோட அவர்களுக்கிடையில் மத, மொழி சார்ந்து இருக்கும் உணவுக்கட்டுப்பாட்டு ஒழுங்குகள் எல்லாம் வந்து அங்கு மிக்சாகுது. மல்டி கல்ச்சர் உள்ள சிங்கப்பூர் வாழ்க்கையில மொழியும் இல்லாமல் போகுது. சில வார்த்தைகளுக்கு அவர் குறிப்பு  எழுதியிருக்கிறார். சிலதிற்கு குறிப்பு போடவில்லை. எங்களுக்கு அது புரியவில்லை. இருந்தாலும் நாங்க சேர்த்து வாசித்துக்கொண்டு போறம். ஆனால் அது தமிழ் வார்த்தை இல்லை அவர் தமிழாகவே உணருகின்றார். நாங்களும் இங்கு சில பிரஞ்சு வார்த்தைகளை தமிழ் வார்தைகளாக ஆக்கிவிட்டோம். தமிழ் பேசும் போது பிரஞ்சு வார்த்தைகளையும் இணைத்துக் கொள்வது போல். பிற பிரஞ்சு மொழி தெரியாதவர்களுடன் கதைக்கும்போது யோசிக்காமல் பிரஞ்சு வார்த்தைகளை இணைத்தே பேசுகின்றோம்.  மொழியின் புனிதக் கட்டமைப்புகள் உடைபடுவதும், மொழி மட்டுமல்ல உணவு முறைகளும் மாற்றமடைகின்ற வகைகளை இந்த நூல் பேசுகிறது. பரோட்டவிலேயே எத்தனையோ வகை பரோட்டாக்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார். வியாபாரத்தின் நிமித்தம் பாரம்பரியமான பரோட்டா செய்கை முறையிலிருந்து வெவ்வேறு மாறுதலுக்குள்ளாகிறது.  சீனர்களுக்கு ஏற்றமாதிரியும்,மலாயர்களுக்கு ஏற்றமாதிரியும் பரோட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றது. அதே போல மன உடைவுகளும் ஏற்படுகின்றது பாக்கிஸ்தான் காரன் தமிழ் பெண்னை லவ் பண்ணுவது, சீனாக்கார பெண்ணை தமிழ்பெடியன் சைற் அடிக்கிறது போன்ற மல்டிக் கல்ச்சர் விசயமெல்லாம் நடக்குது. இதனூடாக சிங்கப்பூரின் புதுவிதமான வாழ்க்கை முறையை இந்த படைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கிறது. நான் சிங்கப்பூருக்கு போகாமல் சிங்கபூர் பற்றி அறிந்திருந்தாலும் எப்படி எல்லா இனங்களும் அங்கு வாழ்கிறார்கள். தங்களுக்குள் தாங்கள் விட்டுக்கொடுப்பது, சமரசங்கள் போன்ற விடயங்களையெல்லாம் தனது அனுபவத்தினூடாக சொல்லியிருக்கிறார்.
ஜோய்: என்னொரு விசயம் இதில, வாசிக்கப்பட்ட எல்லோராலும் இந்த நூல் விரும்பப்படுகின்ற காரணம், உணவுப் பழக்க வழக்கங்களைத் தாண்டி புலம் பெயர்ந்த பின்பும் நாங்கள் வாழ்கின்ற சூழல் இருக்கல்லவா, அந்த விசயம் அப்பட்டமாக பதியப்பட்டதாக எமக்கு தெரிவதுதான். சிங்கப்பூரிலும் இப்படியா வாழ்க்கை என்று யோசிக்கவேண்டியதாக இருக்கு. ஏனென்றால் நாங்களும் இங்கு ரெஸ்ரோரண்ட் வேலை செய்யும்போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் தான் இதில பதியப்பட்டிருக்கின்றது. அதனாலதான் இது எங்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.
எம்ஆர்.ஸ்ராலின்: உண்மைதான் கிட்டத்தட்ட ஒரே வாழ்க்கை முறையாகவே பார்க்க் கூடியதாக இருக்கு.
ஜோய்: திருமணங்களைப் பற்றி சொல்லவாறார். உண்மையிலேயே நேரடியாக நாங்க பார்க்கிறோம் எத்தனையோ பேர் வந்து மனைவி பிள்ளைகளை விட்டுட்டு வந்து கஸ்ரப்படுகினம். அவர்களது முடிவு சிலவேளைகளில் இங்கேயே போகலாம். கடசிவரைக்கும் பிள்ளைகள் மனைவியை பார்க்காமல் வாழ்க்கையை இங்கே முடித்துக்கொண்டவர்களையும் எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கு.
எம்.ஆர்.ஸ்ராலின்: புகலிட வாழ்க்கை குறிப்பு பற்றி சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’எனும் நாவலில் சொல்லப்பட்டதிலிருந்து இது என்னுமொரு பரிமாணம். அதேபோன்று புகலிட வாழ்க்கையின் என்னுமொரு பரிமாணத்தை சிங்கப்பூரில் காணக்கூடியவாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அரவிந் அப்பாத்துரை:  தானியங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற தளத்தில் எக்கச்சக்கமான விசயங்கள் இருக்கு என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கு. அது வந்து மனிதனுடைய வாழ்க்கையின் ஆதாரங்களே உணவு என்ற பட்சத்தில அந்த உணவில எல்லாமே இருக்கு. உணவில அரசியல் இருக்கு உண்மைதான். உணவில வரலாறு இருக்கு. உணவில வந்து சமூக வியலுக்கான பல பரிமாணங்கள் இருக்கு என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கு. முதலில குறிப்பிட்ட மாதிரி இந்தியாவில வந்து உணவில சாதி இருக்கு, மதம் இருக்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கு. இப்ப வந்து உணவுச்செயல் முறை என்பது இன்டஸ்ரியல் ஸ்ரேட் அளவிற்கு போய்விட்டது.
இதில வந்து பல தகவல்கள் மிக சரியான தகவல்கள் என்றும் சொல்லமுடியாது. இருந்தாலும் வந்து எனக்கு இந்த புத்தகத்தில பிடிச்சது, நான் கற்றுக்கொண்டது என்னவென்றால்  எப்படி கதை சொல்லலாம் என்பதை. ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டு அந்த இடத்தின் வாழ்க்கை அனுபவத்தை வைத்துக்கொண்டு அழகான முறையில் கதையாக மாற்றலாம் என்பதற்கான உந்துதலை இந்த புத்தகம் எனக்கு தந்திருக்கின்றது. இரண்டாவது வந்து மிக தரமான இலக்கியத் தரத்தில் சேர்க்கப்பட வேண்டிய புத்தகம்.
தமிழில் வந்து கதை சொல்வதை அகம் புறம் என்று பிரித்திருக்கிறார்கள் இல்லையா. அநேகமான தமிழ் இலக்கியங்கள் அகத்தை சார்ந்ததாகவே இருக்கிறது. புலம் பெயர்ந்த இலக்கியம், இலங்கையின் போரட்ட அரசியல் போன்ற வரலறு சார்ந்த புற இலக்கியங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளது.  தமிழ் இலக்கியத்தில 1960 அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பார்த்தீங்கள் என்று சொன்னால். உதாரணத்திற்கு புலமைப்பித்தன் போன்றவர்களைப் பார்த்தால்   அவரது முக்கியமான எழுத்துகள் யாவும் அகம் சார்ந்த படைப்பாகவே இருந்துள்ளது. நா.பிச்சைமூர்த்தியை எடுத்துக் கொண்டாலும் அதே நிலைதான். சமூகத்தின் வரலாறு அகவெளியின் பிரதிபலிப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சமூக வரலாற்றின் புறவெளி சக்திகள் வரலாறாக சொல்லப்படவில்லை.
தில்லைநடேசன்: பிச்சைமூர்த்தியை அப்படி சொல்லலாம் ஆனால் புதுமைப்பித்தனை அப்படி சொல்லமுடியாது.
அசுரா: பிச்சைமூர்த்தி இயல்பாகவே கவிஞன்.
அரவிந் அப்பாத்துரை: புதுமைப்பித்தனின் பதிவுகளில் இந்திய சுதந்திரப்
போராட்டத்தை பற்றிய பதிவகள் உள்ளது நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்திய சுதந்திரப்போராட்டம் இருக்குதில்லையா அந்தபோராட்டத்தில் ஈடுபட்ட சக்திகளின் நேரான கதைகளை  புதுமைப்பித்தனின் கதைகளிலிருந்து நாம்புரிந்து கொள்ளமுடியாது.
தில்லைநடேசன்: அவர் எழுதியதெல்லாம் சிறு கதைகள் தானே அவர் நாவல் எழுதவில்லை.
எம்.ஆர்.ஸ்ராலின்: மலேசியாவிலிருந்து வெளிவந்த உணவு சம்பந்தமான சில புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன். அதன் பெயர்கள் எனக்கு ஞாபகமில்லை.
ரமேஸ்: சமையல் குறிப்புகள் என்ற பெயரில் நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றது.
எம்.ஆர்.ஸ்ராலின்: சிறுகதைகளில் கூட உணவு சம்பந்தமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. சாப்பாடுகளில் எவை நல்லவை, எவை கெட்டவை, கொக்கக்கோலாவில் என்ன தீமைகள் உள்ளது என்று அதுபற்றியே அதிகமாக வராந்த பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும்.
அரவிந் அப்பாத்துரை: தமிழ் இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் சாப்பாடு விசயம் பற்றி காலா காலமாக எழுதப்பட்டு வந்திருக்கின்றது. நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் இவர் இந்த நவீன உலகத்தில எழுதுறார் இல்லையா அதைத்தான் நான் சொல்ல வாறன். இவர் வந்து ‘அயல்பசியும் அம்மாவின் கை மணமும்’என்ற பத்தியல் எழுதியிருக்கிறார் பாருங்க: ‘உளவியலில் திரும்ப திரும்ப செய்கின்ற எந்த ஒரு செயலையும் பழக்கம் என்கிறார்கள் (அரவிந் அப்பாத்துரை:  உளவியில் அல்ல எல்லா இயலிலும் அது பழக்கம் தான்) பழக்கத்தில் நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்பதை விட, விடக்கூடிய பழக்கம், விடமுடியாத பழக்கம் என்று சொல்வதே சரி என்கிறார்கள் சிலர். இதில் விடவிடமுடியாத, காலம் காலமாக தொன்று தொட்டு வரும் பழக்கம் உணவுப் பழக்கம்.தமிழரின் உணவுப் பழக்க வழக்கங்கள் சிறுபாணாற்றுப்படை,மணிமேகலை,சீவகசிந்தாமணி போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன.’ பாத்தீங்களா அப்ப வந்து முதலில் இருந்தே உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து எழுதத் தொடங்கீட்டார்கள். வழிபாட்டுப்பாடல்களில் பார்த்தீங்களென்றால் அதிலும் உணவு பற்றிய பாடல்கள் நிறையவே இருக்கின்றது. இந்த தேவனுக்கு இதைபடைக்க வேண்டும், அந்ததேவனுக்கு அதைப்படைக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கும். இப்படியெல்லாம் இருக்கு ஆனால் தற்போது புகலிடச் சூழலில் இலக்கிய ஆர்வம்கொண்ட எத்தையோ பேர் ரெஸரோரண்ட் வேலை செய்கிறார்கள் அவர்கள் வந்து இந்த மாதிரியான புத்தகங்களை படித்தால் நல்ல இன்ஸ்பிரேசனாக இருக்கும்.
எம்.ஆர்.ஸ்ராலின்: ஆரம்பத்தில் கலைச்செல்வன், கலாமோகன் போன்றவர்கள் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள். பின்பு அரசியல் சார்ந்த விசயங்களுக்குள் எழுத்து போகும்போது அந்தத் தன்மை குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் வந்தவுடன் எழுதியதெல்லாம் இவ்வாறான கதைகள்தான்.
அரவிந் அப்பாத்துரை: இதில முக்கியமான விடயம் என்ன தெரியுமா இலக்கியம் என்றால் என்ன? கலை என்றால் என்ன? இதுதான் என்ர கேள்வி. வந்து தொட்டுவிட்டுப் போறது வந்து கலை கிடையாது. தொட்டுவிட்டு அதிலேயே ஆழமாக திரும்பத் திரும்ப அதையே அழகியலாக எடுத்து இயங்குவதுதான் முழுமையான இலக்கியம் அந்த வகையில் தான் இவர் முக்கியத்துவமாகுறார். அவரது பேசிக்கே அதுதான். ஷாநவாஸ் என்று சொன்னீங்களென்றாலே நினைவுக்குவருது உணவு.
யோகரட்ணம்: புத்தகங்களில் இலக்கியம் மட்டுமல்ல பல்வேறு விசயங்களும் இருக்கு. தனிய சோறையும் கறியையும் சாப்பிடாமல் இப்படியான புத்தகங்களை படித்து பல பல சாப்பாடுகளையாவது செய்து பழகுவது நல்லதுதான்.
அரவிந் அப்பாத்துரை: இது சமையல் குறிப்பாக வரவில்லையே.
‘புத்தனின் பெயரால் ‘ நூல் குறித்த உரையாடல் பதிவு விரைவில்             
நன்றி *தூ *