12/30/2012

| |

இந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வல்லுறவு

.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமது மூன்று பெண் நண்பர்களை பாலியல் தொந்தரவில் இருந்து காக்க முற்பட்ட கீனன் சன்டோல் மற்றும் ரூபென் பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மும்பையில் பல போராட்டங்கள் நடந்தன. இருந்தும் அவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை கூட இன்னும் முடியவில்லை.
இன்னும் குறிப்பாக சிற்றூர்களை – கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் நீதி கிடைப்பது என்பது இன்னும் அரிதான விடயமாக இருக்கும்.
பூர்வ பழங்குடிகள் என்று அரசாங்கத்தால் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த, கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில்
(1993 ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் எவரும் தண்டிக்கப்படவில்லை.
பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான விஜாயாவின் வழக்கை நடத்திய மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் கல்யாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தேவையான பொருளாதார வசதி தம்மிடம் இல்லாததன் காரணமாகவே இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தமுடியவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.