கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, உடனடியாக 20,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் ஏறாவூரிலுள்ள விவசாய அமைச்சரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25.12.2012) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தகவலை அமைச்சர் கூறினார்.
மேற்படி கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஏறாவூர் பிரதேச அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மேலும் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை மாலை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் தலைமையில் திருகோணமலையில் கூடியது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, உடனடியாக 20,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கான மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சரவைக்கு பத்திரமொன்றை நான் தாக்கல் செய்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதலமைச்சர் நிதியிதிலிருந்து, நிதி வழங்கப்பட்டமையை மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
வெள்ளத்தால் 20 ஆயிரம் ரூபாவுக்குக் குறைவான பாதிப்புகளை எதிர்கொண்டோருக்கு அவர்களின் வீடுகளை தற்காலிகமாக புனர்நிர்மாணம் செய்யும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்குவதெனவும், மேலதிக பாதிப்புக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் நிதி உதவிகளை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சுகாதாரத்துறையில் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.