12/09/2012

| |

பரிதியை கொலை* மலிந்ததால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் பாகம் 2

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம்  2
(பூபாளம்  கனடா)
சாத்திரி

இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது  மூன்றாவது மாவீரர் தினத்தினை  இலண்டனில்  திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு  புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு  ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு  கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர்.  அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற கட்சியை பாலசுப்பிரமணியம் என்பவர்  இலண்டனில் சட்டரீதியாக பதிவு செய்திருந்தார் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த மூன்றாவது மாவீரர் நாளை அறிவித்திருந்தனர்.  பாலசுப்பிரமணியம் என்பவர் புலிகளின் வெளிநாட்டு பிரிவில் தென்னாபிரிக்காவிற்கு பொறுப்பாக  இயங்கியவர். 2001 ம் ஆண்டு புலிகளின் அனைத்துலக செயலகம்  வெளிநாட்டு பிரிவில் மாற்றங்கள் ஏற்படுத்தியபொழுது  இவரையும் வன்னிக்கு அழைத்து நந்தவனத்தில் வைத்து (நந்தவனம் என்பது அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவின் அலுவலகம்) இவரது பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.திடீரென எதற்காக நீங்கள் மூன்றாவதாக புதியதொரு மாவீரர் தினத்தை அறிவித்தீர்கள் என்று கேட்டதற்கு கண்ணன் என்பவர் சொன்ன பதில் என்னவென்றால் இதுவரை மாவீரர் தினங்களை நடாத்தியவர்கள் அதனை வியாபாரமாக்கி விட்டார்கள் எனவே நீங்கள்தான் இதனை நடாத்தவேண்டும் என்று தலைவரே தங்களுடன் தொடர்பு கொண்டு சொல்லியிருந்தார் என்றிருக்கிறார்.


தலைவரே நேரிலை கதைத்தாரா என வாயை பிளந்தபடி ஆச்சரியமாக கேட்டவர்களிற்கு  கண்ணன் தொடர்ந்து தலைவர் கதைத்த கதையை சொன்னார். அதாவது  ஆபிரிக்காவின் ஒரு நாட்டின் கடற்கரையோரமாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றது அதில் தான் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கிருந்துதான் சட்டிலைற் தொலைபேசி ஊடாகதன்னோடு கதைத்தாகவும் சொன்னவர் . தான் தலைவரோடு கதைத்ததை உறுதி செய்வதற்காக  இன்று அவர் கோழி சமைத்து உன்றதாக மேலதிக இலவச இணைப்பு தகவலையும் சொல்லியிருக்கிறார். எது எப்பிடியோ இவர்கள் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்தி அதற்கும் மக்கள்  போயிருந்தார்கள்.நூறு பேரளவில் வந்ததாக தகவல் சொல்லியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் இப்படியான பிரிவுகள் மேலும் அதிகரிக்கலாம்.


இனி பரிதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி பார்ப்போம்.இவர்களில் தாஸ் என்பவரை தவிர மற்றையவர்கள் பாரிசில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான பாம்புக் குழு எனப்படும் குழுவை  சேர்ந்தவர்கள். இவர்களின் ஆரம்பம் சுவிஸ் சுறிச் நகரத்தில் இயங்கியவர்கள் பின்னர் சுவிஸ் காவல்த்துறையின் கடுமையான நடவடிக்கைகளால்  அங்கிருந்து தப்பிவந்து பாரிசில் வசிப்பவர்களால் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள். அதே நேரம் கடந்த வருடம் இதேகாலப் பகுதியில் வெண்ணிலா என்னும் குழுவினரால் பரிதி மீது தாக்குதல் நடத்தப் பட்டது தாக்குதல் நடாத்தியவர்களை பிரெஞ்சு காவல்த்துறையினரும் அடையாளம் கண்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்கள். ஆனால் காலில் வெட்டு வாங்கிய பரிதி அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யமுன்வரவில்லை.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி பரிதியின் நண்பர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். அதற்கு பரிதி சொன்ன பதில் என்னவெனில் போலிஸ் கேஸ் என்று போனால் பிறகு அவங்கள் இண்டு பக்கமும் நோண்டுவாங்கள்.ஏன் வெட்டிது என்று நோண்டத் தொடங்கினால் பாதிப்பு எங்களிற்கு தான் அதிகம் அதாலை பேசாமல் விடுவம் என்றதோடு அப்படியே விட்டுவிட்டிருந்தார்.

அதனால் பிரெஞ்சு காவலத்துறையினரும் பரிதி மீது தாக்குதல் நடாத்தியவர்களை சில நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விட்டு விடுதலை செய்து விட்டார்கள்.பிரான்ஸ் நாடு யெர்மன் சுவிஸ் நாடுகளைப் போல வெளிநாட்டு வன்முறை கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது குறைவு காரணம் பிரான்சில் பலநாடுகளையும் சேர்ந்த பல்லின மக்கள் அதிகம் வாழும் நாடு அவர்களிற்குள் இது போன்ற வன்முறை கும்பல்களும் ஏராளம். இவர்களது பொதுவான தொழில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை  போதைப்பொருள் வியாபரம் கப்பம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஆட்கடத்தல் என்பனவாகும்.அவர்கள் தங்களிற்குளேயே அடிபட்டு கொள்வார்கள். இடைக்கிடை கொலைகளும் விழும்.இவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பிரெஞ்சு காவல்த்துறை திரட்டிக்கொண்டே இருப்பார்கள் இந்த கும்பலால் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பிரெஞ்சு மக்களிற்கு ஆபத்து என்று வரும் போதுதான் செயலில் இறங்குவார்கள். மற்றபடி இந்த குழுக்கள் தங்களிற்கள் அடிபட்டாலென்ன சுடுபட்டாலென்ன இதற்காக தங்கள்நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய மாட்டார்கள்.


இதே போலத்தான் தமிழ்குழுக்களிற்கிடையிலான மோதல்களையும் பிரெஞ்சு காவல்த்துறையினர்  பெரியளவில் கணக்கெடுப்பது கிடையாது இவர்களிற்கிடையில் மோதுப்பட்டு யாராவது இறந்தாலும் அதனை  கணக்குத் தீர்த்தல் என்கிற வகைக்குள் அடக்கி கொலையாளி பிடிபட்டாலும்  தண்டனை பெரியளவில் இருக்காது 5 அல்லது 6 வருடங்களில் சிறையை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.இதே போல பரிதி மீது நடந்த தாக்குதலையும் கணக்குத் தீர்த்தல் என்கிற அடிப்படையிலேயே அடக்கியிருக்கிறார்கள்.காரணம் பரிதி என்பவர் எம்மவர்களிற்கும் எமது சில ஊடகங்களிற்கும்தான் தளபதி. கேணல்.மனித நேய செயற்பாட்டாளர். ஆனால் பிரெஞ்சு காவலத்துறைக்கு அவர் ஒரு குற்றவாளி என்பது மட்டுமல்ல இவர் சார்ந்த அமைப்பும் பிரான்சில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.அவர் செய்த குற்றங்களிற்காக மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்றதொரு முன்னைநாள் கைதி என்பதோடு தொடர்ந்தும் காவல்த்துறையின் கண்காணிப்பில் இயங்கும் ஒருவர்.

எனவே ஒரு வன்முறை குழுவை செர்ந்தவரை இன்னொரு வன்முறைக்குழு கணக்குதீர்த்திருக்கின்றது என்பதே பிரெஞ்சுக் காவல்த்துறையின் பார்வை.
ஆனால் இதற்கிடையில் பிரான்சின் முன்னணி பத்திரிகையொன்று இந்தக் கொலை இலங்கை  தூதரகத்தின் பின்னணியில் நடாத்தப் பட்டதென்று ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.அதனை  தொடர்ந்து வரும் காலங்களில் பார்ப்பதற்கு முன்னர். பரிதியை கொலை செய்தவர்கள் என சந்தேகத்தின் பெயரால் கைதாகி இருக்கும் பாம்பு குழுவிரிற்கும் பரிதிக்கும் இருந்த நெருக்கத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

பிரான்சில் இயங்கிய புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பில் இருந்த அனைவருமே ஒவ்வொரு வன் முறைக் கும்பல்களை  தங்களோடு அரவணைத்து வைத்திருந்தனர் என்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். இயக்கத்திற்கு பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகள் அல்லது சாதாரணமானவர்களை இந்த குழுக்களை வைத்தே  மிரட்டுவார்கள். பிரான்சிற்கு நாதன் (பாரிசில் சுட்டுக்கொல்லப் பட்டவர்)பொறுப்பாக இருந்த காலத்தில் முக்காப்புலா என்கிற குழுவை அரவணைத்து வைத்திருந்தார் இவர்களே யெர்மனியில் கேவலார் தேவாலயத்தில் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவாலத்தில் புகுந்து சிலதமிழர்களை வாளால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட இந்தக் குழு யெர்மன் மற்றும் பிரெஞ்சு காவல்த்துறையின் இணைந்த நடவடிக்கையில் முடிவிற்கு வந்திருந்தது.நாதன் கொல்லப் பட்ட பின்னர் பொறுப்பெடுத்த இளங்கோ என்பவர் தானாகவே ஒரு குழுவை தொடங்கினார். புலிகள் அமைப்பில் இருந்து விலகி பிரான்சிற்கு வந்தவர்களை இணைத்து இந்தக்குழுவை தொடங்கினார்.இதற்கு குழந்தை என்பவர் தலைமை தாங்கினார் இந்தக் குழுவில்   சோதி.பரணி.ராகுலன்.பயஸ்.ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்களே  பாரிஸ் லாசப்பல் பகுதியில் பணம் கொடுக்க மறுத்த  V.S. CO  கடை உரிமையளரை தாக்கி கடையை உடைத்தது.  ஈழநாடு  பத்திரிகையை நடாத்திவரும் பாலச்சந்திரன் என்பவர்  புலிகள் பணம் என்றால் பெண்களையும் வைத்து வியாபாரம் செய்வார்கள் என்று  சொன்னதற்காக  அவரது மண்டையை உடைத்தது. குகன் (ஈரோஸ்) தாஸ்(ரெலோ) தவம் ஆகியோரை கடத்திக்கொண்டு போய் வெட்டியது  என்பன .

பிரான்சில் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட இவர்களது செயற்பாடுகளும் முக்கியமானவை அந்தத் தடையோடு இவர்களது செயற்பாடுகளும் முடங்கிப் போக புதிதாக மீண்டும் பொறுப்பெடுத்த பரிதி இந்த பாம்புக்குழுவோடு நெருக்கமாகிக் கொண்டார்.
ஆரம்ப காலத்திலேயே  பிரான்சிற்கு பொறுப்பாக நாதன் இருந்த காலத்தில் புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப் பட்ட லூன் என்கிற வியாபார நிலையத்தையும் அவர்களது அலுவலகத்தையும் புலிகளின் புலனாய்வு பிரிவிலும் வெளிநாட்டு பிரிவிலும் இயங்கிய சிலரே அடித்து நொருக்கி அனைத்துலகத்தை சேர்ந்தவர்களிற்கு அடிபோட்ட சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடந்திருந்தது.அதனையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம். பிரான்சில் எண்பதுகளின் இறுதியில் புலிகள் அமைப்பிற்கு வேலை செய்தவர்களில் முக்கியமானவர்கள்  நாதன் . ரங்கன்(தர்சன் இவர்தான் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி வானொயை  இயக்குபவர்) மற்றவர் மாணிக்ஸ் என்பவர்.



                                                                         (நாதன்) 

இயக்கத்திற்கு சேகரித்த நிதியில் நாதன் கையாடல் செய்து விட அது பற்றி கணக்கு கேட்ட ரங்கனை  வன்முறை குழு ஒன்றிக்கு பணத்தை கொடுத்து நாதன் போடச்சொல்லி விட்டார்.  அதேபோல ரங்கனை அந்தக் குழு கத்தியால் குத்திவிட  ரங்கன்   கோமா நிலைக்கு சென்று உயிர் தப்பிவிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இயக்க நடவடிக்கைளில் இருந்தும் ஒதுங்கிகொண்டு விட்டிருந்தார். பின்னர் மாணிக்சும் ஒதுங்கிவிட நாதனே பொறுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில்  1995 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்  பாரிஸ் லாசப்பல் பகுதியில் இருந்த ஒரு மதுபானச்சாலையில் ரங்கனின் ஒன்று விட்ட சகோதரர் குமார்(தற்சமயம் கனடா) என்பவருடன் நானும் வேறு சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம்  குமாரை எனக்கு  ஊரிலேயோ  தெரியும்  குப்பிளான் கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் புலிகள் அமைப்பின்  ஆதரவாளர்கள் என்பதால் எனக்கு அவர் பழக்கமாகியிருந்தார்.சிலர் பியர் குடிக்க சிலர் கோப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாதன்  சிலரோடு அங்கு வந்து கோப்பி குடிக்கத் தொடங்க ஏற்கனவே பியர் குடித்த போதையில் இருந்த குமார் நாதனை பார்த்து முறைக்க  நாதன் குமாரிடம்  என்ன  முறைக்கிறாய் என்று தூசணவார்த்தைகளையும் கலந்து கேட்க  கோபமடைந்த குமார் எழுந்து போய் நாதனின் கண்ணாடியை  பறித்து காலில் போட்டு மிதிக்கிறார்.அதற்கிடையில் இருவரையும் இருபக்கத்தினரும்  விலக்கு  பிடித்துவிட நாதன் அங்கிருந்து வெளியேறி சுமார் இருநூறு மீற்றர் தூரத்திலிருந்த அவர்களது வியாபார நிலையமான லூன் கடை வாசலில் போய் நின்று தொலைபேசி மூலம் முக்கப்புலா குழுவினரை அழைக்க அவர்களும் இரண்டு கார்களில் வந்து இறங்கினார்கள்.

அதே நேரம் அன்றைய அனைத்துலகப் பொறுப்புக்களில் இருந்த மனோவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.நிலைமை மோசமாகப் போவதை உணர்ந்த  நாங்கள்  நான் .ஈசன். சிவா(டிஸ்னி உணவக உரிமையாளரின் மகன் எனது நல்லதொரு நண்பன்)ஆகியோர்  நாதனிடம் சென்று ஏதோ கோபத்திலை இப்பிடி நடந்து விட்டது பிரச்சனையை பெரிதாக்கவேண்டாம் என கேட்டதும். குமார் வந்து தன்னிடம் மன்னிப்பு கோரினால்  விட்டு விடுவதாக சொல்லியிருந்தார். திரும்ப வந்த நாங்கள் குமாரை பேசிவிட்டு நடந்தது நடந்து விட்டது போய் மன்னிப்பு கேட்டு விட்டு வா என்று அனுப்பிவிட்டு  அந்த மதுபானச்சாலைக்குள் இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தோம். ஆனால் குமாரை கண்டதும் நாதன் கடைக்கு உள்ளே போய்விட வேறு பலர் கடை வாசலிற்கு வந்தார்கள். குமாரிற்கு உள்ளே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் என நினைத்து  குமாரிற்கு பின்னால் போய் கவனிக்கச் சொல்லி குகனை நான் அனுப்பிவிட்டிருந்தேன்.

குமார் கடை வாசலிற்கு போனதும் அங்கு நின்றிருந்த ஒருவன் கைத் துப்பாக்கியை  எடுத்து குமாரின் கழுத்தில் சுட்டுவிடுகிறான்.குமார்  கழுத்தைப் பொத்திப் பிடித்தபடி கீழே விழ அது மழைக்காலம் என்கிற படியால் கையில் பெரியதொரு குடையோடு போயிருந்த  குகன் உடனே பாய்ந்து சுட்டவனை குடையால் தாக்கி பிஸ்ரலை பறித்து விடுகிறான். அதே நேரம் எதிரே பூக்கடை வைத்திருந்த பிரெஞ்சு பெண்மணி  போலிஸ் என கத்தியபடியே போலிசிற்கு போனடித்துவிட அங்கிருந்தவர்கள் எல்லாமே  நாதன் உட்பட ஓடிவிடுகிறார்கள். நாங்கள் உடனேயே குமார் அருகில் சென்று பார்த்தோம் குண்டு கழுத்தின் கொஞ்சம் கீழாக சதைப் பகுதியை மட்டுமே துளைத்து சென்றிருந்தது ஆபத்து இல்லை என்பது புரிந்தது அதற்கிடையில் அங்கு வந்த காவல்த்துறையினர் எங்களை விசாரிக்க  தீயணைப்பு படையினர் குமாரை வைத்திய சாலைக்கு எடுத்து சென்று விட்டிருந்தனர். சுட்டவர் யாரென்று எமக்கு தெரியாதெனவும் சத்தம் கேட்டே அந்த இடத்திற்கு வந்ததாக நாம் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டிருந்தோம்.காவலத்துறையும் அங்கிருந் போய்விட லூன் கடைக்குள் போய் பார்த்தோம் அங்கு  முகுந்தனும் பரமேஸ் மட்டுமே நின்றிருந்தார்கள். எதற்காக மன்னிப்பு கேட்க வந்தவனை சுட்டனீ்ங்கள் என்று கேட்டதும் தாங்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தங்களிற்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.அவர்களை கடையை விட்டு வெளியேற்றிவிட்டு கடை உடைக்கப்பட்டு தீ வைக்கப் பட்டது.  அதையடுத்து நேராக  அனைத்துலகச் செயலகத்தின் அலுவலகத்திற்கு போயிருந்தோம் அங்கு மகேஸ் திரு ஆகியோர் நின்றிருந்தனர் அலுவலகத்திலும் நாதனை காணாததால் அலுவலகத்தையும் அடித்து நொருக்கிவிட்டு  அந்தக் குழு அங்கிருந்து வெளியேறி விட்டது.


இங்கு நடந்தது என்னவெனில் அனைத்துலகசெயலகத்தினை தாக்கிய அனைவருமே புலிகள் அமைப்பின் புலனாய்வு மற்றும் சர்வதேச கட்டமைப்பில் பணி புணிந்தவர்கள். இவர்களிற்கும் அனைத்துலக செயலகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது  அனைத்துலகத்தோடு அவர்கள் எவ்வித தொடர்புகளையும் வைத்திருப்பதும் கிடையாது. அவர்கள் தனியாக தங்களது லேலைகளை பார்ப்பதோடு வெளிநாடுகளில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன  தில்லு முள்ளு  நிதி மோசடிக செய்கிறார்கள் என்பதனையும் கண்காணித்து புலனாய்வுத் துறை  தலைமைக்கு தெரிவித்தபடி இருப்பார்கள். இந்தத்தாக்குதல் நடந்ததுமே புலனாய்வு பிரிவில் இயங்கிய ஈசன்(வசாவிளான்) என்பவர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி விபரமாக எழுதி அனைத்துலகத்தின் கடை மற்றும் அலுவலகத்தை தாங்கியதற்கான காரணங்களையும் எழுதி புலனாய்வு தலைமைக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். அதே நேரம் தங்கள் அலுவலகத்தை இலங்கையரசின் கைக்கூலிகளும் இலங்கை புலனாய்வு பிரிவும் சேர்ந்து தாக்கிவிட்டார்கள் என்று இங்கு ஊடகங்களில் பிரச்சாரம் செய்த அதே வேளை  அதே பொருள்பட  ஏழு பக்க அறிக்கை ஒன்றும்  அனைத்துலகத்தால் தயாரிக்கப்பட்டு  இயக்கத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். பின்னர் அதே ஆண்டு சில வாரங்களின் பின்னர் புலனாய்வு பிரிவின் சக்தி(தற்சமயம் கனடா) தாய்லாந்தில் என்னை சந்தித்தபொழுது  அனைத்துலகம் அனுப்பியிருந்த ஓழு பக்க அறிக்கையின் பிரதியை எனது கையில் தந்து படித்துப் பார் என சொல்லி சிரித்தான்.

பின்னர் சக்தி ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில்  தாய்லாந்து  பர்மா எல்லையில் வைத்து  தாய்லாந்து இராணுவ அதிகாரி ஒருவரோது கைது செய்யப் பட்டு  ஜந்து வருடங்கள் தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி அனைவரும் அறிந்ததே.இதை ஏன் இங்கு எழுதவேண்டி வந்தது என்றால் அனைத்துலகச் செயலகம் தங்களிற்குள் மாறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவரை மற்றவர்  அவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டுவது வழமையாக நடப்பது ஒன்றாகி விட்டது.
இப்படி அனைத்துலகத்தின் பொறுப்புக்களில் இருந்த ஒவ்வொருவருமே ஒரு வன்முறை  குழுவை தங்கள் தேவைகளிற்காக பாவிப்பதும் வழைமையானதான ஒன்றே  அதே வழியில் தான் பரிதியும் பாம்பக்குழுவை  தனது தெவைகளிற்காக பாவித்து வந்தார்.அவரது கொலை பற்றிய விசாரணைகள் போய்க்கொண்டு இருக்கும் இதே நேரம் கடந்த வாரத்திலிருந்து  அனைத்துலகச் செயலகத்தினரால்  மீண்டும் இணையும் புலிகள் அமைப்பு என்கிற  தலைப்பிட்டு ஒரு காணொளியொன்று  இணையத்தினூடக பரவ விடப் பட்டுள்ளது.அதில் புலிகள் அமைப்பு மீளவும் இணைகின்றார்களா???அந்த காணொளியில் இருப்பவர்கள் யார்??அவர்கள் சொல்ல வருகின்ற சேதி என்ன என்பதையும்.கடைசியாக  பரிதிக்கும்  தலைமைச் செயலகத்தை சேர்ந்த தமிழரசனிற்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பதனையும் பார்ப்போம்.
தொடரும்......