13ஆவது திருத்தத்தை ஆதரித்த 31 பேரும் பிரிவினைவாத சக்திகளின் நிழல்கள் என ஜாதிக ஹெல உறுமயவும், துரோகிகள் என ஜே.வி.பியும் தெரிவித்துள்ளமை அவர்களின் அரசியல் அறியாமையை காட்டுகிறது. மாறாக 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு எதிராக நான் உட்பட கையெழுத்திட்ட 31 பேரும் தேசத்தை பிரிவினையிலிருந்து காக்கும் நாட்டை நேசிப்பவர்களாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தைவிட அதிகமான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரச பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் 13ஆவது திருத்தத்தை ஒழித்து நாட்டை பிரிவினைவாதத்திற்கு அழைத்துச் செல்லப்பார்க்கும் தேசத் துரோகிகளாகும். தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் ஜே.வி.பியும் இந்த துரோக பட்டியலில் உள்ளடங்குவார்கள்.
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை சுதந்திரத்திற்குப் பின் சிங்கள தலைவர்கள் வழங்காததினாலேயே கடந்த 30 வருட காலம் யுத்தத்தினால் சிங்கள மக்களும் பாரிய துன்பத்திற்கு உள்ளானார்கள் என்பதை இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களுக்கு புரியவில்லையா? குறைந்தபட்ச அதிகார பகிர்வையே இல்லாதொழித்து மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவித்து தமது சிங்கள மக்களையும் நெருப்பினில் தள்ளி அதன் மூலம் இனவாத வாக்குகளைப் பெற்று குளிர்காய முயலும் இவர்களை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள இனவாதம் பேசியதனாலேயே அரசியலில் ஜே.வி.பி இன்று படுதோல்வியடைந்து பலமிழந்து நிற்கின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கக் கூடாது என்ற கடிதத்தில் கைச்சாத்திட்டவர்கள் 31பேர் மட்டுமல்ல. இன்னும் பல சிறிலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட தயாராக இருக்கின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்