இதேவேளை, ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் 13-ம் திருத்தத்தை நீக்கக்கூடாது என்று கோருகின்ற ஆவணத்தில் கையொப்பமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எவரும் அவ்வாறான தகவலை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யவில்லை.
விமல் வீரவங்ச தரப்புடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை நீக்கக்கூடாது என்பதே தமது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி விமல் வீரவங்ஸ தரப்பினருடன் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
13-ம் திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு தொடர்ந்தும் அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை விமல் வீரவங்ஸ தரப்பினருக்கு தாம் விளக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்குள் இதுதொடர்பில் ஏற்பட்டுள்ள வாதப்பிரதிவாதங்கள் காரணமாக, 13-ம் திருத்தம் நீக்கப்பட்டுவிடும் என்று எவரும் அஞ்சத்தேவையில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.