சவூதி அரேபியா வின் புனித மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத் தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து இன்று (புதன்கிழமை) நாடு திரும்பும் மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படவுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்வில் புத்த சாசன மற்றும் சமயவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலான, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள உயரதிகாரிகள், மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் உஸ்தாத்மார்களான மெளலவி அல்ஹாபில் ரியால், மெளலவி அல்ஹாபில் மசூத் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலை வந்தடையும் மாணவனை, கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்லூரி அதிபர் உஸ்தாத் மெளலவி ஏ.டபிள்யூ.எம். ரியால் பாரி தலைமையில் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வில் கலீபதுஷ் ஷாதுலி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.