11/28/2012

| |

கறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணாம்சம் மாசு படுத்தப்படும் :

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் !  
  அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா அவர்கள் வரவுசெலவு திட்ட உரையின் போது, தமிழ் தேசிய கூட்டமைபினரின் பொய்த்தனத்தை  சபையிலே அம்பலப்படுத்தினார். அவர் தனது உரையில், “தமிழ் தேசிய கூட்டமைபினர்  தமிழ் பத்திரிகைகளில் பிரசுரமாகுவதற்காகவே இங்கு உரையாற்றுகின்றனர். அவர்கள் அக்கிராசனத்தை நோக்கி உயையாற்றினாலும் அவர்களின் முழுக்கவனமும் பார்வையாளர் கூடத்திலுள்ள தமிழ் ஊடகங்களியே நோக்கி இருப்பதுடன் தமது தப்பான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்வதையே அவர்கள் மையப்படுத்திக்கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகம் பூராகவும் பொய் உரைப்பது போல் இச்சபையிலும் பொய் பேசுகின்றனர். அண்மையில் திரு சுமந்திரன் அவர்கள் உரையாற்றும்போது இரு குற்றவாளிகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரினால் குறிப்பிடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் சப்ரா  பினான்ஸ்   என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்த நிறுவனத்தின் மோசடி செயற்பாட்டால் தமது வாழ் நாள் சேமிப்புக்களை வைப்பிலிட்ட அநேக மக்கள் இறுதியாக தற்கொலை செய்து கொண்டனர். பெருமளவு அப்பாவி மக்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்த இவர் ஒரு கொலையாளியாக கணிக்கபடவேண்டியவர். இவர் இன்று மனித உரிமைகளின் இரட்சகரை போல இந்த சபையில் பேசுகின்றார். இவ்வாறு மோசடி செய்த பணத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் இவர்கள் ஆரம்பித்த தினசரிப் பத்திரிகை இன்றும் ஊத்தயன் வேலையை செய்துகொண்டிருக்கிறது. இப்பத்திரிகை தமிழ்மக்களின் சாபக்கேடாகும். தமது சொந்த தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் ,தங்கத்துரை, பத்மநாபா, ஸ்ரீசபாரத்தினம் மற்றும் ஏனையோர் புலிகளினால்  கொலைசெய்யப்பட்டபோது கூட அவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு தைரியம் இருக்குமானால் புலிகளே தமது தலைவர்களை கொலைசெய்தார்கள் என்று எழுந்து நின்று கூறட்டும்.கௌரவ சுமந்திரன் அவர்களால் குறித்துரைக்கபட்ட மற்றைய குற்றவாளி எனது ஊகத்தின்படி ,தற்போதைய மனித உரிமைகளின் பாதுகாவலனும் முன்னாள் மண்டயன்குழுவின் தலைவருமாக இருந்த நபராக இருக்க வேண்டும் .
2009  ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரனை பாதுகாப்பதற்காக அப்பாவி பொதுமக்களை மனித  கேடயமாக பாவிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர்  இன்னுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  ஆவர் .அவர் தனது  தலைவரை  பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களை முள்ளிவாய்க்கால் வரை வலுக்கட்டாயமாக நகரச்செய்து  ஈற்றில் அவர்களை பலிகொடுத்தவர் .ஆனால் அவர் தனது குடும்பத்தினரை செஞ்சிலுவை சங்க வாகனத்தில் மூலம் நேரகாலத்தில் வன்னி பிரதேசத்தை விட்டு வெளியேற்றி விட்டார் .அதன் பின்பு அவரும் செஞ்சிலுவை சங்க வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார் .அவ்வாறு இரகசியமாக தப்பி செல்லும்போது பெருமளவான களவெடுத்த பணத்தை எடுத்து சென்றது மட்டுமல்லாமல் அப்பணத்தை மீண்டும் தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் ஊடகப்பிரச்சாரத்துக்காக செலவழித்து வருகிறார். அவர்கள் மற்றவர்களை கஷ்டத்துக்குள்ளாக்கி தாம் வாழ பழகிக்கொண்டவர்கள் “ என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அவர்கள் இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கட்டுரை ஒன்று வரைந்திருந்தார் .அக்கட்டுரையில்,” சமாதானப்பிரியர் SJV செல்வநாயகம் அவர்களின் தமிழரசுக்கட்சி ஆனது புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூத்த பங்ககாளியாகவும், தமிழரசுக்கட்சியை சேர்ந்த சம்மந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமை தாங்குகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியிலேயே தேர்தலில் போட்டி இட்டார்கள் ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஒன்றாகும்.
ஏனைய பங்காளிக்கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டுமென கோருகின்றனர். ஆனால் தமிழரசுக்கட்சியினர் அதை எதிர்க்கின்றனர். இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரிய பிணக்கை உருவாக்கியுள்ளது. ஏனைய பங்காளிக்கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை கணிசமாக பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அடிமட்டத்தில் தமிழரசுக்கட்சி பலமாகவுள்ளது .தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தக்க காரணத்துடன் சம்மந்தன் பதிவு செய்ய மறுத்து வருகின்றார். டக்லஸ் தேவானந்தாவின் பேச்சு சம்மந்தனின் விருப்பமின்மைக்கான காரணத்தை கோடிட்டு காட்டுகின்றது. டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினகள் மூவரை விமர்சித்திருந்தார். சரியாக கூறுவதாயின் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்திற்கும் இவர்களது செயற்பாட்டிட்கும் சம்மந்தமில்லை. புலிகளின் காலத்தில் இவர்களது கறை படிந்த செயற்பாடுகளால்  இவர்களை இணைத்துக்கொள்வதன்மூலம் தமிழரசுக்கட்சியின்  தனித்துவமான குணாம்சம் மாசுபடுத்தப்படும் என தமிழரசுக்கட்சியின்  எண்ணுகிறார்கள்.
டக்ளஸ்  தேவானந்தா குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினரின்  (சரவணபவான் ஆக இருக்கலாம் ) சப்ரா முதலீட்டு நிறுவனம் எத்தனையோ பேர்களது சேமிப்புக்களை சுருட்டியதுடன் இதனால் பலர் தற்கொலை செய்தும் கொண்டனர். இப்பணத்திலேயே உதயன் பத்திரிக்கை ஸ்தாபிக்கப்பட்டது .உதயன் பத்திரிகையானது. ஊடக ஒழுக்க ரீதியில் கீழ்த்தரமான தரத்தையுடைய பத்திரிகை ஆகும் .அரசாங்கமானது ஊடகங்களை கட்டுப்படுத்தும் நிலையிலே  உதயன் பத்திரிகையானது பலமுள்ள மாற்று குரலாயுள்ளது .ஆனால் அது தனது எதிரிகளை அழிக்கக்கூடியது .அதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரவணபவானுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. டக்ளஸ்  குறிப்பிடும் மற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆக இருக்கலாம். இவர் ஒரு காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின்  கொலைகளிற்கு பொறுப்பாக இருந்த மண்டையன் குழுவிற்கு தலைமை தாங்கியவர். இவர் இப்போ மனித உரிமை  செயற்பாட்டாளர் என்கிறார் டக்ளஸ்  தேவானந்தா. டக்ளஸ்  தேவானந்தா குறிப்பிடும் நான்காவது பாராளுமன்ற உறுப்பினர் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதற்கு 2009 ஆம் ஆண்டு ஆட்களை சேர்த்து கொடுத்தவர். ஆனால் இவர் கொள்ளையடித்த பணத்துடன் செஞ்சிலுவை சங்க வாகனத்தில் தப்பி சென்றதுடன் அப்பணத்தை தனது சொந்த ஊடக தேவைகளிற்கு பயன்படுத்துகின்றார் அவர் TamilWin.com  ஸ்ரீதரனையே குறிப்பிடுகிறார் என்று நான் யூகிக்கின்றேன்.