அமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிக அதிகமான பிரச்சார செலவுகளுடன் நடக்கின்ற அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு நடந்துவருகிறது.
மாதக்கணக்கில் பிரச்சாரங்கள் நடந்திருந்த நிலையில், இருவேட்பாளர்களுக்கும் இடையே ஆதரவில் சற்றுதான் வித்தியாசம் என்று கருத்துக் கணிப்புகள் காட்ட போட்டி மிகக் கடுமையாகவுள்ளது.குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி, பெரும்பாலும் இதற்கு முன்பு இல்லாத ஒரு நடைமுறையாக முக்கிய மாகாணங்களான ஒஹையோமற்றும் பென்சில்வேனியாவில் வாக்காளர்கள் மத்தியில் தோன்றினார்.
அதிபர் ஒபாமா இயோவா மாகாணத்தில் நேற்று திங்களன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தோடு தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பது போன்ற போர்க்கள மாகாணங்கள் அனைத்திலும் ஒபாமாவே சற்று முன்னிலையில் இருப்பதாக கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
அதேநேரம் ரொம்னிக்கு வாக்களிக்கக்கூடியவர்கள்தான் அதிக அளவில் திரண்டு வாக்குச் சாவடிக்கு வருவார்கள் என்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புகள் கோடிகாட்டுகின்றன.
அமெரிக்கா மூன்று வெவ்வேறு கால வட்டகைகளில் இருப்பதால், முதலில் விடியும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் முதலில் வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை ஏழு மணிக்கே வாஷிங்டன் டி.சி மற்றும் அதன் அண்டை மாநிலமான வர்ஜீனியாவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்களர்களை உற்சாகப்படுத்தி வாக்களிக்க வைக்க இரு பிரதான கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மெட்ரோ ரெயில் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வாக்களிப்பது பற்றி நினைவூட்டுவதைக் கேட்க முடிந்தது.
இது தவிர நாடெங்கிலும் வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கி நடந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
நியூ ஹாம்ப்ஷைரில் உள்ள டிக்ஸ்வில் நாட்ச் என்ற ஊரில் வாக்குப் பதிவு முதலாக முடிந்தது. வெறும் பத்து வாக்காளர்களை மட்டுமே கொண்ட இந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையும் முடிந்துவிட்டது. இரண்டு வேட்பாளர்களுக்கும் இங்கே சமமான வாக்குகள் கிடைத்துள்ளன.