11/04/2012

| |

இந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சிங் ஆட்சிவே.ஆனைமுத்து-



மக்களுக்கு எதிரான திட்டங்களை 1975இல் மடமட வென அமல்படுத்திய இந்திராகாந்தி - வெகுமக்களின் தலைவர்களாக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெ.பி.கிருபாளனி, மற்றும் லோகியா சோசலிஸ்டுத் தலைவர் களால் 1977 தேர்தலில் அடியோடு தோற்கடிக்கப்பட்டார்.
1977 தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் - சரண்சிங் கூட்டணி ஆட்சி, 1979இல் உடைந்தது; 1980இல் கலைந்தது.
1980 தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும் அக்கிரமமான முறையைப் பின்பற்றித் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக வந்த இந்திராகாந்தி ஆட்சி பஞ்சாபில் அகாலிதளத்தை ஒழிப்பதற்காகச் செய்த ஏற்பாடு தனக்கு எதிராகப் போனவுடன், காலிஸ்தான் போராட்டத்தை ஒழிப்பது என்கிற பேரால் அமிர்தசரசில் பொற்கோயி லுக்குள் படைகளை ஏவி ஆயிரக்கணக்கான சீக்கியர்களைச் சுட்டுக்கொன்றது. பழி தீர்ப்பதில் வீரம் மிக்கவர்கள் சீக்கியர்கள். இலண்டனில் வெள்ளையனான டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கின் வழி வந்த சீக்கியர்களான இந்திராகாந்தியின் மெய்க்காப் பாளர்கள் இருவரே பட்டப் பகலில் இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றனர்.
இந்திராகாந்தியின் மறைவையடுத்து, பிரதமராக வர நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த வங்கப் பார்ப்பனர் பிராணப் முகர்ஜி, இந்திராகாந்தியின் மகனான இராஜிவ் காந்திக்கு இடம் கொடுத்துப் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. “தூய்மையான திருவாளர்” (Mr.Clean) என்கிற பெயரோடு 31.10.1984இல் இராஜிவ் காந்தி பிரதமராக ஆனார். அவருடைய ஒப்புதலோடு காங்கிரசுக்காலிகள் 3 ஆயிரம் சீக்கியர்களைப் பகலிலும் இரவிலும் சுட்டுக்கொன்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு இன்று வரை கூட ஈடுசெய்யப்படவில்லை.
ஜெயவர்த்தனாவின் பேரன் வயதுள்ள இராஜிவ் காந்தி, அவர் விரித்த வலையில் எளிதாகவே கண்ணை மூடிக்கொண்டு விழுந்து, 20 ஆயிரம் பேர் கொண்ட இந்தியப் படையையும், ஆயுதங்களையும் விமானங்களையும் 1987இல் இலங்கைக்கு அனுப்பி, தமிழீழ விடுதலைப்புலிகளைத் தேடித் தேடிக் கொல்லச் செய்தார்; தமிழ்ப் பெண்களை நாசப்படுத்தச் செய்தார். இலங்கைக்கு விருந்தினராகச் சென்ற இந்தியப் பிரதமர் இராஜிவ்காந்தி ஒரு சிங்களப் படைவீரனின் துப்பாக்கிக் கட்டையால் அடிக்கப்பட்டதையும் மறந்து, தமிழீழத் தமிழர்களுக்கு இரண்டாண்டு காலம் இன்னலை விளைவித்தார். இந்திய அமைதிப்படை வீரர்களால் பாதிப்புக்குள்ளான வீராங்கனை தாணு தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சிக்காரர்களுடன் கூடவே வந்து தங்கி, இராஜிவ்காந்தி மீது குண்டு போட்டு இலாவகமாகவே அழித்தார். தேர்தல் பரப்புரை மேடையில் ஏறாமலேயே இராஜிவ்காந்தி நொறுங்கிப் போனார்.
தூய்மையானவர் என்று சொல்லப்பட்ட இராஜிவ்காந்தி போபர்ஸ் பீரங்கிக் கொள் முதலில் தன் அன்பு மனைவியின் உறவினரான இத்தாலியக் குட்ரோசியின் தரகுக் கூலியில் தானும் பங்கு பெற்றார். தூய்மையானவர் என்பது போய் ஊழல் பேர்வழி இராஜிவ்காந்தி என்பது அப்போதே நிலைத்துவிட்டது. அது இன்றளவும் மூடி மறைக்கப் படுகிறது.
போபாலில் நச்சுவாயு வெளியாகி 5 ஆயிரம் பேர் மாண்டனர்; 20 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாயினர். அந்தக் குழுமத்தின் தலைவன் ஆண்டர்சனை அர்ஜூன் சிங்குடன் சேர்ந்து இராஜிவ் காந்தி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். போபால் விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்றளவும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. ஆனால் இராஜிவ் காந்தியின் அன்பு மனைவியான சோனியா காந்தி, அவருடைய மனைவி என்கிற ஒரே தகுதியின் காரணமாக இந்தியாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரசுக்குத் தன்னேரில்லாத தலைவியாக விளங்குகிறார்.
இராஜிவ் மறைவை அடுத்து 1991 தேர்தலில் பிரத மராக வந்த நரசிம்மராவ் ஊறுகாய்த் தரகு ஊழல், அர்செத்மேத்தா பங்குச் சந்தை ஊழல்களுக்குப் பெயர் போனவராக விளங்கினார். அத்துடன் உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்கிற வெகுமக்களுக்கு எதிரான முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு ஏற்ற ஆள் என்று அடை யாளம் கண்டுதான் காலம் முழுதும் அயல்நாடுகளிலேயே சம்பள ஆளாக இருந்த மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக அமர்த்திக் கொண்டார். இளமைக் காலந் தொட்டே வணிகக் குழுமங்களுக்கு வழக்குரைஞராக இருந்த ப. சிதம்பரத்தைத் துணை நிதி அமைச்சராக அமர்த்திக் கொண்டார்.
இந்தக் கொள்கைகளுக்கு முதலாவதாகப் பலி யானவை : மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்; மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுப்பதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்குக் குடிநீர் கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடுகூட, வணிகத்திலும் தொழிலி லும் வங்கிகள் அமைப்பிலும் உள்நாட்டு முதலாளி களையும் அந்நிய நாட்டு முதலாளிகளையும் உலகப் பெருங் குழும அந்நிய முதலாளிகளையும் கும்பிட்டு வரவேற்று ஒப்படைக்க வேண்டும் என்கிற ஏகாதி பத்தியப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இவற்றால் இன்று இந்தியா சீரழிகிறது. இந்தியாவின் இயற்கை வளம் பாழடிக்கப்படுகிறது. மனிதனால் உற்பத்தி செய்யப்படாத தண்ணீர் விற் பனைப் பண்டமாக மாற்றப்படுகிறது. எந்தப் பெரிய அறிவியல் வளர்ச்சியாலும் உண்டாக்கப்படாத காற்று மாசுபடுத்தப்படுகிறது. இப்படி இந்தியா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி நாம் கூறுவது புரியாத்தனத்தினாலோ காழ்ப்புணர்ச்சியினாலோ கூறப்படுவது அல்ல.
முதலாளித்துவப் பொருளாதாரம் கொடிகட்டிப் பறக்கிற பல வளர்ந்த நாடுகளிலும் - வளரும் நாடுகளிலும் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வி எல்லோருக்கும் இலவசமாகத் தரப்படுகிறது; அவரவர் தாய்மொழியில் கல்வி தரப்படுகிறது. அந்தந்த நாட்டில் உள்ள அகதி களுக்கும் இலவசமாகத் தரப்படுகிறது. அதேபோல் ஏழை, பணக்காரர், அந்நிய நாட்டிலிருந்து குடியேறியவர் என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாக் குடிமக் களுக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படிப் பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மூன்றாவது அய்ந் தாவது திட்டத்திற்குப் பிறகு படிப்படியாக இந்தியாவில் குறைக்கப்பட்டே வந்தன.
காட்டாக, 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் மக்களின் உடல்நலக் காப்புக்கென மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இந்தியா 1.2 விழுக்காடு மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. இதற்காக அமர்த்தப்பட்ட டாக்டர் ஸ்ரீ நாத் ரெட்டி தலைமையில் அமைந்த குழு 2.5 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தது. 12ஆவது திட்டக் குழுவின் 2012 சூலை முடிவுப்படி, 1.58 விழுக்காடு பொதுச் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று திட்டம் தந்தது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத் தில், கூட்டணியின் பொதுக் குறைந்தபட்ச வேலைத் திட்டப்படி 2.3 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும்-இதில் 60 விழுக்காட்டுப் பங்கை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றும் திட்டமிட்டது. ஆனால் உலக சுகாதார நிறு வனமோ ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5 விழுக்காடு பொதுச் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இன்றைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருக்கிற மான்டெக் அலுவாலியா மக்கள் நலம் கருதிய திட்டங்கள் எல்லாவற்றையும் அடியோடு கைவிட வேண்டும் என்று அடித்துச் சொல்லிக் கொண்டு அவருடைய அயல்நாட்டுப் பயணத்துக்கும் அவருடைய கழிவறையைச் சீர்படுத்துவதற்கும் பல கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு எப்போதும் அமைச்சர் ஆனவர் அல்ல. அவருடைய இருப்பிட முகவரி எங்கோ அசாமில் இருக்கிறது. அவர் எந்த மக்களமைப்பிலும் எப்போதும் செயல்பட்டவர் அல்ல. அவருடைய கேம்பிரிட்ஜ் கல்வி யும், தனிமனித நாணயமும் முதலாளித்துவப் பண்பாட் டில் தோய்ந்து அழுகிப் போனவை; முதலாளித்து வத்துக்குப் பண்ணை அடிக்க ஏற்றவை. அழுகிப் போன நெஞ்சம் உள்ள அவர் ஓர் ஊழல் அரசுக்கு - 2-ஜி ஊழல் - நிலக்கரி ஊழல் - போன்ற இயற்கை வளங் களைக் கொள்ளையடிக்கும் ஓர் அரசுக்குத் தலைமை தாங்கும் அவர் கெட்டிக்காரர் என்று எவரும் சொல்ல மாட்டார்; உலகம் சொல்லாது.
பொருளாதார மேதை என்று கூறப்படுகின்ற அவர் நேரடி வேளாண்மைத் தொழிலையும் வேளாண்மை சார்ந்த தொழிலையும் நம்பி 65 விழுக்காடு மக்கள் உள்ள இந்தியாவில் - சிறு கடைகள் - சிறு தொழிற் சாலைகள் - சிறு வணிகங்கள் - சிறு நிறுவனங்கள் நடத்துகின்றவர்கள் சுமார் 20 கோடிப் பேர் உள்ள இந்தியாவில், உலக உணவுப் பண்டங்களின், நுகர்வுப் பொருள்களின், மருந்துப் பொருள்களின் பகாசுரக் கொள்முதல் காரணமாகவும் கார்ப்பரேட் முறையில் வணிகனாகவும் விளங்குகிற வால்மார்ட் (றுயடட ஆயசவ) நிறுவனத்துக்கு இந்தியச் சில்லறைச் சந்தையைத் திறந்துவிடுவது மாபெரும் மக்கள் நலனுக்கு எதிரான செயலாகும். 18.9.2012க்குப் பிறகு உறுதிப்பட அறி விக்கப்பட்ட பின்வரும், வணிக - தொழில் - மின்துறை -தகவல் துறை ஆகியவற்றில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அந்நிய முதலீடு : (1) சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு; (2) உள்நாட்டுப் போக்குவரத்தில் 49 விழுக்காடு; (3) மின்துறையில் 49 விழுக்காடு; (4) தகவல் ஒலிபரப்புத் துறையில் 74 விழுக்காடு எனவும்; இன்னும் வங்கித் துறையிலும் மற்ற துறைகளிலும் இப்படி அந்நிய முதலீடு தாராளமாக அனுமதிக்கப்பட் டிருப்பது பெரும் கொடுமையாகும்.
அத்துடன் தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் தொடங்கி தாமிரபரணி ஆறு வரையில் ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர் வளத்தையும், கரைகளில் உள்ள நீர் வளத் தையும் உறிஞ்சி எடுக்க அந்நிய நாட்டு முதலாளிகளுக் கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் உரிமம் கொடுத்திருப் பதும்; கரும்பொன் எனப்படும் நிலக்கரியையும் உலோகங்களின் மூலாதாரமாக விளங்கும் இரும்புத் தாதுவையும், பல கோடி ஆண்டுகளுக்குமுன் நிலத்தடியில் உருவான பளிங்குக் கற்களையும் உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் அயல்நாட்டுப் பெருங்குழும முதலாளி களும் அடியோடு வெட்டி எடுக்க உரிமம் வழங்கி, அவர்களிடமும் விஜயபாஸ்கர மல்லையா போன்ற இந்திய சாராய முதலாளிகளிடமும், மோட்டர் உற்பத்தி நிறுவன முதலாளிகளிடமும், கட்சிக்கும் சொந்தத்துக்கும் பெரு நிதிகளை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, திரும்பத் திரும்பத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்திக் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஆட்சி இனியும் இந்தியாவில் தொடரக் கூடாது என்கிற மான உணர்ச் சியும் மனிதாபிமான உணர்ச்சியும் எல்லாப் பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும், குறிப்பாக - தில்லியில் இப்படிப்பட்ட பெரிய திருடர்களின் ஆட்சி நீடிக்க அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் மாநில ஆட்சிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளையடிக்கும் சின்னத் திருடர் களுக்கும் கட்டாயம் வரவேண்டும்.
இன்று இந்தியாவில் நடப்பது மக்கள்நல ஆட்சி அல்ல; மக்கள் நலத்துக்கு எதிரான ஆட்சி. இதே தன்மையில் எவராண்டாலும் - எக்கட்சி ஆண்டாலும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கிற எல்லாரும், எல்லாக் கட்சிகளும் மக்களின் எதிரிகளே!