11/06/2012

| |

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்து


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 3ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் நடத்திய விருந்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அன்று முற்பகல் புத்தாக்கத் தலைமையின் உந்து ஆற்றல் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரம், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளில், சீனாவும், இந்தியாவும் ஒத்துழைத்து வருகின்றன. இந்த ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்குப் பயன் தந்துள்ளது. இந்தியா, சீனாவுடனும் உலகத்துடனும் நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது. அதே போல சீனா, இந்தியாவுடனும் உலகத்துடனும் நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது. ஆகவே வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் இரு நாடுகளுக்கிடை நெருங்கிய தொடர்பு உண்டு. இரு நாட்டுப் பரிமாற்றங்களைத் தூண்டி, ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்க விரும்புவதாக அப்துல் கலாம் தெரிவித்தார். 

இளைஞர்களின் தொடர்பு அதிகரிப்பு குறித்து, அப்துல் கலாம் பேட்டியளிக்கையில், இந்திய-சீன இளைஞர்கள் எப்போதும் தொலைநோக்கையும், குறிக்கோள்களையும் கொண்டவர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் குறிக்கோள்களுக்கு, இரு நாடுகளும் வழிகாட்ட வேண்டும். அறிவுத்திறமையுடைய அவர்கள் செல்வாக்கு மிக்க கூட்டமாக மாறியுள்ளனர். உயிராற்றல் நிறைந்த இளைஞர்களைக் கொண்ட நாடுகள், செழுமையடைவது உறுதி. இந்திய-சீன இளைஞர்களின் தொடர்பை வலுப்படுத்துவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இவ்விரு நாடுகளின் பல்கலைக்கழங்களுக்குத் தத்தமது மாணவர்களை அனுப்பலாம். ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகள் அதற்குத் துணை புரியும் என்றார் அவர்.
அப்துல் கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார். கல்விக் கருத்தில் இளைஞர்கள் பல்வேறு அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவரது ஆதரவுடன் மாபெரும் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் புத்தாயிரம் ஆண்டுக்கான 2020 என்ற திட்டத்தைப் பரவல் செய்து, அறிவியல் தொழில் நுட்பங்கள் மூலம், இந்தியாவை உலகின் வலிமை மிகுந்த நாடாக மாற்ற அவர் விரும்புகிறார்.