காசாவில் இருந்து பாலத்தீனர்களால் நடாத்தப்பட்ட ராக்கட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குபுறமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
முன்னதாக 3 ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இறந்த பாலத்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.
புதனன்று ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளபதியான அஹ்மட் ஜபாரி அவர்கள் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வன்செயல்கள் ஆரம்பமாகின.
காசாவில் இருந்து நடத்தப்படுகின்ற ராக்கட் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை இலக்கு வைக்கும் என்று இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை எகிப்திய பிரதமர் முஹமட் முர்சி கண்டித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் ஸ்திரமின்மையை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டம்
அதேவேளை, இந்த வன்செயல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநாவின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது.
இந்த வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புக் கவுன்ஸிலின் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இஸ்ரேலிய நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று அரபு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், பாலத்தீன ராக்கட் தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது.