11/04/2012

| |

நூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்-


இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்  எனும் தலைப்பில் குமாரதுரை அருணாசலம் எழுதியுள்ள வரலாற்று நூல் இன்று சனியன்று (03.11.2012)டென்மார்க்கில் வெளியிடப்பட்டது இந்நூல் குறித்து வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அந்நூலின் முன்னுரையை இங்கு பிரசுரமாகின்றது 





இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளும் பதிவுகளும்  எனும் தலைப்பில் வெளிவரும் இன்நூல் எதிர்கால சமூகத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாய் இருக்கும். அரசியல் வரலாறு எனும் பெயரில் சிங்கள மொழியில் எழுதப்படும் நூல்களில் பெரும்பாலானவை சிங்கள இனம் சார்ந்ததாகவும், தமிழில் எழுதப்படுகின்ற நூல்களில் பெரும்பாலானவை தமிழர்களின் அரசியல் சார்பானவையாகவும் இருந்துவருவது குறித்து இருபுறமும் குற்றச்சாட்டுகள்  இருக்கின்றன. இந்த நிலையில் சிங்கள அரசியல் செயற்பாடுகளில் காணப்படுகின்ற நியாயத்தன்மைகள் தமிழர் தரப்பு வாசிப்பிற்கு நீண்டகாலமாகவே மறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று தமிழர் தரப்பு அரசியல் செயற்பாடுகளின் பிழையான போக்குகள் எழுத்து முயற்சிகளில் அம்பலப்படுத்தப்படக் கூடாது என்கின்ற சுயதணிக்கை ஒன்றை தமிழ் எழுத்தாளர்களில் பலர் மேற்கொண்டுவருகின்றனர். இந்த மரபுகளைக் கடந்து குமாரதுரை அவர்கள் இலங்கையின் அரசியல் வரலாறு எனும் நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இன்றுவரையான சகல தேர்தல்களும் அடிப்படையாகக்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு தேர்தலைத் தொடர்ந்தும் ஏற்பட்டுவந்த அரசியல் மாற்றங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னிலங்கை கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளும் அதையொட்டிய கிழக்கு, வடக்கு  அரசியல் கட்சிகளின் எதிர் வினைகளும் ஒருமித்த பார்வைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளின் பின்னணியில் இருந்த வரலாற்றுக்காரணங்களும் இனவாத அணுகுமுறைகளும் தமிழ் சிங்கள வேறுபாடுகளைக் கடந்து ஒப்புவிக்கப்பட்டிருப்பது இந்நூலில் விசேட அம்சமாகும். நூல் வெளியீடு 

புலமைசார் நூல்களின் கிடைக்கின்ற வரலாற்றுத் தவறுகளையும் ஆவணங்களையும் வரிசைப்படுத்துவது என்கின்ற வழமைகளை மீறி குமாரதுரை அவர்களின் எழுத்துக்கள் இலங்கையில் வரலாற்று நிகழ்வுகளை விமர்சனப் பாங்கோடு அணுகுகின்றன.  இதன் காரணமாக தமிழ் தேசிய அரசியலில் நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டு வந்த தேசியம், தாயகம், விடுதலை என்கின்ற பல புனிதங்களை கேள்விக்குள்ளாக்குவதில் இவரது எழுத்துக்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. 

தமிழில் எழுதப்படும் வராலாற்று நூல் எல்லாம் யாழ்ப்பாணத்தை சுற்றியே மையங்கொண்டிருக்கும் இருள்வெளியைத் தாண்டி முசுலிம்களினதும் கிழக்கு மாகாண மக்களினதும் மனச்சாட்சிகளாக இலங்கையினது வரலாறும் விமர்சனங்களும் தொகுக்கப்பட்டிருப்பது இந்நூலுக்குரிய மேலும் ஒரு சிறப்பம்சமாகும். 

திருகோணமலை மாவட்டம் கிளிவெட்டி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட குமாரதுரை அவர்கள்  ..25.05.1939.............. பிறந்தவர். தனது சிறுவயது முதற்கொண்டே தமிழரசுக்கட்சி அரசியல் சூழலில் வளர்ந்த இவர் கிழக்கிலங்கையின் முதுபெரும் அரசியல்வாதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை  அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

ஆயுதப்போராட்டம் உருக்கொண்ட காலங்களில் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இவர் பல சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. 1975-1976 ஆம் ஆண்டுகளில் சுமார் 11 மாதங்கள் மட்டக்களப்பு சிறையிலும் 1984 - 1986 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் இரண்டுவருடங்கள் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

1986 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோர நேர்ந்த வேளையிலும் பொது அரசியல் வாழ்வில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள அவரால் முடியவில்லை. மிதவாத, ஆயுதப்போராட்ட தலைமைகளாக இருந்த பல தமிழ் தலைவர்களுடன் நெருங்கி பழகிய, செயற்பட்ட அனுபவங்கள் நிறைந்த இவர் இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக ஓயாது உழைத்து வருபவர். ஐரோப்பிய வானொலிகளில் இடம்பெறும் அரசியற் கருத்தாடல்களில் இவரது சிம்மக்குரல் புகலிடத்தமிழர்களிடையே மிகவும் பரிட்சயமானது. முகவரி இல்லாத பல நூறு இணையத்தளங்களுக்குள்ளும் சொந்தப் பெயருடன் எழுதிவரும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அதுமட்டுமன்றி கடந்த சில வருடங்களாக இலங்கையின் அரசியல் களசெயற்பாடுகளில் நேரடியாக தமது பங்களிப்பையும் செலுத்திவரும் குமாரதுரை அவர்கள் எழுதி வெளியிடும் முதலாவது நூல் இதுவாகும்.

பல நூறு அனுபவங்களினதும் பட்டறிவுகளினதும் விளைச்சலாக வெளிவரும் இந்த நூல் எதிர்காலத்தில் இலங்கை அரசியல் குறித்து ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்;. கடந்த 30 வருடகால யுத்தத்தில் விளைவுகளில் ஒன்றாக அரசியல் படிப்பதும் பேசுவதும் மரணதண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. இன்று அந்தநிலை மாறி இளைஞர் சமூதாயத்தினர் இடையே அரசியல் அக்கறை பெருகிவருகின்றது. இந்தநிலையில் தமிழ் பேசும் எமது இளம் சமூதாயம்  நிச்சயமாக குமாரதுரை அவர்களின் இந்த நூலை செவ்வனே பயன்படுத்துவார்கள் என்று நம்புகின்றேன்.

எம்.ஆர்.ஸ்ராலின்