11/22/2012

| |

தூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சேகரிக்க குவிந்த மீடியா ஆட்கள்!

நேற்று தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் பிறந்த கிராமம் செய்திகளில் அடிபடுகிறது. கசாம் தூக்கிலிடப்பட்ட பின், செய்தி சேகரிப்பதற்காக இந்த கிராமத்தை நோக்கி சென்ற செய்தியாளர்கள் மற்றும் டிவி கேமராமேன்களை ஊருக்குள் நுழையவிடாமல் பாகிஸ்தான் செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆட்களும், உளவுப் பிரிவினரும் பலவந்தமாக தடுத்து நிறுத்தினர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலின்போது உயிருடன் சிக்கிக் கொண்ட ஒரே நபர் கசாப் என்ற விபரம் வெளியானவுடன், பாகிஸ்தானில் அவரது பின்னணி என்பதை துருவத் தொடங்கிய செய்தியாளர்கள், அவரது சொந்த கிராமம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பரித்கோட் என்று கண்டுபிடித்தனர்.
அதையடுத்து செய்தியாளர்கள் அங்கே படையெடுக்கவே, சிறிதுகாலம் அந்த கிராமத்தில் ஒரே மீடியா தலைகளாக இருந்தன.
ஆளாளுக்கு கசாப் பற்றிய தகவல் சேகரிக்க அங்கு வரவே, ஒரு கட்டத்தில் கசாபின் பெற்றோர்கள், இரு சகோதரிகள், மற்றும் ஒரு சகோதரர் ஆகியோர், அந்த கிராமத்தைவிட்டு வெளியேறி எங்கோ சென்று விட்டனர். இப்போது அவர்கள் அங்கில்லை.
இப்படியான நிலையில் நேற்று கசாப் தூக்கில் இடப்பட்ட பின், மீண்டும் பரித்கோட்டுக்கு மீடியாக்காரர்கள் வருவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சென்ற மீடியாக்காரர்களை பாகிஸ்தான் அரசு ஏஜென்சிகள் தடுத்து, திருப்பி அனுப்பின என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எக்ஸ்பிரஸ் நியூஸ், சேனல் 5 மற்றும் அப்னா டிவி ஆட்களின் கேமராக்களை, சாதாரண உடையில் இருந்த செக்யூரிட்டி ஆட்கள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் நியூஸ் நிருபர் இது குறித்து அம்மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்ததற்கு அவரோ கசாப் மரணத்தால் கிராமத்தினர் கோபமாக இருக்கின்றனர். அதனால் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.