11/10/2012

| |

சரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்

இலங்கையில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த மோதல்களின்போது, ஆயுதங்களை ஒப்படைக்கும்படி விடுத்த வேண்டுகோளை 11 கைதிகளே ஏற்று சரணடைந்தனர் என்றும் மற்றவர்கள் சரணடைய மறுத்து தாக்குதலை தொடர்ந்ததாலேயே இராணுவ கமாண்டோ அணி உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை பின்னேரம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்தச்சென்ற சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே நடந்த மோதல் பின்னர் ஆயுத மோதலாக மாறியதை அடுத்தே பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
சிறையில் இருந்த ஆயுத அறையை உடைத்து துப்பாக்கிகளை எடுத்த கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் பல மணிநேரம் பரஸ்பரம் துப்பாக்கித் தாக்குதல்கள் நடந்தன.
சிறைச்சாலை வளாகத்தில் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இன்னும் தேடுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறைக்கைதிகளின் கைகளில் சிக்கிய 82 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 6 துப்பாக்கிகளை காணவில்லை என்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளின் குடும்ப உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துகொண்டிருப்பதாக கொழும்பிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

16 சடலங்கள் மருத்துமனையில்-11 சடலங்கள் சிறை வளாகத்தில்

மோதல்களில் கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக பணிப்பாளர் அனில் ஜாசிங்க பிபிசியிடம் கூறினார்.
மேலும் 11 கைதிகளின் சடலங்கள் வெலிக்கடை சிறை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிபிசியிடம் தெரிவித்தார்.
காயப்பட்ட 43 பேரில் 23 பேர் கைதிகள், 13 பேர் பொலிஸ் கொமாண்டோக்கள், 4 படைச் சிப்பாய்கள் மற்றும் குறைந்தது ஒருவர் சிறைக்காவலர் என்று கூறிய மருத்துவமனை பணிப்பாளர், 5 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகக் கூறினார்.
இன்று காலை வரையில் நீடித்த தேடுதல்களின்போது தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டியிருப்பதாக சிறைத்துறை அமைச்சின் மூத்த ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த இதே மாதிரியான ஒரு வன்முறையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 25 கைதிகளும் 4 சிறைக்காவலர்களும் காயமடைந்தனர்.
2010-ம் ஆண்டிலும் தேடுதல் நடத்தச் சென்ற படையினருடன் நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட பொலிசாரும் சிறைக்காவலர்களும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.