மட்டக்களப்பு பழுகாமத்தில் இருந்து கையுடைவு காரணமாக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பழுகாமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய சிவனேசன் சிவகலா மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்.
குறித்த பெண் கடந்த புதன்கிழமை வீட்டில் வழுக்கி விழுந்தால் அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட பாரிய அடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சையின்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். சத்திரசிகிச்சையின்போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் காவலரணில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் விசேடமாக கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளபோதும் ஒரு சிலரின் கவலையீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.