* காசா ஊடக கட்டிடங்கள் மீது தாக்கு
* அரச அலுவலகங்கள் தரைமட்டம்
உயிரிழப்பு 52 ஆக உயர்வு
இஸ்ரேல் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் நேற்று வான் மற்றும் கடல் வழியாக காசா மீது உக்கிர தாக்குதலை நடத்தியது.
காசாவில் இருக்கும் இரு ஊடக கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி அலுவலகம் உட்பட பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி மற்றும் ஐ.டி. என். அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன. இதன்போது பல ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளனர்.
மறுபுறத்தில் காசாவில் இருந்து நேற்றைய தினத்திற்குள் 8 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது எறியப்பட்டுள்ளதோடு அதில் மூன்று ரொக்கெட்டுகள் இஸ்ரேலை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் இருந்துவரும் ரொக்கெட்டுகளை நிறுத்த அங்கு இன்னும் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது தாக்கவேண்டியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவில் நான்காவது நாளாக ரொக்கெட் விழுவதற்கான அச்சுறுத்தலாக சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.டெல் அவிவ் மீது இரு ரொக்கெட்டுகள் எறியப்பட்டதாகவும் அவை இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் இடை மறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இஸ்ரேல் இராணுவம் 'டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட தகவலில், பல மாதங்களாக ஆய்வு நடத்தப்பட்ட உளவுத் தகவலின் உதவியுடனேயே நேற்று முன்தினம் காசா இலக்குகள் மீது தாக்கியதாக கூறியுள்ளது. ஆனால் பலஸ்தீன மருத்துவ தகவலின் படி இஸ்ரேலிய வான் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஊடகவியலாளர் தங்கியிருந்த கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் இராணுவத்திடம் மத்திய கிழக்கிற்கான வெளிநாட்டு ஊடக அமைப்பு காரணம் கேட்டுள்ளது. எனினும் மேற்படி கட்டிடங்களின் மேலிருக்கும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. இந்த சமிக்ஞை கருவிகள் மூலம் ஹமாஸ் களத்தில் உள்ள தமது படைகளுடன் தொடர்பு கொள்வதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமையும் காசா ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது பல ரொக்கெட் தாக்குதலை நடத்தியது. இதில் டெல் அவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளபதி அஹமத் ஜபரி மீதான தாக்குலுடன் தீவிரமடைந்த இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலில் இதுவரையில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானோர் அப்பாவி பொது மக்களாவர். கடந்த வியாழக்கிழமை காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை தொடக்கம் காசா வானில் இஸ்ரேல் யுத்த விமானங்கள் பறந்து அந்த பகுதி எங்கும் ஷெல் தாக்குதல்களை நடத்தும் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் கூறியுள்ளார். சரியான இலக்கை தாக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ள ஆல்டிலரிகளும் காசா பகுதியில் விழும் சத்தங்கள் கேட்பதாக அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஹமாஸ் அமைப்பின் அல் குத்ஸ் தொலைக்காட்சியின் ஊடக வலையமைப்பு இருக்கும் கட்டடத்திலேயே பி.பி.சி. தொலைக்காட்சியின் காசா கிளை மற்றும் ஸ்கை தொலைக்காட்சி மற்றும் ஐ.டி.என். ஆகிய ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த கட்டடத்திற்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து கட்டடம் பாரிய சேதத்திற்கு உட்பட்டுள்ளதோடு அங்கிருந்து ஊடகவியலாளர்களும் அகற்றப்பட்டுள்ளனர்.
மருந்துக்கு தட்டுப்பாடு
இதனிடையே இஸ்ரேல் தாக்குதலில் காயப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளில் தட்டுப்பாடு காணப்படுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் காயப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவென கட்டார் அரசு எகிப்திடம் 10 மில்லியன் டொலர்களை வழங்கி யுள்ளது. அத்துடன் எண்ணெய் வளம் கொண்ட வளைகுடா நாடான கட்டார் காசாவுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் அவசர உதவியாக வழங்கியுள்ளது.
எனினும் தற்போதைய மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் உடன்பாடு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்து தற்போது உறுதி அளிக்க முடியாது எனவும் எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி குறிப்பிட்டுள்ளார். கெய்ரோவில் இடம்பெற்ற கூட்டத்தில் மொஹமட் முர்சி, துருக்கி பிரதமர் ரிசப் தைய்யிப் எர்டோகன், ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இஸ்ரேலின் காசா மீதான தரை வழி தாக்குதல் முயற்சிக்கு முர்சி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் இராணுவ பயிற்சி பெற்ற 75,000 பேரை இராணுவ சேவைக்கு அழைத்துள்ளது. காசா எல்லையில் ஆயுதங்கள், பீரங்கிகள் என இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்குள் காசாவிலிருந்து ரொக்கெட் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் தரைவழி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் தரைவழி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டால் அது பிராந்தியத்தில் அபாயகரமான விளைவை ஏற்படுத்தும். இதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி எச்சரித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரேல், காசா மீது நடத்திய பாரிய தாக்குதலில் 1,400 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போதைய நிலையில் பிராந்தியத்தில் அரசியல் சூழல் முற்றாக மாறியுள்ளது. எகிப்து, துனீஷியா, லிபியா ஆகிய நாடுகளில் மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக 2008 ஆம் ஆண்டு தாக்குதலின்போது எகிப்தில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காசாவுக்கான ரபா எல்லையை மூடி பலஸ்தீனர்களை தனிமைப் படுத்தியது இஸ்ரேலின் தாக்குதலுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் தற்போது எகிப்தில் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமியவாதியான மொஹமட் முர்சி ரபா எல்லையை தாக்குதலையொட்டி திறந்து விட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து பிரதமர் ஹிஷாம் கன்தில் காசா சென்று பலஸ்தீனர்களுக்கு ஆதரவளித்ததோடு நேற்று முன்தினம் துனீஷிய வெளியுறவு அமைச்சரும் காசாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மேலும் வெளிநாட்டு தூதுவர்களும் காசா செல்ல தற்போது ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை இதுவரை காசாவில் 900 க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அதனது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காசாவிலிருந்து 500 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது எறியப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 257 ரொக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் தடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.
கடல் வழியாலும் தாக்குதல்
இதனிடையே இஸ்ரேலின் கடற்படை வடக்கு காசாவின் கரையோர இலக்குகளை தாக்கியுள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக காச கடற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலின் கடற்படை கப்பல் மூலமே காசா மீது தொடர்ச்சியான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் அல்ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் இஸ்ரேல் வான் தாக்குதலில் எகிப்து எல்லையில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் கட்டளை தளம் தரை மட்டமாகி யுள்ளது.
இஸ்ரேலிய யுத்த விமானங்கள் ஹமாஸ் அரச அலுவலகங்கள் மீது குண்டு போட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் இஸ்மைல் ஹனியானின் அலுவலகம், பொலிஸ் தலைமையகம் ஆகியனவும் இஸ்ரேலின் தாக்குதலால் தரைமட்டமாகியுள்ளன. எனினும் எதிரியை வீழ்த்தும் அளவுக்கு எமது அமைப்பு இன்னும் வலுவாகவே இருக்கிறது என ஹமாஸ் பேச்சாளர் அபு உபைதா சூளுரைத்தார். இதனிடையே ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் காசாவில் இராணுவ நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும். நேற்று எச்சரித்தார்.
இஸ்ரேலின் வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். "ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு கடும் பதிலடி கொடுக்க தயாராகி இருக்கிறோம். படை வீரர்கள் எந்த முன்னெடுப்புக்கும் தயாராகி இருக்கிறார்கள்" எனவும் நெதன்யாகு அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டார்.