ஆந்திராவில் நீலம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் அங்கு 22 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான நீலம் புயல் கடந்த 31ம் தேதி, மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தமிழக பகுதியில் கரையை கடந்த நீலம் புயல் காரணமாக, தற்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர ஆந்திர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டிணம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சுமார் 130 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 2.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமானது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சத்யவர்ணம் என்ற கிராமத்தில் உள்ள மக்கள் மாடிகளில் மழையில் நனைந்தவாறே ஒரு நாள் முழுவதையும் கழித்துள்ளனர். விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள ஹேமாத்ரி கட்டா பகுதியில் மக்களை மீட்கும் பணியில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை இப்பகுதியில் இருந்து 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதே போன்று, தர்மாவரம் பகுதியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பஸ்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்திற்கு கடந்த 4 நாட்களில் 22 பேர் வரை பலியாகியுள்ளனர். சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக மழை பெய்தததே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 14 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று பார்வையிடுகிறார்.