11/22/2012

| |

“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”

“யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர், இளம் பெண்கள் ராணுவத்தில் இணைய முன்வரவேண்டும்” என இலங்கை யாழ்ப்பாணத்துக்கான ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ராணுவத்தின் 513-ம் படைப்பிரிவு, யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி என்ற இடத்தில் பொதுமக்களுக்காக கட்டிய வீடு ஒன்றை வழங்கும் நிகழ்ச்சியில் (செவ்வாய் கிழமை 20.11.2012) பேசியபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
“இங்குள்ள தமிழ் மக்கள் எமது ராணுவத்தை ‘சிங்கள ராணுவம்’ என்று பார்க்கக் கூடாது. ‘இலங்கை ராணுவம்’ என்றே பார்க்க வேண்டும். இலங்கையின் வட மாகாணத்தில் (யாழ்ப்பாணம் அந்த மாகாணத்தில்தான் உள்ளது) உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை ராணுவத்தில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதி  இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வர வேண்டும்.
நான் ராணுவத்தில் இணைந்தது, 1980-ம் ஆண்டில். அப்போது நான் ராணுவத்தில் இணைந்தபோது, இலங்கை ராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் இருந்தனர். விடுதலைப் புலிகள் அவர்களை அச்சுறுத்தியதால், அவர்கள் ராணுத்தில் இருந்து விலக்கினர். இப்போது அச்சுறுத்துவதற்கு விடுதலைப்புலிகள் இங்கே இல்லை. எனவே ராணுவத்தில் இணைவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்” என்றார் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க.