11/28/2012

| |

கொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம் பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம் 154 வருடம் பழைமையான கட்டடம்

  • 154 வருடம் பழைமையான கட்டடம்
  • நிர்வாகம், கணக்காளர், திட்டமிடல் பிரிவுகள் முற்றாக தீக்கிரை
  • 5 மணி நேர போராட்டம்: 1½ இலட்சம் லீற்றர் நீர் பீச்சியடிப்பு
புறக்கோட்டை, டாம் வீதியிலுள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் அந்தச் செயலகத்தின் மூன்று முக்கிய பிரிவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன் பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
மாவட்ட செயலகத்தின் பிரதான கட்டடத்தில் அமைந்திருந்த மாவட்ட செயலாளர் அலுவலகம் உட்பட நிர்வாகம், திட்டமிடல் மற்றும் கணக்காளர் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன் அதிலிருந்து பல்வேறு பெறுமதியான ஆவணங்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
சுமார் ஐந்து மணி நேர பாரிய போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் தற்பொழுது அந்தப் பிரதேசம் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டாம் வீதி பொலிஸாருடன் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள், இலங்கை மின்சார சபை ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரதான கட்டடத்தில் நேற்று முன்தினம் இரவு 7.50 மணியளவில் திடீரென பாரிய தீ ஏற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டுள்ளமை தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் உடனடியாக கொழும்பு மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரியபடுத்தியுள்ளார்.
அனர்த்த முகாமை நிலையத்தின் உதவி இணைப்பு அதிகாரி ஏ.ஆர்.என். மென்டிஸ் அருகிலுள்ள டாம் வீதி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையி னருக்கும் உடனடியாக அறிவித்துள்ளார்.
தீயணைப்புப் பிரிவும், பொலிஸாரும் டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நலின் வீரவர்தன தலைமையிலான குழுவினரும், உடனடியாக ஸ்தலத்திற்கு வருகை தந்ததுடன் சுமார் 10 நிமிடத்திற்குள் தீயணைப்புப் படையினர் வருகைதந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கச்சேரி கட்டடத்திலிருந்து பாரிய தீப் பிழம்புகள் எழுந்து சென்றதையும், தீ பொறிகள் வானை நோக்கி வேகமாக பரந்ததையும் அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டதுடன் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.
ஒரு மாடியைக் கொண்ட சுமார் 154 வருடங்கள் பழைமை வாய்ந்த மேற்படி மாவட்ட செயலகத்தின் மாடி கணத்த பலகையினால் அமைக்கப்பட்டிருந்ததால் குறுகிய நேரத்தில் தீ வேகமாக பரவத் தொடங்கின.
தீயணைப்புப் படையினரின் ஒன்பது பவுசர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் தீயை கட்டுப்படுத்த முடியாது போனதை அடுத்து மேலும் 10 பவுசர்கள் வெளி இடங்களில் இருந்து அழைக்கப்பட்டுள்ளன.
தெஹிவளையிலிருந்து 2, கோட்டே யிலிருந்து - 01, விமானப்படையின் 2, இராணுவத்தின் 3, கடற்படையின் 02, கொழும்பு துறைமுகத்தின் 2 பவுசர்கள் என்ற அடிப்படையில் 10 பவுசர்கள் மேலதிகமாக அழைக்கப்பட்டதுடன் ஒரு இலட்சம் லீட்டருக்கும் அதிகமான நீர் தீயணைப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்புப் படையின் பயிற்சிகளுக்கு பொறுப்பான நிலைய அதிகாரி ஆர்.ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
நேற்ற முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று அதிகாலை 1.00 மணி வரையாக ஐந்து மணித்தியால போராட்டத்திற்கு பின்னரே பாரிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் நேற்று நண்பகல் வரை அந்தக் கட்டடத்தின் பல பிரசேங்களில் தீ எரிந்து கொண்டிருப்பதைக் காண முடிந்ததுடன் தீயணைக்கும் படையினர் அதனை மேலும் பரவ விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர்கள், அதிகாரிகள் விரைவு
தீ ஏற்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குள் மாவட்ட செயலாளர் கமல் பத்மசிறி, பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நேற்று முன்தினம் இரவு உடனடியாக வருகைதந்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களை கண்டறியும் பொருட்டு நேற்றுக் காலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்கள்.
கட்டடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் தீ பற்றிக் கொண்டிருந்ததை கருத்திற் கொண்டு அமைச்சர்கள் அதிகாரிகள் கட்டடத்திற்குள் சென்று பார்வையிடுவதற்கு தீயணைப்புப் படையினர் அனுமதிக்க வில்லை. அத்துடன் கொழும்பு மாவட்ட எம்.பி ரவி கருணாநாயக்க கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பவுஸி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
விசாரணைகள்
இந்த தீ விபத்துக்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம்என நம்பப்படுகின்ற போதிலும் பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (சி.சி.டி)டன் ஒப்படைக்கப்பட்டதால் விசாரணைக்காக மாவட்ட செயலக பிரதேசம் சி.சி.டியினரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மின் ஒழுக்குக் காரணமா என்பது தொடர்பாக ஆராயும் பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார சபை பொறியியலாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதேவேளை, அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் பகுப்பாய்வு நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு
மேற்படி பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் பலப்படுத்தப்பட்டு ள்ளதுடன், பொலிஸாருக்கு ‘திளிதிகமாக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேத விபரங்கள், மதிப்பீடு
முக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்ட கணனி இயந்திரங்கள் உபகரணங்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள்.
திட்டமிடல், நிதி தொடர்பான ஆவணங்கள் போன்றன இதில் எரிந்து சாம்பலாகியுள்ளன. பகுப்பாய்வாளர்களின் விசாரணைகளுக்கு பின்னரே முழுமையான சேத விபரங்கள் சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்ய முடியும் என்று மாவட்ட செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
தீக்கிரையான கட்டடம்
தீக்கிரையான மாவட்ட செயலகம் அமையப் பெற்றிருந்த கட்டடம் 1858 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடமாகும். 154 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தில் ஆரம்ப காலம் தொடக்கம் கொழும்பு கச்சேரி இயங்கி வருகின்றது.