11/28/2012

| |

13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது : ஹக்கீம்

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளா தெனவும் அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் இதற்கு கைகோர்த்துவருவதாகவும் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காலியில், இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்கு நாங்கள் கையுயர்த்தப் போவதுமில்லை. அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும், பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம், மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய செயல்பாடு இந் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிக்கக் கூடியவாறு 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் அதற்கு வேறு விமர்சனப் பார்வை இருந்து வருகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம்.

13ஆவது திருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது. சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றான நிலைப்பாட்டை உடைய கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோமென ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.