11/22/2012

| |

ஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப 13வது திருத்தமே வழிவகுத்தது

* தேசிய ஐக்கியத்துக்கு 13வது திருத்தம் வழி ஏற்படுத்தியது
* நீக்க முற்பட்டால் தேசிய ரீதியில் பாதிக்கும்
* திருத்தப்பட வேண்டுமென்பதே சு. க. வின் நிலைப்பாடு
* நாட்டில் நன்மைகளுக்கு உறுதுணையாக அமைந்தது
நாட்டின் மோசமான காலகட்டமொன்றில் ஆயுதமேந்திய பல இயக்கங்களை ஜனநாயக நீரோட்டத்திற்குக் கொண்டுவர வழிவகுத்தது 13 வது திருத்தச் சட்டமே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
நாட்டில் இன ஐக்கியத்துக்கு வழிவகுத்த இந்த 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர அதனை நீக்க முற்பட்டால் தேசிய ரீதியில் மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏனைய கட்சிகளைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 13வது திருத்தச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்பதிலேயே உறுதியாகவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அடுத்த வருடத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் :-
13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் தற்போது பல கட்சிகள் மட்டத்திலும் பேசப்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பெரும்பாலான கட்சிகளின் கருத்துக்கள் இத னையே வெளிப்படுத்துகின்றன. எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த சில தினங்களுக்கு முன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகக் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டது. இதன்போது மேற்படி திருத்தத்தில் சில சில குறைபாடுகள் உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனால், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதனை அடுத்த வருடமளவில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. சில சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பு. எனினும் நான் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது 13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என கூறியதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
13வது திருத்தத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதையே நான் உண்மையில் அங்கு குறிப்பிட்டிருந்தேன். அதனை நீக்க வேண்டுமெனக் கூறவில்லை. இதனை ஊடகங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். 13வது திருத்தச் சட்டம் நாட்டில் பல நன்மைகள் விளைவதற்கு உறுதுணையாக இருந்த சட்டமாகும். இனங்கள் பிளவுபட்டிருந்த நிலையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த உதவியது இந்த திருத்தச் சட்டமே.
சில கட்சிகள் ஜனநாயக வழியில் ஒன்றிணைய வழிவகுத்ததும் இந்தத் திருத்தச் சட்டம் தான். புளொட், ஈ. பி. டி. பி., டெலோ, ஈ. பி. ஆர். எல். எவ். போன்ற கட்சியினர் ஆயுதத்தைக் கீழே வைத்துவிட்டு தேசிய ஜனநாயக நீரோட்டத்துக்கு வருவதற்கு வழிசமைத்ததும் இந்த திருத்தச் சட்டமே. இந்த திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் அது காத்திரமான மாற்றமொன்றுக்கு அல்லது திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டுமே தவிர 13வது திருத்தச் சட்டம் நீக்கப்படக்கூடாது.
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான மாற்று வழிகள் மிக அத்தியாவசியமானவை. 13 வது திருத்தச் சட்டம் நீக்கப்படுமானால் தேசிய ரீதியில் மிக மோசமான நிலை ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் என்பதையே நான் குறிப்பிட விரும்புகிறேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்