11/20/2012

| |

13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்

13 சட்டத்திருத்தம் அர்த்தமற்றது என்பதனால் நாம் அதனை நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியமை, அவர்களின் இரட்டை தன்மை நிலைப்பாட்டை காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தம் அர்த்தமற்றது என்றும் அதனால் ஆரம்பம் முதலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரித்தது என்ற கருத்தை பாராளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார். சுமந்திரனின் இந்தக் கருத்து ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
நாம் 13ஆவது திருத்தத்தை ஆரம்பம் முதலே அர்த்தமற்றதென்று நிராகரித்திருக்கிறோம் என்று சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, இது விடயத்தில் சுமந்திரன் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்று தெரிவி த்துள்ளார்.
இது பற்றி திரு. சஜின் த வாஸ் குணவர்தன, தாம் திரு. சுமந்திரன் அவர்களின் கருத்து குறித்து பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டை 17ம் திகதியன்று அறிவிக்கப் போவதாக கூறியிருந்தார். எனினும் நவம்பர் 17ம் திகதியன்று திரு. சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த போதிலும், அவர் பாராளுமன்ற சபைக்குள் பிரவேசிக்காமல் திரு.சஜின் த வாஸ் குணவர்தனவை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்புடைய வகையில் ஐக்கியமாக சமூக தீர்வொன்றை காண்பதில் அக்கறை கொண்டிருக்க வில்லை என்று கூறிய திரு. சஜின் த வாஸ் குணவர்தன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலதரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கருத்துக்களை அவ்வப்போது இது குறித்து வெளியிட்டு வருகிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
திரு. சுமந்திரன் ஒரு கருத்தை கூறும் போது அவரது கட்சித்தலைவர் ஆர் சம்பந்தன் இன்னுமொரு கருத்தை தெரிவிக்கிறார். தமிழர் விடுதலை கூட்டணிக்குள் ஓர் உண்மையான ஐக்கியம் ஏற்படும் வரை வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் காண்பது கஷ்டமாக இருக்குமென்றும் திரு. சஜின் த வாஸ் குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒரு தடவை திரு. சுமந்திரன் 13வது திருத்தம் அர்த்தமற்றதாக இருப்பதனால் அதனை சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கிவிட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இணைத்திருப்பது அநாவசியமான செயல் என்று அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.