இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தது. ஆனால், தற்போது இராணுவத்தில் நூற்றுக்கும் அதிகமான தமிழ்ப் பெண்களை சேர்த்துக்கொண்ட போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சில கட்சிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. ஆனால், இதனை சரியான கருத்தாகவோ, முடிவாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ளப்பட கூடாது.
இனப் போரின் அடிப்படையாக இருந்த விடயங்களில், இராணுவம் மற்றும் காவற்துறை உட்பட அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் சமுதாயத்திற்கு தகுந்த பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதும் ஓரு முக்கிய காரணம். தற்போது இராணுவத்தில் தமிழ் யுவதிகளை சேர்த்துக்கொள்வது குறித்து கவலைப்படும் தலைவர்கள்கூட, அதே இராணுவத்தில் உயர் பதவியில் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டி உள்ளனர்.
காலம் காலமாக கடலையும் வறண்ட பூமியையும் மட்டுமே நம்பி இருந்த மக்களுக்கு, அதீத கல்வி அறிவும் அதனை ஒட்டிய அரச வேலைவாய்ப்;பும் மட்டுமே பல நூறு ஆண்டுகளில் நம்பிக்கை அளித்த விடயம். 'சிங்களம் மட்டும்' என்ற அரச கொள்கையின் காரணமாக தமிழர்கள் அரசாங்க வேலைவாய்ப்பை இழந்தார்கள. இனப் போரின் காரணமாக அரசின் நம்பிக்கையையும் இழந்தார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
அதனால் தானோ என்னவோ, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவம் மற்றும் காவற்துறையில் தமிழர்களின் எண்ணிக்கையும் பிரதிநிதித்துவமும் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு குறைந்து விட்டது. இதுவே தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விட்டது, இனப் பிரச்சினை குறித்து வருத்தப்பட வேண்டியதற்கான மாற்றொரு காரணம்.
இந்த பின்னணியில், இராணுவத்தின் பெண்கள் பிரிவில் தமிழ் யுவதிகளை சேர்த்துக் கொள்வதற்கு தமிழ் சமூகத்தின் உள்ளிருந்தே எதிர்ப்பு கிளம்பி உள்ளது வருத்தப்பட வேண்டிய விடயம். இந்த எதிர்ப்பின் காரணம் தெளிவாக கூறப்படவில்லை. ஆனால், எதிர்ப்பின் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, எங்கே தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்களது அரசியல் கட்டுப்பாட்டை விட்டுப்போய் விடுவார்களோ என்று சில அரசியல் தலைவர்கள் அஞ்சுவது பேர்ன்ற தோற்றம் உருவாகி உள்ளது.
இனப்பிரச்சினை காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் போன பிறகு வசதியுள்ள தமிழ்க் குடும்பங்களைச் சார்ந்தவர்கள், வெளிநாடு சென்று கல்வி கற்று, உயர்மட்ட வேலைகளில் அமர்ந்து தசாப்தங்கள் பல உருண்டு ஓடி விட்டன. பின்னர், இனப் பிரச்சினை போராளி இயக்கமாக மாறி, பின்னர் இனப்போராக உருவெடுத்த காலகட்டங்களில் வசதி இருந்தும் இல்லாத தமிழ் மக்கள் தங்களது இளைய சமுதாயத்தை எந்த தியாகத்தை செய்தாவது வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு கருதி அனுப்ப வேண்டிய கட்டாயம் உருவானது.
இந்த இரு பிரிவினரையும் சாராதோர் மட்டுமே இன்றளவும் இலங்கையில் தங்கிவிட வேண்டிய கட்டாயம் உருவானது. அதிலும், இனப்போரில் உயிரை இழக்காதவர்கள் மட்டுமே இன்று போர் பகுதிகளில் தங்களது உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தங்களுடைய பகுதிகளில் வேலை வாய்ப்பு இல்லை. அதே சமயம் அவர்களில் ஒவ்வொருவரை நம்பியும், ஒரு டஜன் வயோதிபர்களும், சிறார்களும், போரில் கை, கால் மற்றும் உடைமைகளை இழந்த உறவினர்கள் உள்ளனர்.
இலங்கையில் இப்போது தங்கிவிட்ட பல தமிழர்களுக்கு 'மொழி காரணம்' அல்லது இனப் பிரச்சினையின் பிற அலகுகளால் இழப்புகள் ஏற்பட்டதா என்பது ஆய்ந்து அறிவதற்கு முடியாத விடயமாகி விட்டது. அவர்களது நிலங்களை இராணுவம் கையகப்படுத்துவதும் இனப்பிரச்சினை, போராளி குழுக்களுக்கு இடமளித்து, இனப்போராக மாறிய கால கட்டத்திலேயே நிகழ்ந்தது. அவர்களது இளைஞர்களே கடைசி வரை போரில் பங்குபெற்றோ, பிணைக் கைதிகளாகவோ உயிரிழந்தனர். அது காரணமாகவே அரசின் சந்தேகக் கண்களில் இன்னமும் தவறுதலாகவே காட்சி தருகின்றனர்.
இவர்களில் ஒருவருக்கேனும் வேலை வாய்ப்பிற்கோ, மற்ற விதங்களில் பண உதவியோ செய்து தர முன் வராத தமிழ்த் தலைவர்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அரசாங்கம் வேலை வாய்ப்பு பெற்று தருவதை குறை கூறுவது, விந்தையானது, வேதனையானது. தமிழர், சிங்களவர் என்ற இரு இனத்தவரும் பிறரது மொழியை படிக்க முயலாத காலகட்டத்தில், இராணுவம் உட்பட அரச பணிகளில் தமிழ் இளைஞர்கள் சேர்க்கப்பட்டால், அன்றாட அளவளாவல் மூலம் தமிழ் இனத்தின் மீதான தற்போதைய குரோதமும் சந்தேகமும் குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இன்றைய பின்னணியில், எவ்வளவுக்கு எவ்வளவு, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் தமிழ் தலைமைகள் உறுதியாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு, இரு இன மக்களின் இடையேயான தொடர்புகளும் உறுதிபட வேண்டும். இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள், சிங்கள மக்களே தங்களது அரசியல் தலைமைகளின் முகத்திரையை கிழித்து தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுக்க அவர்களை கட்டாயபடுத்தும் நாள் வரும். வர வேண்டும். எத்தனையோ விதங்களில் முயற்சி செய்த தமிழ் தலைமைகள், இது போன்ற இயற்கையான முயற்சிகளை வெறுத்து ஒதுக்குவதும் தவறாக சித்திகரிப்பதும் தமிழ் மக்களுக்கு பயன்தரும் விடயம் அல்ல.
தற்போது இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் தமிழ் யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கப்படுமே அன்றி, போர் பயிற்சி வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் இரு வேறு கருத்துகள் தமிழ் மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், தமிழ் இளைஞர்களுக்கு, குறிப்பாக யுவதிகள் வேலைக்கு சென்று குடும்பத்தையும் தங்களை அண்டியுள்ள பிறரையும் காப்பாற்ற வேண்டுமா, அல்லது அனைவருமே தொடர்ந்து பட்டினி கிடக்க வேண்டுமா, என்பதை சமூக தலைமைகள் தீர்மானிக்க வேண்டும்.
பிரச்சினையின் மற்றொரு அலகு, இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் தமிழ் யுவதிகளுக்கு போர்ப் பயிற்சி கொடுக்கப்பட மாட்டாது என்பது. இது விடயத்தில், அந்தந்த பெண்களுக்கு தங்களது குடும்ப சூழ்நிலை மற்றும் தங்களது தன்னம்பிக்கை, விருப்பு - வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவு எடுப்பதற்கான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, அதனை அரசியல் ஆக்கி விடக்கூடாது. இதுவே, பின்னர் தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அரசு எடுத்தாலும் கடை பிடிக்கப்பட வேண்டும்.
இனப்போர் முடிந்த காலகட்டத்தில், காவற்துறையில் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தற்போது, இராணுவத்தில் 109 தமிழ் யுவதிகள் சேர்ந்துள்ளனர். ஆனால், தமிழர்கள் யாருமே இரு துறைகளிலும் உயர் பதவிகளில் அமர்த்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எந்த நாடாக இருந்தாலும், எந்த அரசு பதவியில் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில், உயர் பதவிகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு கோரிக்கை.
அரசியல் தவிர எல்லா துறைகளிலும் கீழிருந்து மேலே ஒவ்வொரு அடியாக பதவி உயர்வு பெறுவதே முறையாக உள்ளது. எனவே, இராணுவம் மற்றும் காவற்துறையில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எல்லா பகுதிகளிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றே தமிழ் அரசியல் தலைமை முறையீடு வைக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே, அடுத்த 10 - 15 ஆண்டுகளில் இரு துறைகளிலும் உயர் பதவிகளில் தமிழர்கள் மீண்டும் அமர்வதற்கான வாய்ப்பு தோன்றும்.
இந்த ஒரு காரணத்தினால், தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவ தலைமை முழுவதுமாக நம்பாததினால் தான், அவர்களை உயர் பதவியில் அமர்த்தவில்லை என்பதில் உண்மை இருக்க முடியாது. ஆனால் அதனால் மட்டுமே அவர்களுக்கு போர் பயிற்சி அளிப்பதற்கு அரசு தற்போது தயக்கம் காட்டுகிறது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை எனலாம்.
ஓவ்வொரு தமிழ் இளைஞனையும் யுவதியையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை படையினராக சித்தரித்து பெருமைப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள், தற்போது, அரசு, அவர்களை அப்பாவி தமிழ் மக்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைபெறாத விடயம். அது மட்டுமல்ல. தங்களை ஒத்த பிற தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர்களது கட்சிகளையும் இன்னமும் தங்களில் ஒரு பகுதியனராக ஏற்றுக்கொள்ளாத இந்த கட்சிகள், எப்படி தமிழ் இளைஞர்களை மட்டும் இராணுவம் சாமானியர்களாகவே பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது?
எது எப்படியோ? இன்று இராணுவம் மற்றும் காவற்துறை அல்லது அரசின் பிற துறைகளில் சேர்த்துக் கொள்ளப்படும் தமிழர்கள் எந்த சமுதாயத்தையோ அல்லது அரசியல் பின்புலத்தைச் சார்ந்தவர்களாகவோ இருந்தாலும் அவர்களும் தமிழர்களே. இனப் போருக்கு பின்னர் இலங்கையில் தொண்ணூறாயிரத்திற்கும் அதிகமான தமிழ் விதவைகள் உள்ளனர் என்று அரசே ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், அவர்களில் நூறு பேர் மாதத்திற்கு தலா 50,000 ரூபாய் சம்பளமாக பெறுவர் என்று இராணுவம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தால், அதனை போற்றி பாராட்டவிட்டாலும், தூற்றி, குறை கூறாமலாவது இருக்கலாம்!