தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றிய பெண்மணியின் குழந்தை பூனைக்குட்டியிடம் சொல்கிறது. ‘உள்ளே வராதே, அம்மா உன்னை அடிப்பார்’. அதற்கு அம்மா சொல்கிறார், ‘நான் பூனையை அடிக்கமாட்டேன். ஆனால், அது கொண்டுவரும் கிருமிகளை இந்த சோப் கொண்டு கொன்றுவிடுவேன்’.
இப்படி நுண்ணுயிர்கள் என்றாலே ஒரு கொலை வெறியை நமது ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இந்த பரப்பல் வேலையைச் செய்வது கிருமிகளை அழிக்கும் சோப்புகளை அல்லது அதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள்தான்.
ஆனால், நான் எங்கள் வீட்டின் புளிய மரத்தின் கீழ்தான் விளையாடி வளர்ந்தேன். சின்ன பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவேன். உடல் முழுவதும் புழுதி இருக்கும். நாங்கள் வளர்த்த கருப்பு என்ற நாயோடு கட்டிப் புரள்வேன். எனக்கு என் குழந்தைப் பருவத்தில் ‘கிருமி’களைப் பற்றி தெரியாதது மட்டுமல்ல, அவை என்னை ஒன்றும் செய்துவிடவும் இல்லை. திடகாத்திரமான ஆளாக வளர்ந்து நிற்கிறேன். காய்ச்சல், தலைவலி, நோய்நொடி என்று நான் படுப்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும். அப்படி வந்தால் கூட ஹோமியோ மருத்துவம் எடுத்துக்கொள்ளும் ‘கஞ்சன்’ நான். கிருமிகளைக் கொல்லும் ஆங்கில மருந்துகள் என்றாலே எனக்கு அச்சம்.
எனது வீட்டிற்கு அருகே ஒரு குப்பைக் களம் இருக்கிறது. அங்கே குப்பை கொட்ட வரும் வண்டிகளின் நாற்றம் குடலைப் பிடுங்கும். குப்பை பொறுக்குபவர்கள் குப்பைகளைக் கிளறுவார்கள். அவற்றில் கிடைகும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அவர்களில் ஒரு பெண்ணும் இருக்கிறார்.
அந்தப் பெண் ஒரு குழந்தையோடு வருகிறாள். இந்த வேலைகளின் ஊடே குழந்தைக்குப் பாலும் ஊட்டுவாள். அந்தக் குழுந்தையை எத்தனைக் கிருமிகள் தாக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன்.
அங்கே வேலை செய்பவர்களுக்கு கையுறை இல்லை. அவர்கள் கொண்டுவரும் உணவை அங்கே வைத்துத்தான் சாப்பிடுகிறார்கள். ஒன்றும் பெரிதாக அவர்களுக்கு ஆகிவிடவில்லை.
மும்பையில் ஆஸ்த்மா பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மும்பையின் சேரிகளில் வாழ் குழந்தைகள் மத்தியிலும் மும்பையின் பணக்கார வீடுகளின் குழந்தைகள் மத்தியிலும் ஆய்வு செய்யப்பட்டது. பணக்கார வீடுகளில், கிருமிகள் ஆபத்தில்லாத வீடுகளில் வாழும் குழந்தைகளில் 10 பேரில் ஒருவருக்கு ஆஸ்த்மா இருந்தது.
சேரிகளில் கணக்கற்ற கிருமிகள் குழந்தைகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. அதன் காரணமாக அந்தக் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி மிக வலுவாக இருக்கிறது. ஆனால், பணக்கார வீட்டுக் குழந்தைகள் சாதாரண சளி, காய்ச்சலுக்குக் கூட கிருமிகள் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சேரிக் குழந்தைகள் இதுபோன்ற நுண்ணுயிர் ஒழிப்பு மருந்துகளை அரிதாகவே எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, சேரிக் குழந்தைகளின் கிருமிகள் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருக்க, பணக்காரக் குழந்தைகள் எளிதில் நோய்க்கு ஆளாகிறார்கள்.
தவழும் குழந்தை அங்கேயும் இங்கேயும் அலைந்து கையில் கிடைத்த எதனையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பொருளுடன் சேர்ந்து நுண்ணுயிர்களும் குழந்தையின் உடலுக்குள் செல்கின்றன. அவை குழந்தையின் எதிர்ப்பு ஆற்றலை, தாக்குப் பிடிக்கும் திறனை வளர்த்துவிட்டு விடுகின்றன.
இயல்பான குழந்தை பிறப்பின்போது, தாயின் பிறப்புறுப்பு வழியே வெளிவரும் குழந்தை பல கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை தன் தாயிடமிருந்து பெறுகிறது. தாயின் பிறப்புறுப்பில் உள்ள ‘கிருமிகள்’, எல்லாம் குழந்தையின் வாய், மூக்கு போன்ற உடல் திறப்புகளின் வழியே குழந்தையின் உடலை அடைகின்றன. அதன் காரணமாக, குழந்தையின் உடல் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றது. இதனால்தான் சிசேரியன் முறையில் பிறந்த குழந்தைகள் அதிக நோய்த் தாக்குதலுக்கு ஆளாக, இயல்பான முறையில் பிறந்த குழந்தைகள் வலுவுள்ளவர்களாக இருக்கின்றனர்.
கிருமி நாசினிகள், அவற்றைக் கொண்ட சோப்புகளைப் பயன்படுத்தினால் கிருமிகளை ஒழித்துவிடலாம் என்பது திட்டமிட்டு திணிக்கப்படும் முட்டாள்தனம். ஏனென்றால், நமது உடலில் உள்ள ஒரு செல்லுக்கு ஒன்பது கிருமி செல்கள் இருக்கின்றன. அப்படியானால் ஒவ்வொருவர் உடலிலும் எத்தனை ‘கிருமிகள்’ இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
மனித உடலில் 25,000 மனித மரபணுக்கள் இருக்கின்றன. அதேசமயம், நமது உடலில் இருக்கும் கிருமி மரபணுக்களின் எண்ணிக்கை 2 முதல் 3 டிரில்லியன்கள் வரை இருக்கும். இந்தக் கிருமிகளை எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டுதான் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால், நுண்ணுயிர்களை, கிருமிகளை வெறுக்கக் காரணம் எதுவுமில்லை. கிருமிகளையெல்லாம் ஒழித்துவிட்டு சுத்தமான மனிதராக உங்களால் ஒரு நாளும் ஆக முடியாது.
இன்னும் சொல்லப்போனால், நம்மைக் காப்பாற்றும் வேலையைச் செய்வதும் இந்த வெறுக்கப்படும் நுண்ணுயிர்கள்தான்.
நீங்கள் ஆண்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் குடல் மற்றும் உணவுப் பாதையில் உள்ள நுண்ணுயிர்களை அது கொன்றுவிடுகிறது. அதன் காரணமாக ஆண்டிபயாடிக் எடுத்துக்கொண்டவர் நோய் எதிர்ப்புச் சக்தி இழப்புக்கு ஆளாகிறார்.
இன்றைய மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? மரணம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தான குடல் தொற்று நோய்களுக்கு மருந்தாக, ஆரோக்கியமான ஒருவரின் புத்தம் புதிய மலத்தை எடுத்து நோய்த் தாக்குதலுக்கு ஆளானவரின் உடலில் செலுத்த வேண்டும் என்கிறது. அதாவது சிறுநீரக மாற்று போல மல மாற்று சிகிச்சை. ஒருவரின் தாய் உயிரோடு இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர். தாயின் மலத்தை நோயுற்றவருக்கு மாற்றினால், அவர் சில நிமிடங்களில் குணமாகிவிடுவார். நம்புங்கள்… சில நிமிடங்களில்! நமது தாயின் குடலில் இருக்கும் நுண்ணுயிர்கள் நமது குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை ஒத்தே இருக்கும். எனவே, நமது குடலில், உணவுப் பாதையில் இருக்கும் நுண்ணுயிர்களை மீட்டெடுப்பதுதான் நாம் விரைவாக நோயெதிர்ப்பு ஆற்றலை அடைய வழிவகுக்கும்.
நச்சுப்பொருள் எதிர்ப்பு மருந்துகள் (Antiseptics) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) இவற்றைக் கொண்ட சோப்புகள் புதிய, அதி ஆற்றல் மிக்க புதிய கிருமிகளை உருவாக்கிவிடுகின்றன. பல மருந்துகளைத் தாங்கி தாக்குப் பிடித்து வாழும் ‘புதிய கிருமி’கள் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுள்ளன. நாம் எந்த அளவு விரைவாக விழித்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
விரைவாக அழுக்கைச் சாப்பிடும் சலவை பவுடர்கள் மற்றொரு ஆபத்து. அவை bacillus subtilis என்ற நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளன. அந்த நுண்ணுயிர் துணிகளின் அழுக்கை அகற்றும்போது புரோட்டின் படிவு ஒன்றைத் துணிகளுக்கு அளிக்கின்றது. இது நுரையீரலுக்கு விஷமாகும். அது குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் ஒன்றை உருவாக்குகின்றன. அதன் பெயர் fibrosing alveolitis (cryptogenic) என்பதாகும்.
நாம் நமது சிந்தனை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும். நச்சுக் கிருமிகள் வாழும் உலகத்தில் நாம் வாழவில்லை. பலகோடி நுண்ணுயிர்களும் உயிர்களும் வாழும் உலகத்தில் நாமும் வாழ்கிறோம். இந்த உயிர்களின் வாழ்க்கைச் சமநிலை பல ஆயிரம் ஆண்டுகளாக, லட்சம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது. மனித உடல் அனைத்து நுண்ணுயிர்களையும் தாக்குப் பிடித்து வாழும் தகுதி உடையது என்பதாலேயே ஏறக்குறைய 1 லட்சம் ஆண்டுகளைத் தாண்டி மனித குலம் தழைத்தோங்கி வந்திருக்கிறது.
எதில் காசு பார்க்கலாம் என்று தேடித் திரியும் தொழில் முதலாளிகள் பரப்பும் கிருமிகளுக்கு எதிரான யுத்தம் என்ற மாயையை நாம் கலைந்து கொள்ள வேண்டும். நடிகர் பிரபு நடத்தும் நகைக்கடை யுத்தம் போன்ற காமெடி இந்த ‘அறிவியல்’ விளம்பரங்கள். ஆனால், காமெடி என்பது பலருக்கும் புரிவதில்லை. இந்த ‘கிருமி’ பயம், சுயலாபத்துக்கான, பண வேட்டைக்கான பிரச்சாரம் என்று சொல்லியாக, பிரச்சாரம் செய்தாக வேண்டும்.
‘கிருமிகளை’ விட பெரிய அபாயம் உயிர்களின் சமநிலையைச் சிதைக்கும் வணிக நடவடிக்கைகள்தான். இத்தனைக் காலம் ஜீவித்திருந்த உலக உயிர் சமநிலையை பண முதலைகள் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
நல்லது. குழந்தைகள் வெளியே சென்று சூரிய வெளிச்சத்தில் ‘அழுக்கில்’விளையாடட்டும். குழந்தையைக் குளிப்பாட்ட சாதாரண சோப்பைப் பயன்படுத்துங்கள். அது போதும். கிருமி எதிர்ப்பு சோப்பு என்று தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து அதன்படி குழந்தையைக் குளிப்பாட்டினால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும். அதிஅற்புத கிருமி எதிர்ப்பு சோப் போன்ற பொருட்களை வாங்கி மிச்சமிருக்கும் உங்கள் சம்பாத்தியத்தைச் சாப்பிட, அப்புறம் ‘மருத்துவ முதலாளிகள்’ வந்துவிடுவார்கள். ஜாக்கிரதை!
- சி.மதிவாணன் ( mathivanan_c@yahoo.com)
(இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் தகவல்களை B. M. HEGDE என்ற பேராசிரியர் எழுதிய கட்டுரையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். அவரின் இ மெயில் hegdebm@gmail.com. இக்கட்டுரை அக்டோபர் 28 இந்து நாளிதழில் வெளியாயிற்று.)