மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமைதி காத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்தனை காலமாக அமைதி காக்காமல் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இத்தனை வழக்குகள் கோர்ட்டுக்கு வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.
மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்தபோதுதான் இவ்வாறு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர் என்ம் அவர் தெரிவித்துள்ளார்.