10/16/2012

| |

நியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்கு புற்றுநோய்

நியூசிலாந்து அணியின் தலைவரும், உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான மார்ட்டின் குரோ - புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிம்போமா என்ற வகைப் புற்றுநோயே அவருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் தனது 50ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியிருந்த மார்ட்டின் குரோ, லிம்போமா என்ற நிணநீர்க்குழியத்தைத் தாக்கும் புற்றுநோய் வகையால் தாக்கப்பட்டிருப்பது குறித்த தகவலை அவரது முகாமையாளர் வெளிப்படுத்தினார்.

அவருக்கு புற்றுநோய் காணப்படுவது தற்போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பம் இன்னமும் அதன் அதிர்ச்சியிலேயே காணப்படுவதாகவும் தெரிவித்த அவரது முகாமையாளர், அவர்கள் தனிமையை வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நியூசிலாந்து அணி சார்பாக 77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய மார்ட்டின் குரோ 45.36 என்ற சராசரியில் 17 சதங்கள், 18 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 5444 ஓட்டங்களையும், 143 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 38.55 என்ற சராசரியில் 4 சதங்கள், 34 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 4704 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

1996ஆம் ஆண்டு முதற்தரப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற மார்ட்டின் குரோ, அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு மீள்வருகையொன்றை மேற்கொள்ள முயன்ற போதிலும், உள்ளூர்ப் போட்டியொன்றில் பங்குபற்றும் போது ஏற்பட்ட உபாதை காரணமாக மேலதிக போட்டிகள் எவற்றிலும் பங்குபற்றியிருக்கவில்லை.