10/31/2012

| |

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்கொலைக்கு முயற்சி

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

42 வயதான இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை தடுப்பதற்காக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமைச் சேர்ந்த சுமார் 50பேர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துவதற்காக, நீதிமன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட கடைசி நிமிட முயற்சியும் தோல்வி கண்டுள்ளது. 

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இவர், தனது சகோதரர்கள் தனித் தமிழீழத்துக்காகப் போராடி யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இவர், தற்போது மேற்படி தடுப்பு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான தற்கொலை முயற்சிகள் இவரது புகலிடக் கோரிக்கை மீதான முடிவில் எந்த செல்வாக்கையும் செலுத்தாது என பேச்சாளர் ஒருவர் கூறினார். இவரது காயங்கள் கடுமையானவை அல்ல என திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

பிந்தி கிடைத்த செய்திகளின்படி, இவரது மேன்முறையீடு தொடர்பாக சிட்னியில் நடைபெற்ற விசாரணையின் பின் இவரை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.