10/12/2012

| |

ரஷிய நிறுவனத்திற்கு கூடங்குளம் அணுமின் நிலைய விபத்து இழப்பீட்டிலிருந்து விதிவிலக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிறுவன ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்துக்கு எதிராக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் ரஷிய நிறுவனத்தையும் பொறுப்பு ஏற்கச் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், இந்த அமைப்புகளின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பொது நல வழக்கு மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து ரஷிய நிறுவனத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது சட்ட விரோதம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் இருந்து ரஷிய நிறுவனத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

இந்த பிரச்சினை குறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், அணுசக்தி துறைக்கும் நோட்டீசு அனுப்பவும் அவர்கள் உத்தரவிட்டனர். ரஷிய நிறுவனத்துக்கு விதிவிலக்கு வழங்கும் விபத்து இழப்பீடு சட்டம் செல்லாது என்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், கூடங்குளம் பிரச்சினை தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.