10/16/2012

| |

உலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கிய விஞ்ஞானி மரணம்


உலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை (செம்மறியாடு) உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் கீத் கேம்பல் தனது 58ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். 

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு குளோனிங் முறை மூலம் முதன் முதலில் டோலி என்ற செம்மறியாடு உருவாக்கப்பட்டது. 

முதலில் சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பின்னர் வாடகைத்தாய்க்கு மாற்றப்பட்டு, 1996ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி பிறந்தது. 

டோலியின் உருவாக்கத்தில் தலைமை வகித்த லான் வில்மட் என்பவர்தான் இந்த செம்மறியாட்டின் படைப்பாளி என அழைக்கப்பட்டு வருகிறார். 

இந்நிலையில், கீத் இறந்த தகவலை எடின்பர்க் பல்கலைக்கழக தகவல்கள் உறுதி செய்துள்ளன. தனது சோதனையில் 66 சதவீத பங்களிப்பை அளித்தவர் பேராசிரியர் கீத் கேம்பல் என, கீத் பற்றி வில்மட் குறிப்பிட்டுள்ளார். 

1991 முதல் 1999ஆம் ஆண்டு வரை கீத் அந்த சோதனைக்கூடத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் மேம்பாட்டு துறையின் பேராசிரியராக கீத் பணிபுரிந்துள்ளார். 

டோலியின் உருவாக்கத்திற்குப் பின்னர் வெகு விரைவிலேயே பன்றி, ஆடு, குதிரை, நாய் மற்றும் பூனை போன்ற உயிரினங்கள் குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

டோலியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கான மறுசந்திப்பு நிகழ்ச்சி ஒன்று கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் கீத் கேம்பல் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.