10/16/2012

| |

பிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து










பிலிப்பைன்ஸிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும்  சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் நேற்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளன.


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அகூய்னோ மற்றும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர் முராட் ஏபிராஹிம் முன்னிலையில் இவ் ஒப்பந்தம் கையெழுத்தானது 
இதற்கு முன்னர் இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டு பரிசுப்பொருள்களை பரிமாறிக்கொண்டனர். 60 வயதான முராட் ஏபிராஹிம் தான் அரச மாளிகைக்கு விஜயம் செய்த முதலாவது மோரோ இயக்கத் தலைவராவர். 
கிட்டத்தட்ட 120,000 உயிர்களைக் காவுகொண்ட 40 ஆண்டுகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடனான நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பின்னர் இவ் ஒப்பந்தக் கட்டமைப்பு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.   மலேஷியாவில் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது. 
கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டின் தென்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு பிரதேசத்துக்கு புதியயொரு தன்னாட்சிப் பிராந்தியத்தை ஏற்படுத்த இவ் ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.