அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.மிகப் பெரியதொரு நிலப்பரப்பில் பாரிய சேதங்களையும் இந்த சூறாவளி ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கின்ற நியூ யார்க் மாகாணத்தில் இது "பேரழிவுகள்" ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார்.
நியூ யார்க்
நியூ யார்க் நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலே நான்கு மீட்டர்கள் உயரத்துக்கு கடல்மட்டம் அதிகரித்து ஊருக்குள் நீர் புகுந்ததில், சுரங்க ரயில் பாதை வலயமைப்புக்குள்ளும், நிலத்தடி கார் நிறுத்தும் வளாகங்களுக்குள்ளும் நீரில் மூழ்கியுள்ளன.
நியூ யார்க் நகரத்தில் மின் ஊக்க நிலையம் ஒன்று வெடித்திருக்கிறது, மருத்துவமனை ஒன்றிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது. சூறாவளியின்போது தீப்பிடித்த 50 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகளை ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து கட்டமைப்புகள் இதுவரை சந்தித்ததே இல்லை என்று அந்நகர போக்குவரத்துத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நகரின் பெரும்பகுதி இடங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
இந்த சூறாவளியின் மிக மோசமான கட்டத்தை தாண்டிவிட்டதாக நகரத் தந்தை மைக்கேல் புளூம்பர்க் கூறினார்.
இனி மெல்ல மெல்ல வெள்ளம் வடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரையோரப் பகுதிகள்
அமெரிக்காவின் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றிலுமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சூறாவளியில் மரங்கள் வேரொடு சாய்ததன் காரணமாகவும் பிற காரணங்களினாலும் ஆட்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகரங்களில் அறுபத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் இல்லை.
போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பல லட்சக்கணக்கானோர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், இரசாயன தொழிற்சாலைகள் போன்றவை சூறாவளியை முன்னிட்டு நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த சூறாவளியால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் என்பது இரண்டாயிரம் கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
இரண்டாவது நாளாக இன்றும் நியூ யார்க் பங்கு சந்தை மூடப்பட்டிருக்கும்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை இரண்டு வேட்பாளர்களுமே நிறுத்திவைத்துள்ளனர்.
கனடா
இந்தச் சூறாவளி அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி நகர தற்சமயம் கனடாவில் பலத்த காற்று வீசிவருகிறது.
பெயர்ப் பலகை ஒன்று காற்றில் பிடுங்கிக்கொண்டு வந்து தாக்கியதில் அங்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.