10/16/2012

| |

தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாக். மாணவிக்கு இங்கிலாந்தில் சிகிச்சை; தனி விமானத்தில் அனுப்பிவைப்பு





தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப் சாய் (வயது 14), மேலதிக சிகிச்சைக்காக விசேட விமானம் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 


பெண்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மேற்படி மாணவியின் பாடசாலைக்கு தேடிச்சென்ற தலிபான் தீவிரவாதிகள், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். 

இதனால், அம்மாணவியின் தலை, மற்றும் உடலின் பல பாகங்கள் காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராவல்பிண்டி ஆஸ்பத்திரியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் முதுகில் பாய்ந்திருந்த துப்பாக்கி ரவை சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் அவர் முழுமையாக குணமடைய வேண்டுமாயின் வெளிநாட்டில் வைத்து மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், மாணவி மலாலாவுக்கு சிகிச்சையளிக்க ஐக்கிய அரபு நாட்டின் அரச குடும்பம் முன்வந்தது. இதைத் தொடர்ந்து மாணவியை மேலதிக சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது.  

இதனையடுத்து, மேற்படி அரச குடும்பத்தினர் ஏற்பாடு செய்த அம்பியூலன்ஸ் விமானம் மூலம் குறித்த மாணவி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் வைத்தியர்கள் அறுவரும் சென்றுள்ளனர். 

இதற்கிடையே மலாலாவை சுட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும் மலாலா குணமடைய வேண்டி பாகிஸ்தானில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.