10/19/2012

| |

நித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்

மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதி பதவியில் இருந்து நித்தியானந்தா இரண்டொரு நாளில் விலக இருப்பதாக, மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு சங்கடங்கள், துன்பங்கள் ஏற்படக்கூடிய அளவில் இருந்தால், மதுரை ஆதீனதத்தின இளைய பீடாதிபதி என்ற பொறுப்பில் இருந்து விலக நித்தியானந்தா தயாராக இருப்பதாகவும், அதுபற்றி இரண்டொரு நாளில் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அருணகிரிநாதர் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து, நித்தியானந்தாவுடன் தான் பேசியதாகவும், என்ன காரணத்தால் பதவி விலகுகிறார் என்பதை அவர் அப்போது விளக்குவார் என்றும் அருணகிரிநாதர் தெரிவித்தார்.
மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், அத்தகைய பொறுப்பிற்கு அவர் தகுதியற்றவர் என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால்தான் இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கிறாரா என்று கேட்டபோது, ஆம் என்று ஒப்புக்கொண்டார் அருணகிரிநாதர்.
தமிழக அரசின் நெருக்கடி காரணம்
''தமிழக அரசு இதுபோன்று நெருக்கடி கொடுக்கிறது. நீதிமன்றமும் விரும்பவில்லை. அதனால்தான் அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது’’, என்றார் அருணகிரிநாதர்.
மதுரை ஆதீனத்தைக் கையகப்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, ஆதீனமே கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதலாமா என்று கேட்டபோது, அது நித்தியானந்தாவின் முடிவு என்றும், அதுபற்றி தான் பின்னர் விளக்கமளிப்பதாகவும் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் தெரிவித்தார்
.நித்தியானந்தா விலகுவதை அடுத்து, மதுரை ஆதீனத்திலிருந்தே ஒருவரை இளைய ஆதீனமாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று கேட்டபோது, அதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார் அருணகிரிநாதர்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதுதொடர்பாக தமிழக அரசு தங்கள் தரப்பு நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போது, நித்தியானந்தா பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்றும், அவர் எந்தவித மத அமைப்புக்கும் தலைமையேற்க அருகதையற்றவர் என்றும் தெரிவித்தது.
தலைமை பீடாதிபதிக்குப் பிறகு அவரது சீடர்களில் ஒருவரே அப்பதவியை ஏற்க வேண்டும், அந்த விதியை மீறி நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருப்பது அவரது சொத்துக்களை அபகரிப்பதற்காகத்தான் என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நிலைப்பாட்டை அடுத்து, மதுரை ஆதீனம் மற்றும் நித்தியானந்தாவுக்கு அழுத்தங்கள் அதிகரித்தன.