10/27/2012

| |

இன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்கை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு



சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டிய சகோதரர்களின் 211வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 எஸ்.பி.,க்கள் தலைமையில் ஒரு கூடுதல் எஸ்.பி, 12 டி.எஸ்.பிக்கள், 4 பட்டாலியன் போலீஸ், விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 போலீசார் மற்றும் சிவகங்கை மாவட்ட போலீசார் என 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதுதவிர, 11 மொபைல் டீம்கள், 22 எஸ்கார்டு டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த 10 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அஞ்சலி செலுத்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு அமைப்பு களை  சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.



மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது.

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

தமிழ்நாடு அரசு மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம்அமைத்துள்ளது. இங்கு சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் 8 அடி உயர முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.