10/15/2012

| |

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஓவியக்கண்காட்சி

கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு மாவட்டச் செயலக பண்பாட்டுப் பிரிவு நடத்தும் 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் “பேசப்படாதது” என்ற தலைப்பிலான ஓவியக்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறும் இவ் தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பின் சமூகங்கள், பண்பாடுகள், பண்பாட்டுருவாக்கங்கள்: பேசாப்பொருளும்- பல்வகைமைகளும் எனும் தொனிப்பொருளில் நடைபெறுகிறது.
ஆய்வரங்கு மற்றும் ஆற்றுகைகள் அடங்கிய தமிழ் இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக ஓவியக்கண்காட்சி நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. தவராசரெட்ணம், சதாசிவம் ஆகிய இலக்கிய ஆர்வலர்கள் இக்கண்காட்சியை திறந்து வைத்தனர்.
ஓவியர்களான சுசிமன் நிர்மலவாசன், ப.புஸ்பகாந்தன், வாசுகி ஜெயசங்கர், ஆர்.ருசாந்தன் (கிக்கோ), பா.கோபி ரமணன் ஆகியோரது ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.