10/16/2012

| |

அமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்துல் கலாம் திறந்து வைத்தார்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 7 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மகாத்மா காந்தியின் 7 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் டேவ் நகர மேயர் ஜூடி பவுல் கலந்து கொண்டார்.
புளோரிடா மாகாணத்தில் அரை ஏக்கர் நிலத்தில் 800 பவுண்டு (சுமார் ரூ.75 ஆயிரம்) செலவில் மகாத்மா காந்தி சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைப்பு குழுவின் உறுப்பினரான பாபு வர்கீஸ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காந்தியின் வாழ்க்கை பயணத்தை பல படிகளில் சித்திரக்கும் வகையில் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலை அமைப்பு குழுவின் உறுப்பினர்கள் கூறியதாவது, அமெரிக்காவில் காந்தி சதுக்கம் நிறுவப்பட்டுள்ளதன் மூலம் இங்குள்ள இந்தியர்களின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேவ் நகர மேயர் ஜூடி பால், ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதியை, உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தி நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.