10/29/2012

| |

சாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'

அமெரிக்காவை தாக்கவிருக்கும் ஹரிக்கேன் சாண்டி என்னும் சூறாவளி அங்கு நாட்டின் மக்கள் தொகை மிகவும் செறிவாக வாழுகின்ற கிழக்கு கரையோரத்தில் 5 கோடி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
முக்கிய நீர்வழிகள் நாட்டின் உட்புறம் வரை மிகவும் ஆழமாக ஊடுருவி உள்ளதால், குறிப்பாக நியூயோர்க் நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தாழ்வான பகுதிகளில் இருந்து மூன்று லட்சத்து எழுபத்தையாயிரம் மக்கள் வெளியேற வேண்டும் என்று நியூயோர்க் மேயர் ஞாயிறன்று உத்தரவிட்டிருக்கிறார்.
நியூயோர்க் துறைமுகம் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கிறது. 500 க்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பஸ் மற்றும் சுரங்க வழி போக்குவரத்துக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளி நெருங்கிவரும் நிலையில் பள்ளிக்கூடங்களும், பங்குச் சந்தையும் மூடப்பட்டுள்ளன.
அதிபர் தேர்தல் பற்றிய செய்திகளுக்குப் பதிலாக உள்ளூர் ஊடகங்களை சூறாவளி குறித்த செய்திகளே பெரிதும் ஆக்கிரமித்திருப்பதாக அங்கு சென்றுள்ள எமது தமிழோசை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகிறார்.
நாட்டின் கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும், வாசிங்டன் நகரிலும் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.