10/18/2012

| |

15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'

திவிநெகும (வாழ்வெழுச்சி) திணைக்கள சட்ட மூலம் நாட்டின் 15 இலட்சம் குடும்பங்களினதும் 27,000 அரச அதிகாரிகளினதும் எதிர்காலம் சம்பந்தமானது என்பதால் தன்னிச்சையான விமர்சனங்களை மேற்கொள்பவர்கள் இதனைச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
திவிநெகும திணைக்கள சட்ட மூலத்தை நிறைவேற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிப்போர் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது முக்கியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
“திவிநெகும” திணைக்கள சட்டமூலம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான தடைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சின் “ஊடக இல்லத்தில்” நடைபெற்றது.
அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ரெஜினோல்ட் குரே, தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்:
திவிநெகும சட்டமூலம் சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்குப் பாதகமானது என பல விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்த சட்ட மூலத்தின் உண்மைத் தன்மையை கவனத்திற் கொண்டு தனிப்பட்ட கருத்துக்களையன்றி பொது நோக்கில் தகவல்களை வெளியிட ஊடகங்கள் முன்னிற்க வேண்டும். இந்த சட்ட மூலத்திற்கு எதிராக பல செய் திகள், கட்டுரைகள் எழுதப்பட் டிருந்ததைக் காண முடிந்தது.
இதை ஒரு எதிர்ப்புச் செயலாக பார்க்காமல் நியாயமான ரீதி யில் தகவல்களை வெளியிடுவது நன்மை பயக்கும். நான் “ராஜபக்ஷ“க்களில் ஒருவராக இருந்து இதுபற்றி குறிப்பிடுகிறேன் என்று நினைக்காமல் பொது நலனை முன்னிறுத்தி இதற்கான நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பாகும். “திவிநெகும” வாழ்க்கை எழுச்சித்திட்ட த்தை நாட்டில் நடைமுறைப்படுத்தியதற்கான நோக்கம் அதன் சாதகங்கள் பற்றியும் சமுர்த்தித் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வறிய மக்கள் அதனால் பெற்றுக்கொண்ட பயன்கள் தொடர்பிலும் அமைச்சர் இந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
சமுர்த்தி அதிகார சபை மற்றும் தெற்கு அபிவிருத்திக்கான அதிகார சபை ஆகியன இணைக்கப்பட்டதாக ‘திவிநெகும’ திணைக்களம் உருவாக்கப்பட்டதால் சமுர்த்தி அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் தொழில்களை இழக்கப்படுவார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எவ்வித உண்மையுமில்லை.
நாம் திவிநெகும திணைக்கள சட்ட மூலத்தை சாதாரண சட்ட மூலமாக பாராளுமன்றத்திற்குக் கெண்டு வந்திருக்க முடியும். எனினும் இதில் விசேட கவனத்துடன் செயற்பட்டுள்ளோம். இது தொடர்பில் பல்துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்டு தொழிற்சங்கங்களினது ஆலோசனை மற்றும் இணக்கப்பாடுகளைப் பெற்று பின் அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.
வறுமை நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது சமுர்த்தி அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்கள் ஏதாவது காரணத்தினால் அங்கவீனமுற்றால் அவர்களது குடும்பத்துக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மூன்று வலையமைப்புகளாக இதனைச் செயற்படுத்துவதே எமது நோக்கம். சமூகமாக இணைந்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சமூக நிதிய அமைப்பு என்ற வகையில் இந்த வலையமைப்பு செயற்படவுள்ளது. பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றுள்ள மக்கள் இணைந்த செயற்பாட்டின் மூலம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் இது.
சமுர்த்தி உதவி பெறும் மக்கள் திவிநெகும திணைக்கள உருவாக்கத்தால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இதுவரை காலமும் பெற்று வந்த நன்மைகள் தடையின்றி அவர்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும். இந்த சட்டமூலம் நீதிமன்றத்தின் தொடர்புடையதாக தற்போது உள்ளதால் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதுள்ளது.
எவ்வாறாயினும் உதவி நிவாரணங்களைப் பெறுவோர் அதனைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் உரிமை வாய்ப்புகள் அனைத்தும் இதில் உள்ளன. சமுர்த்தி, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன உள்Zர்க்கப்பட்டு திவிநெகும திணைக்களம் காலத்துக்குப் பொருத்தமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சேவைகள் அதிகரிக்கப்பட்டு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேவைப்படின் மேலதிகமான உத்தியோகத்தர்களையும் நியமிக்க முடியும். சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்கும் போது பின்பற்றப்படுகின்ற மாற்றங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. சாதாரண சட்ட திட்டங்களுக்கமையவே இந்த சட்டமூலமும் தயாரிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி உதவியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை வங்கிக் கணக்கு தொடர்பில் இரகசியம் பேணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.