10/31/2012

| |

கந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை

கந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குளம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் பண்டார தெரிவித்தார். 
மேற்படி குளத்தில் பொதுமக்கள் மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதால் குளத்துக்கு சேதமேற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
சுமார் ஆயிரம் பேர் மேற்படி குளத்தின் கரையில் இருந்து மாணிக்கக்கல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக குளத்தில் மாணிக்கக்கற்கள் தோன்றியிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

புத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில் மீட்பு

கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த ஐந்து மீனவர்களை முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். 
நீர்கொழும்பு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று ஆழ்கடல் மீன்பிடிக்காகச் சென்ற நிலையிலேயே இவர்கள் காணாமல் போயிருந்தனர். 
மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர்கள் கரைசேர்ந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 
இவர்கள் ஐவரும் காரைதீவு மற்றும் புத்தளம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
»»  (மேலும்)

| |

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்கொலைக்கு முயற்சி

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

42 வயதான இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை தடுப்பதற்காக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமைச் சேர்ந்த சுமார் 50பேர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துவதற்காக, நீதிமன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட கடைசி நிமிட முயற்சியும் தோல்வி கண்டுள்ளது. 

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இவர், தனது சகோதரர்கள் தனித் தமிழீழத்துக்காகப் போராடி யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இவர், தற்போது மேற்படி தடுப்பு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான தற்கொலை முயற்சிகள் இவரது புகலிடக் கோரிக்கை மீதான முடிவில் எந்த செல்வாக்கையும் செலுத்தாது என பேச்சாளர் ஒருவர் கூறினார். இவரது காயங்கள் கடுமையானவை அல்ல என திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

பிந்தி கிடைத்த செய்திகளின்படி, இவரது மேன்முறையீடு தொடர்பாக சிட்னியில் நடைபெற்ற விசாரணையின் பின் இவரை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
»»  (மேலும்)

| |

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்திரவுக்கு ஜனாதிபதி பணிப்பு

'சண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 
'சண்டி' சூறாவளி காரணமாக நியூயோர்க் உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டது. 
»»  (மேலும்)

| |

'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்


22  ஊழியர்களுடன் பயணித்த வியட்நாமிய சரக்கு கப்பலான சைகோன் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'நிலம்' சூறாவளியில் சிக்கி மூழ்கியுள்ளதாக கடல் தேடுதல் மற்றும் மீட்பு இணைப்பு மையம் அறிவித்துள்ளது. 
 
வியட்நாம் மியன்மாரிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 6500 தொன் மர உற்பத்தி பொருட்களை ஏற்றிச் சென்ற சைகோன் குயின் கப்பலே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. 103 மீற்றர் நீளமும் 17 மீற்றர் அகலமும் கொண்ட கப்பலில் பணியாற்றிய ஊழியர்களில் 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கப்டன் உட்பட நான்கு ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர். 
 
மியன்மாரிலிருந்து இந்தியாவுக்கு மர உற்பத்தி பொருட்களை ஏற்றிச் சென்ற சைகோன் குயின் கப்பலிருந்து ஒக்டோபர் 30 பி.ப 12.12 மணிக்கு கடல் தேடுதல் மற்றும் மீட்பு இணைப்பு மையத்திற்கு அவசர நிலைமை சமிக்ஞை கிடைத்தது. ஆனால் சிறிது நேரத்தில் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது. 
 
இதனைத் தொடர்ந்து கடல் தேடுதல் மற்றும் மீட்பு இணைப்பு மையம் இலங்கை, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அயலில் காணப்பட்ட கப்பல்களுக்கும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அவசர தகவல்களை அனுப்பியது.
 
'பசுபிக் ஸ்கிப்பர்' என்ற கப்பல் உயிர்காப்பு மிதவைகளை அணிந்தவாறு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 18 பேரை காப்பாற்றியது. காணாமல் போன நால்வரும் கடந்த இரவுவரையில்; மீட்கப்படவில்லை. அவர்களை மீட்கும்; முயற்சிகள் தொடர்கின்றன.
»»  (மேலும்)

10/30/2012

| |

அரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டும்

தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றிய பெண்மணியின் குழந்தை பூனைக்குட்டியிடம் சொல்கிறது. ‘உள்ளே வராதே, அம்மா உன்னை அடிப்பார்’. அதற்கு அம்மா சொல்கிறார், ‘நான் பூனையை அடிக்கமாட்டேன். ஆனால், அது கொண்டுவரும் கிருமிகளை இந்த சோப் கொண்டு கொன்றுவிடுவேன்’.
இப்படி நுண்ணுயிர்கள் என்றாலே ஒரு கொலை வெறியை நமது ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இந்த பரப்பல் வேலையைச் செய்வது கிருமிகளை அழிக்கும் சோப்புகளை அல்லது அதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள்தான்.
garbage_boy_640
ஆனால், நான் எங்கள் வீட்டின் புளிய மரத்தின் கீழ்தான் விளையாடி வளர்ந்தேன். சின்ன பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவேன். உடல் முழுவதும் புழுதி இருக்கும். நாங்கள் வளர்த்த கருப்பு என்ற நாயோடு கட்டிப் புரள்வேன். எனக்கு என் குழந்தைப் பருவத்தில் ‘கிருமி’களைப் பற்றி தெரியாதது மட்டுமல்ல, அவை என்னை ஒன்றும் செய்துவிடவும் இல்லை. திடகாத்திரமான ஆளாக வளர்ந்து நிற்கிறேன். காய்ச்சல், தலைவலி, நோய்நொடி என்று நான் படுப்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும். அப்படி வந்தால் கூட ஹோமியோ மருத்துவம் எடுத்துக்கொள்ளும் ‘கஞ்சன்’ நான். கிருமிகளைக் கொல்லும் ஆங்கில மருந்துகள் என்றாலே எனக்கு அச்சம்.
எனது வீட்டிற்கு அருகே ஒரு குப்பைக் களம் இருக்கிறது. அங்கே குப்பை கொட்ட வரும் வண்டிகளின் நாற்றம் குடலைப் பிடுங்கும். குப்பை பொறுக்குபவர்கள் குப்பைகளைக் கிளறுவார்கள். அவற்றில் கிடைகும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அவர்களில் ஒரு பெண்ணும் இருக்கிறார்.
அந்தப் பெண் ஒரு குழந்தையோடு வருகிறாள். இந்த வேலைகளின் ஊடே குழந்தைக்குப் பாலும் ஊட்டுவாள். அந்தக் குழுந்தையை எத்தனைக் கிருமிகள் தாக்கும் என்று நான் யோசித்திருக்கிறேன்.
அங்கே வேலை செய்பவர்களுக்கு கையுறை இல்லை. அவர்கள் கொண்டுவரும் உணவை அங்கே வைத்துத்தான் சாப்பிடுகிறார்கள். ஒன்றும் பெரிதாக அவர்களுக்கு ஆகிவிடவில்லை.
மும்பையில் ஆஸ்த்மா பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மும்பையின் சேரிகளில் வாழ் குழந்தைகள் மத்தியிலும் மும்பையின் பணக்கார வீடுகளின் குழந்தைகள் மத்தியிலும் ஆய்வு செய்யப்பட்டது. பணக்கார வீடுகளில், கிருமிகள் ஆபத்தில்லாத வீடுகளில் வாழும் குழந்தைகளில் 10 பேரில் ஒருவருக்கு ஆஸ்த்மா இருந்தது.
சேரிகளில் கணக்கற்ற கிருமிகள் குழந்தைகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. அதன் காரணமாக அந்தக் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி மிக வலுவாக இருக்கிறது. ஆனால், பணக்கார வீட்டுக் குழந்தைகள் சாதாரண‌ சளி, காய்ச்சலுக்குக் கூட கிருமிகள் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சேரிக் குழந்தைகள் இதுபோன்ற நுண்ணுயிர் ஒழிப்பு மருந்துகளை அரிதாகவே எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, சேரிக் குழந்தைகளின் கிருமிகள் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருக்க, பணக்காரக் குழந்தைகள் எளிதில் நோய்க்கு ஆளாகிறார்கள்.
garbage_girl_500
தவழும் குழந்தை அங்கேயும் இங்கேயும் அலைந்து கையில் கிடைத்த எதனையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பொருளுடன் சேர்ந்து நுண்ணுயிர்களும் குழந்தையின் உடலுக்குள் செல்கின்றன. அவை குழந்தையின் எதிர்ப்பு ஆற்றலை, தாக்குப் பிடிக்கும் திறனை வளர்த்துவிட்டு விடுகின்றன.
இயல்பான குழந்தை பிறப்பின்போது, தாயின் பிறப்புறுப்பு வழியே வெளிவரும் குழந்தை பல கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை தன் தாயிடமிருந்து பெறுகிறது. தாயின் பிறப்புறுப்பில் உள்ள ‘கிருமிகள்’, எல்லாம் குழந்தையின் வாய், மூக்கு போன்ற உடல் திறப்புகளின் வழியே குழந்தையின் உடலை அடைகின்றன. அதன் காரணமாக, குழந்தையின் உடல் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றது. இதனால்தான் சிசேரியன் முறையில் பிறந்த குழந்தைகள் அதிக நோய்த் தாக்குதலுக்கு ஆளாக, இயல்பான முறையில் பிறந்த குழந்தைகள் வலுவுள்ளவர்களாக இருக்கின்றனர்.
கிருமி நாசினிகள், அவற்றைக் கொண்ட சோப்புகளைப் பயன்படுத்தினால் கிருமிகளை ஒழித்துவிடலாம் என்பது திட்டமிட்டு திணிக்கப்படும் முட்டாள்தனம். ஏனென்றால், நமது உடலில் உள்ள ஒரு செல்லுக்கு ஒன்பது கிருமி செல்கள் இருக்கின்றன. அப்படியானால் ஒவ்வொருவர் உடலிலும் எத்தனை ‘கிருமிகள்’ இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
மனித உடலில் 25,000 மனித மரபணுக்கள் இருக்கின்றன. அதேசமயம், நமது உடலில் இருக்கும் கிருமி மரபணுக்களின் எண்ணிக்கை 2 முதல் 3 டிரில்லியன்கள் வரை இருக்கும். இந்தக் கிருமிகளை எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டுதான் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால், நுண்ணுயிர்களை, கிருமிகளை வெறுக்கக் காரணம் எதுவுமில்லை. கிருமிகளையெல்லாம் ஒழித்துவிட்டு சுத்தமான மனிதராக உங்களால் ஒரு நாளும் ஆக முடியாது.
இன்னும் சொல்லப்போனால், நம்மைக் காப்பாற்றும் வேலையைச் செய்வதும் இந்த வெறுக்கப்படும் நுண்ணுயிர்கள்தான்.
நீங்கள் ஆண்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் குடல் மற்றும் உணவுப் பாதையில் உள்ள நுண்ணுயிர்களை அது கொன்றுவிடுகிறது. அதன் காரணமாக ஆண்டிபயாடிக் எடுத்துக்கொண்டவர் நோய் எதிர்ப்புச் சக்தி இழப்புக்கு ஆளாகிறார்.
child_with_dog_380இன்றைய மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? மரணம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தான குடல் தொற்று நோய்களுக்கு மருந்தாக, ஆரோக்கியமான ஒருவரின் புத்தம் புதிய மலத்தை எடுத்து நோய்த் தாக்குதலுக்கு ஆளானவரின் உடலில் செலுத்த வேண்டும் என்கிறது. அதாவ‌து சிறுநீரக மாற்று போல மல மாற்று சிகிச்சை. ஒருவரின் தாய் உயிரோடு இருந்தால் அவர் கொடுத்து வைத்தவர். தாயின் மலத்தை நோயுற்றவருக்கு மாற்றினால், அவர் சில நிமிடங்களில் குணமாகிவிடுவார். நம்புங்கள்… சில நிமிடங்களில்! நமது தாயின் குடலில் இருக்கும் நுண்ணுயிர்கள் நமது குடலில் இருக்கும் நுண்ணுயிர்களை ஒத்தே இருக்கும். எனவே, நமது குடலில், உணவுப் பாதையில் இருக்கும் நுண்ணுயிர்களை மீட்டெடுப்பதுதான் நாம் விரைவாக நோயெதிர்ப்பு ஆற்றலை அடைய வழிவகுக்கும்.
நச்சுப்பொருள் எதிர்ப்பு மருந்துகள் (Antiseptics) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) இவற்றைக் கொண்ட சோப்புகள் புதிய, அதி ஆற்றல் மிக்க புதிய கிருமிகளை உருவாக்கிவிடுகின்றன. பல மருந்துகளைத் தாங்கி தாக்குப் பிடித்து வாழும் ‘புதிய கிருமி’கள் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுள்ளன. நாம் எந்த அளவு விரைவாக விழித்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
விரைவாக அழுக்கைச் சாப்பிடும் சலவை பவுடர்கள் மற்றொரு ஆபத்து. அவை bacillus subtilis என்ற நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளன. அந்த நுண்ணுயிர் துணிகளின் அழுக்கை அகற்றும்போது புரோட்டின் படிவு ஒன்றைத் துணிகளுக்கு அளிக்கின்றது. இது நுரையீரலுக்கு விஷமாகும். அது குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய் ஒன்றை உருவாக்குகின்றன. அதன் பெயர் fibrosing alveolitis (cryptogenic) என்பதாகும்.
நாம் நமது சிந்தனை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும். நச்சுக் கிருமிகள் வாழும் உலகத்தில் நாம் வாழவில்லை. பலகோடி நுண்ணுயிர்களும் உயிர்களும் வாழும் உலகத்தில் நாமும் வாழ்கிறோம். இந்த உயிர்களின் வாழ்க்கைச் சமநிலை பல ஆயிரம் ஆண்டுகளாக, லட்சம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது. மனித உடல் அனைத்து நுண்ணுயிர்களையும் தாக்குப் பிடித்து வாழும் தகுதி உடையது என்பதாலேயே ஏறக்குறைய 1 லட்சம் ஆண்டுகளைத் தாண்டி மனித குலம் தழைத்தோங்கி வந்திருக்கிறது.
எதில் காசு பார்க்கலாம் என்று தேடித் திரியும் தொழில் முதலாளிகள் பரப்பும் கிருமிகளுக்கு எதிரான யுத்தம் என்ற மாயையை நாம் கலைந்து கொள்ள வேண்டும். நடிகர் பிரபு நடத்தும் நகைக்கடை யுத்தம் போன்ற காமெடி இந்த ‘அறிவியல்’ விளம்பரங்கள். ஆனால், காமெடி என்பது பலருக்கும் புரிவதில்லை. இந்த ‘கிருமி’ பயம், சுயலாபத்துக்கான, பண வேட்டைக்கான பிரச்சாரம் என்று சொல்லியாக, பிரச்சாரம் செய்தாக வேண்டும்.
‘கிருமிகளை’ விட பெரிய அபாயம் உயிர்களின் சமநிலையைச் சிதைக்கும் வணிக நடவடிக்கைகள்தான். இத்தனைக் காலம் ஜீவித்திருந்த உலக உயிர் சமநிலையை பண முதலைகள் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
 நல்லது. குழந்தைகள் வெளியே சென்று சூரிய வெளிச்சத்தில் ‘அழுக்கில்’விளையாடட்டும். குழந்தையைக் குளிப்பாட்ட சாதாரண சோப்பைப் பயன்படுத்துங்கள். அது போதும். கிருமி எதிர்ப்பு சோப்பு என்று தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து அதன்படி குழந்தையைக் குளிப்பாட்டினால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும். அதிஅற்புத கிருமி எதிர்ப்பு சோப் போன்ற பொருட்களை வாங்கி மிச்சமிருக்கும் உங்கள் சம்பாத்தியத்தைச் சாப்பிட, அப்புறம் ‘மருத்துவ முதலாளிகள்’ வந்துவிடுவார்கள். ஜாக்கிரதை!
- சி.மதிவாணன் ( mathivanan_c@yahoo.com)
(இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் தகவல்களை B. M. HEGDE என்ற பேராசிரியர் எழுதிய கட்டுரையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். அவரின் இ மெயில் hegdebm@gmail.com. இக்கட்டுரை அக்டோபர் 28 இந்து நாளிதழில் வெளியாயிற்று.)
»»  (மேலும்)

| |

கரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி நகர்கிறது

அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.மிகப் பெரியதொரு நிலப்பரப்பில் பாரிய சேதங்களையும் இந்த சூறாவளி ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கின்ற நியூ யார்க் மாகாணத்தில் இது "பேரழிவுகள்" ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார்.

நியூ யார்க்

பல இடங்களில் வெள்ளம் புகுந்தது
நியூ யார்க் நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலே நான்கு மீட்டர்கள் உயரத்துக்கு கடல்மட்டம் அதிகரித்து ஊருக்குள் நீர் புகுந்ததில், சுரங்க ரயில் பாதை வலயமைப்புக்குள்ளும், நிலத்தடி கார் நிறுத்தும் வளாகங்களுக்குள்ளும் நீரில் மூழ்கியுள்ளன.
நியூ யார்க் நகரத்தில் மின் ஊக்க நிலையம் ஒன்று வெடித்திருக்கிறது, மருத்துவமனை ஒன்றிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது. சூறாவளியின்போது தீப்பிடித்த 50 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகளை ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து கட்டமைப்புகள் இதுவரை சந்தித்ததே இல்லை என்று அந்நகர போக்குவரத்துத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நகரின் பெரும்பகுதி இடங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
இந்த சூறாவளியின் மிக மோசமான கட்டத்தை தாண்டிவிட்டதாக நகரத் தந்தை மைக்கேல் புளூம்பர்க் கூறினார்.
இனி மெல்ல மெல்ல வெள்ளம் வடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரையோரப் பகுதிகள்

மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றிலுமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சூறாவளியில் மரங்கள் வேரொடு சாய்ததன் காரணமாகவும் பிற காரணங்களினாலும் ஆட்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகரங்களில் அறுபத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் இல்லை.
போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பல லட்சக்கணக்கானோர் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், இரசாயன தொழிற்சாலைகள் போன்றவை சூறாவளியை முன்னிட்டு நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த சூறாவளியால் ஏற்பட்டுள்ள பொருட்சேதம் என்பது இரண்டாயிரம் கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
இரண்டாவது நாளாக இன்றும் நியூ யார்க் பங்கு சந்தை மூடப்பட்டிருக்கும்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை இரண்டு வேட்பாளர்களுமே நிறுத்திவைத்துள்ளனர்.

கனடா

ஏராளமான பொருட்சேதம்
இந்தச் சூறாவளி அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி நகர தற்சமயம் கனடாவில் பலத்த காற்று வீசிவருகிறது.
பெயர்ப் பலகை ஒன்று காற்றில் பிடுங்கிக்கொண்டு வந்து தாக்கியதில் அங்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

வெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத்துங்கள் - அல்கொய்தா


பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவராக அல்சவுகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் இணையதளத்தில் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எகிப்து நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மீண்டும் மக்கள் புரட்சியில் ஈடுபடவேண்டும். அங்குள்ள புதிய அரசு ஊழிலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக மக்கள் திரளவேண்டும். முஸ்லீம்கள் வெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத்துங்கள். இதன் மூலம் நமது நியாயங்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தொழில் முறை பொய்யர். அவரை யாரும் நம்ப வேண்டாம். அவருடைய உத்தரவால்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏவுகணைகள் மூலம் முஸ்லீம்களை கொல்கிறார்கள். அவர் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருக்கிறார்.

சிரியா நாட்டின் அதிபர் ஆஷாத்துக்கு எதிராக மக்கள் ஒன்று திரளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மொத்தம் 2 வீடியோ காட்சிகள் அனுப்பப்பட்டு உள்ளன. இவை 58 நிமிடங்கள் ஓடுகிறது.
»»  (மேலும்)

| |

அமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங்கள் ரத்து!


அமெரிக்காவினை சாண்டி புயல் தாக்கவுள்ள நிலையில் அங்கு அவசரகால நிலமையினை அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

நியூயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன்,சாண்டிபுயலின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் படையினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டில் அமெரிக்காவினை தாக்கும் பாரியபுயலாக இந்த சாண்டிப்புயல் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சாண்டி புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் நியூயார்க் நகரின் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அம்மாகாண கவர்னர் ஆன்ட்ரிவ் குயோமோ தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து புறப்படும் சுமார் 3000 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

| |

இங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி பல்கலைக்கழகங்களுக்கு மூடுவிழா


இங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி பல்கலைக்கழகங்களை அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழங்களில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் படிக்கின்றனர். ஆண்டுதோறும் இவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 18 மாதங்களாக தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அப்போது, போலியாக இயங்கிய 500க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகங்களின் தலைவர் எரிக் தாமஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஏராளமான பல்லைக்கழகங்கள் மூடப்பட்டு விட்டன. எனினும், வெளிநாட்டு மாணவர்களின் வருகையில் எந்த பாதிப்பும் இல்லை. மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு பல்கலையில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
»»  (மேலும்)

| |

இலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம் ஆனால் இலவச கருக்கலைப்பு: பிரான்சில் புதிய சட்டம்

பிரான்ஸ் நாட்டில் திருமணம் ஆகாமலே பெண்கள் கர்ப்பம் ஆவது அதிகமாக உள்ளது. அதிலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் அதிக அளவில் கர்ப்பம் அடைகிறார்கள். இவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் செலவாகிறது.
எனவே கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது மட்டும் அல்லாமல் வேறு வகையான பிரச்சினைகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த இலவச கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
மேலும் 18 வயதிற்கு மேல் உள்ளவர் கருக்கலைப்பு செய்தால் 80 சதவீத பணத்தை அரசே திருப்பி தரும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்பட உள்ளது.
»»  (மேலும்)

| |

700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்

ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இருப்பினும் வழமையாக பயணிக்கும் வழியிலேயே இம்முறையும் அந்த கப்பல் பயணித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன கப்பலைத் தேடுவதற்காக மூன்று கப்பல்கள், ஹெலிகொப்டர் மற்றும் கரையொதுக்கும் கப்பல் போன்றன அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல் போன கப்பல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் ஏற்பட்டுள்ள கடும் அலை சீற்றத்தால் கப்பலைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற் பகுதியில் சுமார் 13 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கப்பலிலுள்ள அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை உதவி கோரியுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்றைய தினமே கப்பல் காணாமல் போயுள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.

»»  (மேலும்)

| |

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமறியல்; சிறுவர் இல்லத்தில் 3பேர் ஒப்படைப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 11பேரை நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவர்கள் மூவரை சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதேவேளை, மேற்படி 11பேரில் 8பேரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் தங்காலை நீதவான் யுரேகா துலானி உத்தரவிட்டுள்ளார்.  மேற்படி 14பேரும் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்நிலையில் பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை தங்காலை நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் மேற்படி நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

10/29/2012

| |

சாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'

அமெரிக்காவை தாக்கவிருக்கும் ஹரிக்கேன் சாண்டி என்னும் சூறாவளி அங்கு நாட்டின் மக்கள் தொகை மிகவும் செறிவாக வாழுகின்ற கிழக்கு கரையோரத்தில் 5 கோடி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
முக்கிய நீர்வழிகள் நாட்டின் உட்புறம் வரை மிகவும் ஆழமாக ஊடுருவி உள்ளதால், குறிப்பாக நியூயோர்க் நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தாழ்வான பகுதிகளில் இருந்து மூன்று லட்சத்து எழுபத்தையாயிரம் மக்கள் வெளியேற வேண்டும் என்று நியூயோர்க் மேயர் ஞாயிறன்று உத்தரவிட்டிருக்கிறார்.
நியூயோர்க் துறைமுகம் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கிறது. 500 க்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பஸ் மற்றும் சுரங்க வழி போக்குவரத்துக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளி நெருங்கிவரும் நிலையில் பள்ளிக்கூடங்களும், பங்குச் சந்தையும் மூடப்பட்டுள்ளன.
அதிபர் தேர்தல் பற்றிய செய்திகளுக்குப் பதிலாக உள்ளூர் ஊடகங்களை சூறாவளி குறித்த செய்திகளே பெரிதும் ஆக்கிரமித்திருப்பதாக அங்கு சென்றுள்ள எமது தமிழோசை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகிறார்.
நாட்டின் கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும், வாசிங்டன் நகரிலும் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
»»  (மேலும்)

| |

கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு


கிழக்கு கடலில் தத்தளித்த மீனவர்கள் ஐவரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 
பானம பொத்துவிலில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படகொன்றே சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் ஐவரும் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீன்பிடி படகு தெவிநுவரவிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
»»  (மேலும்)

| |

உல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

உடவளவ பிரதேசத்தில்அமைக்கப்பட்ட உல்லாசப் பயண ஹோட்டலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
உடவளவ பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட முதலாவது ஹோட்டல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

சாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந்தை இன்று இயங்கவில்லை


அமெரிக்காவில் உருவாகியுள்ள சான்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு  இதுவரை இல்லாத வகையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டு  மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

சான்டி புயல் தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நியூயார்க்கில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குச்  சந்தையும் இன்று இயங்கவில்லை. அதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நியூயார்க்கின் வால்ஸ்டீரிட் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. 
அதுமட்டுமின்றி புயல் காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.6 ஆயிரம்  விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் மளிகை உள்ளிட்ட  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்ததால்,பல சூப்பர் மார்க்கெட்டுகளில்  பொருட்கள் விற்று தீர்ந்து, கடையே காலியான நிலையும் ஏற்பட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

| |

ஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல்.ஏக்கள் மனு. தமிழக அரசியலில் பரபரப்பு...!


தொகுதி பிரச்னை பற்றி பேச வேண்டும் எனக் கோரி முதல்வர்  ஜெயலலிதாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கு தருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சார்பில் கடிதம் கொடுக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் மற்றும் அக்கட்சி  செந்தில் குமார்,  சாந்தி, முருகேசன், அருள் செல்வன் ஆகிய 5 பேர் சார்பில் தமிழக சட்டசபை  சபாநாயகர் தனபாலிடம் கடிதம் அளித்துள்ளனர். 
அக்கடிதத்தில் தங்களை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தருமாறு  அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்றுமுதல்வர் ஜெயலலிதாவை, தேமுதிக  எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன் மற்றும்  தமிழ்  அழகன் ஆகியோர் நேற்று தலைமைச்  செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.அப்போது,அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக  பாராட்டு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சியை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண்  பாண்டியன் ஆகிய மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதாவை சனிக்கிழமையன்று  தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கூறிய 4  எம்.எல்.ஏ.க்களுமே,தங்களது தொகுதிக்கான நலத்திட்டங்களுக்கான கோரிக்கை  விடுப்பதற்காகவே முதல்வரை சந்தித்ததாக தெரிவித்தனர்.

ஆனால் இவர்கள் அதிமுகவில் சேருவதற்கான முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு  கருதப்பட்ட நிலையில்,இதனை உறுதிப்படுத்தும் வகையில்,இன்று கூடிய தமிழக  சட்டசபை கூட்டத்தொடரில்,ஜெயலலிதாவை சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 4  பேருக்கும் அதிமுக வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக ஜெயலலிதாவை சந்தித்து  வருவதினால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த்,இது ஜெயலலிதா நடத்தும் நாடகம்  என்றும், இதற்கு விரைவில் முடிவு கட்டுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருடன் ஜெயலலிதாவை சந்திக்க நேரம்  ஒதுக்கக் கோரி இன்று விஜயகாந்த் சபாநாயகரிடம் மனு  கொடுத்திருப்பது,ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட 'செக்’காவே கருதப்படுகிறது.

விஜயகாந்தை சந்திக்க ஜெயலலிதா அத்தனை சுலபத்தில் ஒப்புக்கொள்ளமாட்டார்.அப்படி  இருக்கையில் அவரை சந்திக்க அனுமதி மறுத்து,அவரது கட்சியை மற்ற கட்சி தாவ  நினைக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தால்,அதனை வைத்து தமது கட்சியை உடைக்க  ஜெயலலிதா திட்டமிடுவதாக பொதுமக்களிடம் பிரச்னையை கொண்டு செல்லலாம் என  விஜயகாந்த் கருதுவதாக கூறப்படுகிறது.
»»  (மேலும்)

| |

16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது

தாய்லாந்து நாட்டில் 100 வருடங்களுக்கு முன்பு ஒரு  லட்சம் புலிகள் இருந்தன. சமூக விரோதிகள் வேட்டையால் பெரும்பாலான புலிகள் அழிக்கப்பட்டு தற்போது 3200 புலிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனாலும் புலி வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
புலிகள் முற்றிலும் அழிந்து விடாமல் தடுக்க இப்போதுதான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லாவோஸ் நாட்டு எல்லையில் உள்ள கான்கான் என்ற இடத்தில் ஒரு வேனில் கடத்திச் சென்ற 16 புலிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த வேனை ஓட்டி சென்றவர் பிடிபட்டார்.
 
ஆனால் அவர், சிலர் இந்த புலிகளை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்குமாறு பணம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே கடத்தல்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட 16 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரத்தில் இருந்து 2 மாதங்கள் ஆனவை ஆகும். இவற்றை லாவோஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
»»  (மேலும்)

| |

கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-மந்திரி மீது செருப்பு வீச முயன்றவர் கைது

மராட்டிய முதல்-மந்திரி பிரித்விராஜ் சவான்இ நேற்று சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று எழுந்து நின்ற ஒரு பார்வையாளர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்இ முதல்-மந்திரியை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார். 

முதல்-மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அப்புறப்படுத்த முயன்ற போதுஇ சற்றும் எதிர்பாராத வகையில் தனது செருப்பை கழற்றி முதல்-மந்திரியை நோக்கி வீச முயன்றார். கரும்பு விவசாயிகள் இந்த கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கக்கூடும் என எதிர்பார்த்த போலீசார் மேடையின் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

எனினும் பத்திரிகையாளர்கள் பகுதிக்குள் நுழைந்த உள்ளூர் விவசாய சங்கத்தை சேர்ந்த மகேஷ் கேதார் என்ற நபர் முதல்- மந்திரியை நோக்கி செருப்பை வீச முயன்றது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் சோலாப்பூர் போலீஸ் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் முதல்- மந்திரியின் நிகழ்ச்சியில் சற்று நேரம் சலசலப்பு நீடித்தது. பின்னர் எந்த இடையூறுமின்றி பேசி முடித்த பிரித்விராஜ் சவான்இ அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நாக்பூர் சென்றார்.
»»  (மேலும்)

| |

உயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

உயர் கல்விக்காக வெளிநாடு சென்ற விரிவுரையாளர்களுள் 642 பேர் தமது ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் இதுவரையில் நாடு திரும்பவில்லை என உயர் கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண தெரிவித்தார்.

இவ்வாறு உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென செயலாளர் கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனான ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 வருடங்களுக்குள் விரிவுரையாளர்கள், முதுகலைமாணி மற்றும் தமது கலாநிதி பட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அனுமதியுடனும், ஒப்பந்த அடிப்படையிலும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு சென்ற போதும் தமது கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பாது அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிடுகின்றனர்.

இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதுடன் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு எதிர்நோக்கும் நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இவர்களுக்கெதிராக அவசியம் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க சம்பளக் கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 100 போராட்டம் ஒன்றை அண்மையில் நடாத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

அவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது

கடந்த இரண்டு நாட்களில் அவுஸ்திரேலியா, 9 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் படகு ஒன்றை கடத்தி அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைந்த 14 பேர் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு மேலதிகமாக கிறிஸ்மஸ் தீவுகளைச் சென்றடைந்த 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேர் கடந்த வெள்ளிக்கிழமையும், எட்டுபேர் கடந்த சனிக்கிழமையும் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

| |

மீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை காப்பாற்ற முயற்சி


மாத்தறை பகுதியில் மீனவர்களை தாக்கி நடுகடலில் தள்ளிவிட்டு அவர்களின் படகின் மூலம் அவுஸ்திரேலியா தப்பி சென்ற ஒருவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
14 பேருடன் அண்மையில் கொக்கோஸ் தீவை சென்றடைந்த அவர், ஏனைய 14 பேரும் நாடு கடத்தப்பட்ட நிலையில் தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் இருந்து 3300 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், மீண்டும் அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையிலேயே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த புகலிடக் கோரிகையாளர் இலங்கையில் பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும், அதனால் அவர் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
»»  (மேலும்)

| |

வடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வளிமண்டவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கரையேரங்களை புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு கிழக்கே 200 கிலோ மீற்றரில் ஏற்பட்டுள்ள தீடிர் தாழமுக்கம் புயலாக மாறி வருவதாக அறிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இன்னும் சில மணித்தியாலயங்களில் இது வேகமாக நகர்ந்து வடக்கு பகுதியை முற்றாக தாக்கும் என எச்சரித்துள்ளது.

மேலும் இப்புயல் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இப்புயலானது முல்லைத்தீவு முதல் யாழ்ப்பாணம் வரையான பகுதிகளையே அதிகளவில் தாக்கவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை மற்றும் தாழமுக்கமான கால நிலை தற்போது நிலவி வருவதோடு அமைதியான சூழ்நிலையே தற்போது நிலவி வருகின்றது.

இதேவேளை வடக்கின் கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் கரையோரங்களை விட்டு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர்.
»»  (மேலும்)

| |

வடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநிலை ;காற்றுடன் கூடிய மழை தொடரும்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.
குறிப்பாக யாழ்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நேற்று முதல் தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகின்றது. இதேவேளை புத்தளம் மன்னார் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 150 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை பலமான காற்று வீசும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் நாட்டில் சகல இடங்களிலும் அடுத்துவரும் சில மணித்தியாலயங்களுக்கு கடும் மழையும் அதனைத் தொடர்ந்து மழையுடன் கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையும் நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

| |

பாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு

பாண் ஒரு இறாத்தலின் விலை இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இவ் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரப்படவுள்ளது. 
தற்போது 58 ரூபாவாக இருக்கும் 450கிராம் எடையுடைய பாண் ஒரு இறாத்தலின் விலை இன்று நள்ளிரவு முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 
»»  (மேலும்)

| |

போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத் தாள்கள் வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிங்குரக்கொட, கவுடுல்ல, சன்சுன்கம பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடம் போலி நாணய தாள்களின் பெறுமதி 20,000 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். 
»»  (மேலும்)

| |

இலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி

இலங்கையின் சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்காக, ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் 4000 கோடி ரூபாய்களை வழங்கி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 
இதன்படி, மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஜப்பானின் அபிவிருத்தி நிறுவனம் 500 மில்லியன் ரூபாய்களை நிதி உதவியாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. 
இந்த அபிவிருத்தி பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், எதிர்வரும் 2014ம் ஆண்டு இந்த பணிகள் நிறைவடையும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
»»  (மேலும்)

| |

மழையில் மாணிக்கம் தேடும் மக்கள்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்து ஆறுகள், குளங்கள், மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்ற நிலையில் கந்தளாயைச் சேர்ந்த 1000 
கணக்கானோர் கந்தளாய் குளத்தைச் சுற்றி இருந்து மாணிக்கக் கற்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையில் சில மாணிக்கக் கற்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. 
இதனையடுத்து அந்த தகவல் குளத்தை அண்மித்துள்ள கிராமங்களுக்கு பரவியதை அடுத்து கடும் மழையையும் பொருட்படுத்தாத கிராம வாசிகள் கந்தளாய் குளத்தை சுற்றி நின்று மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு சில மாணிக்கக் கற்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் குளத்தைச் சுற்றி சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

| |

பஸ் - வான் மோதி விபத்து....!

தனியார் பஸ்ஸொன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் இரு வாகனங்களும் பாரிய சேதத்திற்குள்ளாகிய போதும் அதில் பயணம் செய்த எவருக்கும் எவ்விதமான ஆபத்தக்களும் ஏற்படவில்லை என மட்டக்களப்பு தலைமையக மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பதில்  பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச்சென்ற தனியார் பஸ் வண்டியும் கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வானும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
»»  (மேலும்)

10/28/2012

| |

மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்!

சர்ச்சைக்குரிய மதுரை ஆதீன‌த்து மடாதிபதி அருணகிரிநாதரை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது அதிமுக அரசு. இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959ன் பிரிவு 59ன் படி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பலத்த சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளான நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்து அறிவித்து விட்டார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரை நீக்கிவிட்டு மதுரை ஆதீன‌த்து நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ளவேண்டி தொடுக்கப்பட்ட வழக்கைக் கண்டு அஞ்சிய மடாதிபதி அருணகிரிநாதர் அதிரடியாக நித்யானந்தாவை நீக்கிவிட்டார்.
nityananda_arunagirinathar_350நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன‌ மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை. இது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது. 1500 ஆண்டுகால பழமை வாய்ந்தது, தமிழ் வளர்த்த சம்பந்தரால் அமைக்கப் பெற்றது என்றெல்லாம் போற்றப்படும் மதுரை ஆதீன‌த்துப் புனிதம் பறிபோய்விட்டது என்று பதறியவர்கள் கருத்துக் கூறியிருக்க வேண்டும். ஏனோ கருத்து சொல்லவில்லை.
அரசு தொடுத்துள்ள வழக்கு குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கும், அரசு தனது வழக்கைத் தொடர்ந்து நடத்துமா என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் மடங்கள், கோயில்கள் பற்றிய கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.
தமிழ்நாட்டில் 38,491 கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சிறப்பு அறக்கட்டளைகள் உள்ளன என்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு கூறுகிறது. பார்ப்பனியத்தை எதிர்த்து பகுத்தறிவுக்காகப் போராடிய தமிழ்நாட்டில் இத்தனை கோயில், மடங்களா? என்ற ஆச்சரியம் எழலாம். இதை விட ஆச்சரியம் பிற மாநிலங்களில் கோவில், மடங்களுக்கு இவ்வளவு நிலங்கள், சொத்துக்கள் இல்ல என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில், சைவ, வைணவ மடங்கள் மட்டும் 56. இவற்றின் கீழ் 57 கோயில்கள் உள்ளனவாம். கோயில்களுக்கு 4,22,930 ஏக்கர் நிலங்களும் மடங்களுக்கு 55,825 ஏக்கர் நிலங்களும் மொத்தம் 4,78,755 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு கூறுகிறது. ஆனால் நாற்பதுகள், அறுபதுகளில் நிலம் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் ஆறு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் நிலம் இருந்ததாக கூறுகின்றனர். இது தவிர கட்டிடங்கள், காலி இடங்கள், வீட்டுமனைகள் ஏராளமாக உள்ளன. ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ3 லட்சம் மதிப்பு என்று வைத்துக்கொண்டால் கூட அரசாங்கம் கூறும் இந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ12,687 கோடி. ஏக்கர் கோடி பெறுகிற நிலமும் இருக்கிறது. இது போக ஏராளமான கட்டிடங்கள் காலி மனைகள் உள்ளன. அவற்றின் மதிப்பை அரசாங்கம் மதிப்பிட்டதாகத் தெரியவில்லை. மதிப்பிட்டிருந்தாலும் வெளியில் சொல்வதில்லை. பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை போட் கிளப் இருக்கும் இடம் கூட கோவிலுக்கு சொந்தமானது.
மடங்களில் மிகவும் பணக்கார மடம் தருமபுரம். திருப்பனந்தாள் காசிமடம் (இதற்கு வாரணாசியிலும் நிலங்கள், கட்டிடங்கள் உள்ளனவாம்), திருவாவ‌டுதுறை மடங்கள் அடுத்த பணக்கார மடங்கள். சங்கர மடத்தின் கதை தனி. திருப்பனந்தாள் மடத்துக்கு 6000 வேலி (ஒரு வேலி என்பது 6.5 ஏக்கர்) நிலங்கள் உள்ளதாக வாய்மொழி வழக்கு கூறுகிறது. அதாவது 39000 ஏக்கர் விவசாய நிலங்கள். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மட்டும் 12 ஊராட்சிகள் (30)திருப்பனந்தாள் மடத்து நிலத்தில் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தனிப்பட்டா கிடையாது. அதாவது யாருக்கும் சொந்த நிலமோ, வீட்டுமனையோ கிடையாது. எல்லாம் குத்தகை. எந்த நேரத்திலும் வெளியேறு என்று சொன்னால் வெளியேறியாக வேண்டும். இந்த ஒன்றியத்திலுள்ள திருலோகி கிராமத்தில் பள்ளிக்கூடம், பால்வாடி, ரேஷன் கடை இன்னும் பல அரசாங்க கட்டிடங்களே மடத்துக்கு சொந்தமான நிலத்தில்தான் உள்ளன. இந்த கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் மடத்துக்குச் சொந்தமானது என்று வளைத்துக் கொண்டார்கள். அரசாங்கத்தால் ஏதும் செய்ய முடியவில்லை! இங்கு மடத்து அதிகாரத்துக்கு கீழ்பட்டதுதான் அரசாங்க நிர்வாகம். அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் மடத்தின் தயவில்தான் வாழவேண்டும்.
பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் மடத்து நிலங்களில் தலைமுறை தலைமுறையாக உழைத்து மடத்தின் செல்வத்தை பெருக்கி வருகின்றனர். இவர்கள் தங்களுக்காக உழைப்பதில்லை; மடத்துக்காகவே உழைக்கிறார்கள். மடத்து நிர்வாகத்தின் கீழ் படும் துன்பம் சொல்லி மாளாது. குத்தகை விவசாயிகளுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது. மடத்துக்கு குத்தகை அளக்கவில்லை என்று கூறி பல தலைமுறைகள் மடத்துக்கு கடனாளியாகவே வாழ்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் எவருக்கும் சொந்த வீட்டு மனை கிடையாது. நூறு தலைமுறைகளுக்கு முன் பண்ணைகளுக்கு ஒதுக்கிய துண்டு நிலங்களில்தான் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மடங்கள் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவமனை, கருணை இல்லங்கள் என நடத்துகின்றன. இவற்றின் எண்ணிக்கை 95. அனல்வாதம், புனல்வாதம் நடத்தி சமணர்களைக் கொன்று தமிழ் 'வளர்த்த' சைவக்குரவர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் தோற்றுவித்த இந்த மடங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்சி, மெட்ரிக், ஆங்கில நர்சரிப் பள்ளிகளும் உள்ளன! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை ஆதீன‌த்துக்கு 1250 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மடத்துக்கு சுமார் 1500 கோடி சொத்து உள்ளது. இந்த கணக்குகள் எல்லாம் உத்தேசமானவை. உண்மை சொத்துகள் பலமடங்கு இருக்கும்.
முதலமைச்சருக்கு மிகவும் பிடித்தது சிறீரங்கம் கோயில் மட்டும் 156 ஏக்கர் பரப்பில் உள்ளது. கோவில் சுற்றுச்சுவரின் நீளம் 11 கி மீ. மொத்தம் 600 ஏக்கர்களைக் கொண்ட கோயிலைச் சுற்றி 320 ஏக்கரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏராளமான கடைகள் உள்ளன. வைணவ அகோபில மடத்தின் பராமரிப்பில் உள்ளது இந்தக் கோயில். 320 ஏக்கரில் உள்ள மக்களை வெளியேறச் சொல்கிறது இந்து சமய அறநிலையத்துறை. முடியாது என்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். 1963ல் கொண்டு வரப்பட்ட இனாம் ஆதீன‌ ஒழிப்புச்சட்டம் 1963ன் படி எங்களுக்குச் சொந்தம் என்று வாதிடுகிறார்கள் குடியிருப்போர். இல்லை என்று எதிர்வழக்காடுகிறது இந்து அறநிலையத்துறை. ஏன் வெளியேறச் சொல்கிறார்கள்?
திருச்சி மாநகராட்சியிலேயே மிகவும் வளர்ந்து வருகிற இடம் சிறீரங்கம். ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கிற இடம். அடுக்கு மாடி குடியிருப்புகள் பல வந்து கொண்டிருக்கின்றன. இங்கு 3 படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் விலை 50 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய். (1460 ச.அ). ஒரு ஏக்கரில் 30 வீடுகள் கட்டலாம். 320 ஏக்கரில் மூன்றடுக்கு மாடிகள் என்றால் 38400 வீடுகள். மொத்தம் ரூ19,500 கோடி வியாபாரம் நடக்கும்! முதல்வரின் சிறப்பு கவனிப்பிலிருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றி அசிங்கமான வீடுகளையும் அழுக்கான கடைகளையும் அப்புறப்படுத்திவிட்டால் அழகான அடுக்குமாடிகள் வரும், ஒய்யாரமான வணிக வளாகங்கள் வரும். இதற்காகத்தான் வெளியேறச் சொல்கிறார்கள். அனந்தசயனத்தில் ஆழ்ந்திருக்கும் சிறீரங்கநாதர் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டு தானிருக்கிறார்.
மடங்களின் அதிபதிகள், தனி சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்க சிம்மாசனம், வைரம் பதித்த கிரீடங்கள், வெள்ளி செங்கோல் என வாழ்கிறார்கள். எல்லாம் துறந்ததாகச் சொல்லப்படும் இவர்கள் எதையும் துறக்கவில்லை. தங்கம், வைரம், வெள்ளி, பள்ளிகள், கல்லூரிகள், (இந்த பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது அரசாங்கம், ஓர் ஆசிரியர் பதவிக்கு லஞ்சம் ரூ.8 லட்சம் வரை!)கட்டிடங்கள், விலை உயர்ந்த ஆடம்பரக் கார்கள், வங்கிக் கணக்குகள் (திருப்பனந்தாள் மடத்திற்கென்றே ஸ்டேட் வங்கிக் கிளை திறக்கப்பட்டிருக்கிறது). பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள், ரியல் எஸ்டேட் வணிகம், பினாமியில் பங்கு சந்தை வியாபாரம் என‌ இணைப்பொருளாதாரத்தை ந‌டத்திக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அமைச்சர்களும் பெரும் முதலாளிகளுமே கூட பொறாமைப்பட்டுப் போவார்கள்!
Jayendra_Saraswathi_350‘இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு’ என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலை மேற்கோள்காட்டித் துவங்கும் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு, ‘கலை, கலாச்சாரம், நாகரிகம் வளர்க்கும் பணியில் கோவில்கள், மடங்கள்’ முக்கிய பங்காற்றி வருவதாகக் கூறுகிறது. காஞ்சி மடத்து சங்கராச்சாரியார் மீது சங்கரராமனை கொன்ற வழக்கு இன்னும் நடந்து வருகிறது. தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை, திருவாவ‌டுதுறை பெரிய ஆதீன‌த்தை இளைய ஆதீன‌ம் கொல்ல முயற்சி இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் எண்ணிலடங்கா கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், பதுக்கல்கள், கையாடல்கள் என எல்லாவித சமூகக் குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், சீரழிவுகள் மலிந்தவை. மதுரை ஆதீன‌த்தின் மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழ்நாட்டிலுள்ள மடாதிபதிகளும் தமிழ் ஆர்வலர்களும் பல பேராசிரியர்களும் முற்போக்கு அறிவாளிகளும் கொதித்துப் போயினர். 1500 ஆண்டுகால சைவ மரபும் பெருமையும் ஆகம விதிகளும் களங்கப்பட்டுவிட்டதாக கலங்கிப் போயினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட கவலைப்பட்டுப் போனது. மடாதிபதிகள், ‘இழிவுகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு’ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் வளர்க்கும் ‘கலை, கலாச்சாரம், நாகரிகம்’ நிலப்பிரபுத்துவ கலை, கலாச்சாரம், நாகரிகம்! மன்னர்கள் ஒழிக்கப்பட்ட நாட்டில் இன்னும் மன்னர்கள் போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
சொத்து குவிந்திருக்கும் இடத்தில் அதிகாரம் இருக்கும். அதிகாரம் இருக்கும் இடத்தில் அதிகாரச் சண்டை நடக்கும். அதிகாரச் சண்டை நடக்கும் இடத்தில் கொலை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களும் நடக்கும். மடங்களின் புனிதம் குற்றங்களால் மட்டுமே பாதுகாக்கப்படும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் சமணர்களைக் கொன்று உருவான மடங்களின் குற்றம், 1500 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பண்ணை அடிமைகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற‌ பாட்டாளிகளை அடக்கி ஒடுக்கி அபகரிக்கும் குற்றம் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
மடங்கள், கோவில்களுக்கு நிலங்களும் சொத்துக்களும் இல்லாமல் போனால் அதிகாரம் இல்லாமல் போகும். அதிகாரம் இல்லாமல் போனால் அனைத்து சமூகக் குற்றங்களும் இல்லாமல் போகும்.
நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்து மிட்டா, மிராசுகள் முதுகெலும்பை ஒடித்த கட்சி திமுக என்று அண்ணாவும் கருணாநிதியும் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் நிலச் சீர்திருத்தத்திலிருந்து மடங்களுக்கும் கோவில்களுக்கும் விதிவிலக்களித்த குற்றத்தைச் செய்தார்கள். அதனால்தான் மடங்களின் குற்றமும் சீரழிவும் இன்றளவும் தொடர்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராகப் போர் புரிந்தவர்கள் என்று சொல்லும் திராவிடக் கட்சிகள் கோவில், மட நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. அதுமட்டுமல்ல திமுக, அதிமுக பெருந்தலைவர்கள் மடாதிபதிகளோடு கூட்டு சேர்ந்து நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்கிறார்கள். கூட்டுக் கொள்ளையடித்து ஆதாயமடைகிறார்கள்.
திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசாங்கம் மதுரை ஆதீன‌ம் மீது தொடுத்துள்ள வழக்கை பின்வாங்காமல் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மடங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் விசாரிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள். அவர்களது குற்றங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மடங்கள், கோவில்களின் நிலங்கள், சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நிலங்களை குடியிருக்கும் ஏழைகளுக்கும் பயிரிட்டுக் கொண்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் சொந்தமாக்கிட வேண்டும். தலைமுறை தலைமுறையாக உழைத்துக் கொடுத்த உழைப்பாளிகளின் வாரிசுகளுக்கும் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சேர்ந்தாக வேண்டும். 21 நூற்றாண்டில், மடங்கள், கோவில்கள் பேரால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரம், அரசியல், ‘கலை, கலாச்சாரம், நாகரிகம்’ நீடித்திருப்பதற்கு எந்த சமூக, அரசியல் நியாயமும் இல்லை---.கீற்று
-‍ பாலசுந்தரம், மாநிலச் செயலாளர், CPI ML ( bala_cpiml@yahoo.com)
»»  (மேலும்)