9/20/2012

| |

அரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்

இன்று தமிழ் மக்களை இலட்சக்கணக்கில் சாகக் கொடுத்து விட்டு அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகள் எவரிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏன் மக்களிலும்தான். முக்களும் தொடர்ந்து இவர்கள் இனியாவது ஏதாவது செய்வாகள் என்ற எதிர்பார்ப்போடுதான் வாக்களிக்கிக்கின்றார்கள். ஆனால் தேர்தல்களில் வென்றபின் தன்பிள்ளைகள், மனைவி, குடும்பம் உறவினர்களுக்கு சொத்து சேகரிப்பதிலும் தனது சுயநல அரசியலைத் தக்க வைப்பதிலுமே குறியாக இருந்து வருகின்றார்களே தவிர மக்களின் தேவை தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது:
வெளியில் இனவாத கோஷம் எழுப்புகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் பின்கதவால் அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கொந்துராத்து வேலைகள் செய்வதிலே ஆர்வமாhய் இருக்கின்றார்கள். இவ்வாறான பச்சோந்தி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமது நிலையை தக்க வைத்துக்கொள்வதற்காக அறிக்கைவீரன் பா.அரியநேத்திரன் இன்று மேடைகளில் தமிழ் மக்களுக்கு அ, ஆ, இ, ஈ, உ என்கின்ற எழுத்தைச் சொல்லி இந்த ஐந்தெழுத்திலே தமிழனின் எதிர்காலம் தங்கியிருப்பதாக புதிய பாடம் சொல்லிக்கொடுத்து வருகின்றார்.
‘அ’ என்றால் அகிம்சை ரீதியாக முன்னர் நடைபெற்ற போராட்டமாம், ‘ஆ’ என்றால் ஆயுத ரீதியாக நடைபெற்ற போராட்டமாம், இந்த இரண்டும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சம்பந்தன் தலைமையில் ‘இ’ என்ற இராஜதந்திரப்போராட்டம் நடைபெற்று வருகிறதாம். இந்த இராஜ தந்திரப்போராட்டத்தில் தமிழர் வெற்றி பெற்றால் ‘ஈ’ என்கின்ற ஈழம் தானாக கிடைக்குமாம். இந்த ஈழம் கிடைத்தால் ‘உ’ என்கின்ற உலகம் எம்மை அங்கிகரிக்குமாம் என்று தமிழர் எவருமே அரிவரி படிக்காத மோடர்கள் என்ற நினைப்பில் தனது கண்டுபிடிப்பை மேடைகளில் மார்தட்டிச் சொல்லித்திரிகிறார். இதைக் கேட்கின்ற தமிழர்களும் கைதட்டி ஆரவாரிக்கின்றார்கள். முதலில் அறிக்கை விடும் அரியநேந்திரனின் தலை எழுத்து எப்படி இருக்கின்றதோ தெரியாது. ஆனால் அவர் திரைமறைவில் செய்து வரும் கூத்துக்கள் மிகப்பெரியது.
தான் அரசாங்கத்தை எதிர்த்து எந்த அறிக்கைவிட்டாலும் அதைக் கண்டுகொள்ளவேண்டாம் என சில முக்கிய இடங்களில் கூறியுள்ளார். இந்த அரியநேந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பழைய துவிச்சக்கர வண்டியில் பேப்பர் விற்றுத் திரிந்தவர் என்பது சகலருக்கும் தெரியும். அத்தோடு கடந்த முறையும் சரி, இம்முறையும் சரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனது குடும்பத்திற்கு தாராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இது அவரின் பேச்சுக்குக் கைதட்டி மகிழும் அப்பாவித்தமிழ் மக்களுக்கு எங்கு தெரியப்போகிறது.
தமிழன் இழிச்சவாயன் எதையும் கேட்கமாட்டான் என்ற தைரியத்தில் தமிழ் மக்களை ஈழம், சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசி ஒரு மாய வலைக்குள் சம்பந்தன் உட்பட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வைத்திருக்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அம் மாகாணத்தைப் பற்றியோ, அதன் அபிவிருத்தி பற்றியோ, இங்கு பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் கிழக்கு மாகாணம் என்பது மூவினங்களும் செறிந்து வாழும் ஒரு மாகாணம். இம் மாகாணத்திலுள்ள தமிழர்களின் நிலைதான் இன்று பரிதாபத்திற்குரியது. நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்று சிங்களவர்களும் முஸ்லிம்களும் கிழக்கில் அபிவிருத்தியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அபிவிருத்தி என்பது எட்டாக் கனியாகவே இருக்கின்றது.
தமிழர் ஆட்சியாளர்களை அனுசரித்துப் போயிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ் சிங்கள மக்களிடையே விழுந்த விரிசலைப் பயன்படுத்திக் கொண்டு இடையில் புகுந்த முஸ்லிம்கள் தமது பிரதேசங்களையும், மக்களையும், அபிவிருத்தி செய்வதிலே குறியாக இருந்து அவர்களது இலக்கை அடைந்து விட்டனர்.
அன்று தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் தமிழ் மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்தது. இந்த யுத்தத்தை தமிழ் மக்கள் மீது திணித்தவர்கள் சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்ல எமது தமிழ் அரசியல் தலைமைகளேயாகும். தமிழ் மக்களைச் சூடேற்றி சூடேற்றி அப்பாவி இளைஞர் யுவதிகளை ஆயுதம் ஏந்திப் போராடத் தள்ளியவர்கள் சுயநல தமிழ் அரசியல் வாதிகளே அன்றி வேறு எவருமில்லை. இன்று எல்லாம் முடிந்துபோன இனமாக இலட்சக் கணக்கான மக்களை இழந்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களைக் கொண்ட சமூகமாக, ஓர் முடக்கப்பட்ட இனமாக தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளமையை என்னவென்று சொல்வது, தமிழனின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே! உங்களிடம் யார் ஈழம் கேட்டது? வேண்டாம் இனியும் இழப்புக்களையும் துயரங்களையும் சந்திக்க தமிழ் மக்களால் முடியாது.
அன்று முப்படைகளை வைத்துப் போராடிய புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலே முடியாமல் போன ஈழக் கனவை மீண்டும் கொண்டு வந்து எமது இனத்தை அதாள பாதாளத்திற்குள் தள்ள வேண்டாம். இன்று இலங்கையில் தமிழன் படும் நிலை சில புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் விளங்குவதில்லை. அமெரிக்காவும், இந்தியாவும் தமது பிராந்திய நலன்களைக் கொண்டே இலங்கையில் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களது வேலை முடிந்துவிட்டால் இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்து விடுவார்கள். மீண்டும் மீண்டும் அமெரிக்கா, இந்தியா, சர்வதேச சமூகம் என பொய்சொல்லி தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம். இந்நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தின் தலைமைகளோடு பகையை வளர்த்து நாதியற்ற சமூகமாக நாம் போகாது ஓர் புரிந்துணர்வுக்கு வந்து தமிழ் மக்களை வாழவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கேட்கப்படுகின்றனர்.
நீங்கள் அனைவரும் வீர வசனம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டு உங்கள் மனைவி மக்களுக்கு சொத்து சேர்த்தது போதும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அரசின் சலுகைகளைப் பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது போதும். இனியாவது தமிழ் மக்களின் நலனில் அக்கறை தரக்கூடிய முடிவுகளை எடுங்கள். மூச்செடுக்க முடியாமல் கஷ்டப்படும் எம்மக்களுக்கு முதலுதவிச் சிகிச்சையளியுங்கள். முஸ்லிம்கள் இந்த யுத்த காலத்தில் எம்மைப் புறந்தள்ளிவிட்டு எவ்வாறு தங்களது பிரதேசங்களை வளப்படுத்தினார்களோ, அதே போன்றதொரு பணியை தமிழ்த் தலைமைகள் தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டும்.
போரில் அழிவடைந்த வடக்கு, கிழக்கு உட்பட்ட முழுநாட்டையும் ஒரு சிங்கப்பூராக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இன்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் ஓரணியில் திரளவேண்டும். காலத்தின் கோலம் அறிந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
இன்று இலங்கைத் தமிழ் மக்களுக்கு தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றது. கடந்த 60 வருட கால யுத்தத்தில் களைத்து ஓய்ந்து போய்க்கிடக்கும்; தமிழ் மக்களை சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் ரீதியாக உடனடியாக மீளக்கட்டியெழுப்ப வேண்டும். காயப்பட்டுக்கிடப்பவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதைப் போன்று தேவையற்ற போரினால் சகலதையும் இழந்து நிற்கும் தமிழ் சமூகம் புத்துயிர் பெற வேண்டும். இதற்கு நாட்டிலுள்ள சகல தமிழ் அரசியல் வாதிகளும் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட பகை, போட்டி அரசியல், கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் கைகோர்க்க வேண்டும் என்பதே இன்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Written by இலங்கைநெட்