9/11/2012

| |

பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய உற்சவம் இன்று ஆரம்பம்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கிராமிய வழிபாட்டையே தமது முக்கிய வழிபாடாக கருதி வழிபட்டு வருகின்றனர். இம்மக்கள் சக்தி வழிபாட்டில் மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டிருப்பதையும் இம் மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் அமைந்துள்ள ஆகமம் சாராத சக்தி ஆலயங்கள் பறை சாற்றி நிற்கின்றன.
அந்த வகையில் கண்ணகி அம்மன், காளியம்மன், காமாட்சியம்மன், பேச்சியம்மன், நாக கன்னி, திரெளபதையம்மன் என பல ஆலயங்களை நிறுவி அதன் மூலம் தமது வேண்டுதலை பல்வேறு நேர்த்திக் கடன் செலுத்தி நிறைவேற்றுகின்றனர்.
இந்த வகையில் கல்முனை மாநகருக்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாண்டிருப்பு திளெபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று 11ம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் முதலிய கிரியை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 18 தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறும் தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
பக்தி மணம் கமளும் பாண்டிருப்புக் கிராமத்திலே தான் முதன் முதலில் திரெளபதையம்மன் ஆலயம் அமைக்கப்பட்டது. பஞ்சபாண்டவர்களுக்கு கொலுவைத்து பக்குவமாய் பூசை வழிபாடுகள் நடத்தி வருகின்ற கிராமமாக பாண்டிருப்பு கிராமமே திகழ்கின்றது.
இவ் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவை ஏனைய ஆலயங்களில் நடைபெறும் தேர், தீர்த்தம் என அழைப்பதில்லை. மட்டக்களப்பு தமிழிலே "தீப்பள்ளயம்" என்றே மக்கள் அழைக்கின்றனர். அத்துடன் இலங்கையிலே மிகப் பெரிய தீக்குழியைக் கொண்ட இடமாகவும் பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயமே விளங்குகின்றது.
இவ் ஆலயத்தின் தொன்மையானது மிகப் பெரியதாகும். வட இந்தியாவில் இருந்து வைஷ்ணவ மதத்தைப் பரப்பும் நோக்கோடும், மகாபாரத இதிகாசக் கதையினை மக்கள் மத்தியில் நடித்துக் காண்பிக்கும் நோக்கோடும் கடல் வழிப் பயணம் ஊடாக தாதன் எனும் முனிவனும், அவனது ஆட்களும் பிரயாணம் செய்த போது கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு பகுதியை வந்தடைந்தனர்.
அவ்வாறு வந்தடைந்த அக்குழுவினர் மட்டக்களப்பில் இருந்து தெற்கே பயணம் செய்து அந்நாளில் நாகர் முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்தனர். பின்னர் அங்கேயே தங்கி இருந்து மகாபாரத இதிகாச கதையினை மக்கள் மத்தியில் போதித்து வந்தனர்.
வட இந்தியாவில் இருந்து தாதன் எனும் முனிவரும் அவரது ஆட்களும் இங்கு வந்திருப்பதனை அறிந்து கொண்ட அந்நாளில் மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இருந்த மாருத சேனனுடைய புத்திரன் எதிர் மன்ன சிங்கன் (கி.பி. 1539-கி.பி. 1583) காலப்பகுதியில் தாதனைக் கண்டு அவனது வருகை, குலம், கோத்திரம், நாடு என்பவற்றை விசாரித்து அறிந்து கொண்டான்.
தாதனும் தான் வந்த நோக்கத்தை மன்னனிடம் தெரிவித்து தமது வழிபாட்டிற்கு ஏற்ற இடம் ஒன்றை தேடி வழங்குமாறு மன்னனிடம் கேட்டுக் கொண்டான்.
மன்னனும் தாதனின் விருப்பப்படியே கடல் வழியே பிரயாணம் செய்த போது அருகே கடலும், ஆலய விருட்சங்களும், கொக்கட்டி மரங்களும், மேற்கே வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு அங்கேயே தாம் கையோடு கொண்டு வந்திருந்த திரெளபதை, விஷ்ணு, பாண்டவர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வணங்கி வந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டு முறைகளுக்கு தமது பூரண ஆதரவைத் தெரிவித்தான்.
அக்காலத்தில் திரெளபதை அம்மனின் அருள் பற்றி கேள்வியுற்ற கண்டி மாநகரை ஆட்சி புரிந்த அரசனான விமல தர்ம சூரியன் (கி.பி. 1594 - கி.பி. 1604) ல் இங்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு சென்றதாகவும் இவ் ஆலயத்திற்கென தங்கம், பொன், வெள்ளி போன்ற ஆபரணங்களை பரிசாக அளித்து சென்றுள்ளான் என கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கிடக்கின்றது.
பழமையும், புதுமையும், அற்புதமும் நிறைந்த பாண்டிருப்பு தீப்பள்ளயத்தின் வருடாந்த உற்சவத் தினத்தில் இறுதி மூன்று தினங்களும் விசேட உற்சவம் நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில் எதிர்வரும் 26ம் திகதி புதன் கிழமை பாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வும், 27ம் திகதி அருச்சுனன் தவநிலை செல்லல் நிகழ்வும் 28ம் திகதி தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்று மறுநாள் காலை தீக்குழிக்கு பால் வார்க்கும் பாற்பள்ளயச் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.
இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வழக்கத்தைவிட இவ்வருடம் அதிகமாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இறுதி மூன்று தினங்களும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.