9/20/2012

| |

எஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்

தற்கொலை செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய தனது எஜமானை காப்பாற்றச் சென்று நாய் ஒன்று தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் கரகண்டா நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 48 வயதுடைய நபர் அதிஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இவர் வொட்கா ரக மதுபான போத்தல்களுடன் ரயில் தண்டவாளத்தில் உறங்கியுள்ளார். தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

ரயில் வருவதைக் கண்ட நாய், எஜமானரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை தண்டவாளத்திலிருந்து அப்பால் இழுத்துச்சென்றது.

நாயொன்று தண்டவாளத்தில் நிற்பதை அவதானித்த ரயில் சாரதி, ரயிலை நிறுத்துவற்கு முயன்றார். ஆனால், மேற்படி நாயானது தனது முயற்சியால் எஜமானரை காப்பாற்றிய போதிலும் அந்த ரயிலில் மோதுண்டு  பலியாகியுள்ளது.

நாயினால் காப்பற்றப்பட்ட  நபர், வைத்தியசாலையில் வைத்தே சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். தனது உடலில் பலத்த காயங்கள் இருப்பதை பின்னரே அறிந்துள்ளார்.