9/12/2012

| |

புகைப்பதை நிறுத்தினால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

மது,புகை உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்தி விட்டு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி,சமூகத்துடன் அதிக ஈடுபாடு என்று இருந்தால் ஆயுளை 6 ஆண்டு நீட்டிக்கலாம் என்பது ஆய்வில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
நடுத்தர வயதினர் பலர் மாரடைப்பு,ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைகின்றனர். இதற்கு மது,புகை போன்ற பழக்கங்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

75 வயதை கடந்தவர்களையும் இதுபோன்ற பழக்கங்கள் பாதிக்கிறதா என்பது குறித்து ஸ்வீடனை சேர்ந்த மருத்துவர்கள்,மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர்.

75 வயதை கடந்த 1800 பேரின் 18 ஆண்டு கால(1987- 2005) வாழ்க்கை முறை குறித்து தீவிரமாக அலசி ஆராய்ந்தனர். அவர்களது வயது,பாலினம்,படிப்பு,பார்த்த வேலை,அன்றாட வாழ்க்கை முறை,பழக்க வழக்கங்கள்,சமூக பணிகளில் அவர்களது ஆர்வம் ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.

ஆய்வின் மூலம் தெரியவந்த தகவல்கள்,ஆய்வு நடந்த 18 ஆண்டு காலத்துக்குள்,
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தாத்தா,பாட்டிகளில் 92 சதவீதம் பேர் இறந்துவிட்டனர்.

ஆய்வுக்கு எடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் 90 வயது கடந்தவர்கள். அதில் பலர் பெண்கள். நன்கு படித்தவர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றியவர்கள். சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டி,சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள்.

ஓய்வு காலத்தை சிறப்பாக கழித்தவர்கள். அதாவது நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பது ஊர்ஜிதமாகிறது. புகைப்பிடிப்பவர்களை விட புகைக்காமல் இருப்பவர்கள் 1 ஆண்டு அதிகம் வாழ்கின்றனர். புகைப்பதை நிறுத்தவிட்டவர்களின் வாழ்நாளும் ஏறக்குறைய 1 ஆண்டு அதிகரித்துள்ளது.

நடுத்தர வயதில் புகை பழக்கத்தை விடுவது மிகமிக நல்லது. உடற்பயிற்சி,நீச்சல் போன்றவற்றை தினசரி செய்தவர்களின் வாழ்நாள் சராசரியாக 2 ஆண்டு அதிகரிக்கிறது.

புகை,மது போன்ற பழக்கங்களை கைவிட்டு ஆரோக்கியமான உணவு,தேவையான உடற்பயிற்சி,போதிய ஓய்வு,சமூக பணிகளில் நாட்டம் என்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தால் பெண்களின் ஆயுள் 5 ஆண்டும்,ஆண்களின் ஆயுள் 6 ஆண்டும் அதிகரிக்கிறது.