9/25/2012

| |

உரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளை செல்லக்காசாக்கியதன் விளைவு



இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம்கள் நால்வரும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை தமிழர்கள் எவருக்கும் மாகாண சபையில் அமைச்சர் பொறுப்பு கிடைக்கவில்லை.
37 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் உதவியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
22 உறுப்பினர்களை கொண்டுள்ள ஆளும் தரப்பில் 14 பேர் முஸ்லிம்கள் , 6 பேர் சிங்களவர்கள் ,2 பேர் தமிழர்கள் ஆவர்.
கடந்த முறை மாகாண சபையில் தமிழர் தரப்பில் முதலமைச்சரும் அமைச்சர் ஒருவரும் இருந்தனர். முஸ்லிம் தரப்பில் இரண்டு அமைச்சர்களும் சிங்கள தரப்பில் ஒரு அமைச்சரும் இருந்தனர்.
அச்சமயம் ஆளும் தரப்பில் 7 தமிழர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள் ஆனால் இம்முறை இருவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமானம் செய்துள்ளனர்.
மாகாண முதலமைச்சர் நஜிப் ஏ மஜீத் நிதி நிட்டமிடல் சட்டம் ஒழுங்கு ,மாகாண நிர்வாகம்,சுற்றாடல், மீள்குடியேற்றம் மற்றும் உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி ஆகிய துறைகளைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூருக்கு சுகாதாரம், உள்நாட்டு மருத்துவம், விளையாட்டு, உணவு விநியோகம் மகளிர் சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள் ஆகிய துறைகள் கிடைத்துள்ளன.



செய்னுலாப்தீன் அகமட் நஷீருக்கு விவசாயம், கால்நடை அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய துறைகள் கிடைத்தன.
தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ். உதுமான் லெப்பைக்கு வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் வீடமைப்பு, நிர்மானதுறை, கிராமிய மின் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன.
விமலவீர திஸாநாயகாக்கு கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் பண்பாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் மீண்டும் கிட்டியுள்ளன.
கடந்த மாகாண சபையில் அமைச்சர் பொறுப்புகளை வகித்திருந்தத முன்னாள் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், துரையப்பா நவரெட்னராஜா ஆசியோருக்கு இம்முறை அமைச்சர் பொறுப்புகள் கிடைக்கவில்லை.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைச் சேரந்த எவரும் இம்முறை அமைச்சர்கள் வாரியத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர்கள் வாரியத்தில் அமைச்சராக பதவி வகிக்க விரும்பவில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றதன் காரணமாக அமைச்சர்கள் பகிந்தளிப்பு விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்நோக்கிய நெருக்கடி நிலை காரணமாகவே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு இடமளிக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக அக்கட்சி சார்பில் முதலமைச்சர் பதவிக்கு முன்வைக்கப்பட்ட எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.
இதேவேளை மூவின மக்களும் வாழும் மாகாணம் என கருதப்படும் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படாதது குறித்து பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகிறது.