கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று தமக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தாங்கள் காத்திருந்தும் தமக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையில் இன்று இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது.
நேற்று சனிக்கிழமையும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பினர், தாம் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் கூட்டமைப்பு கூறியது.
கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தாங்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் பிபிசியிடம் கூறினார்.
தமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவொன்றை எடுக்கும்வரை கால அவகாசம் வழங்குவதே பொருத்தமானது என்று தான் கருதுவதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்.