அதன் இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளை பதிவேற்றியுள்ள யூடியூப் இணையதளமும் கூகுள் நிறுவனமும் மற்றும் இதற்குத் துணைபோகும் ஏனைய ஊடக நிறுவனங்களும் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:
உலக அமைதிக்கும் சமாதானத்திற்குமாகப் பாடுபட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களை மோசமான மனிதராகச் சித்தரிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் நபிகளாரை இவ்வாறு கேவலப்படுத்துவதை எந்த ஒரு முஸ்லிமாலும் சகித்துக் கொள்ள முடியாது.
கருத்துச் சுதந்திரம் எனும் பெயரால் இஸ்லாத்தை அவமதிக்கும் வெளியீடுகள் மூலம் முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் கைங்கரியத்தை மேற்குலக ஊடகங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. 2005 ஆம் ஆண்டு டென்மார்க் பத்திரகை ஒன்று நபிகளாரை அவமதிக்கும் வகையில் கேலிச் சித்திரங்களை வெளியிட்டு பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்ததுடன் உலகளாவிய ரீதியில் பாரிய வன்முறைகளுக்கும் வித்திட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மேற்குல ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு வெளியீடுகளை மேற்கொண்டு வந்துள்ளன. அதன் தொடரிலேயே தற்போது அமெரிக்காவிலிருந்து இத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் அடங்கியுள்ள சில காட்சிகள் இணையதளங்களிலம் பதிவேற்றப்பட்டு சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான விரும்பத்தகாத முன்னெடுப்புகள் உலகின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கே வழிவகுக்கும் என்பதற்கு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக உலகெங்கும் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளுமே தக்க சான்றுகளாகும்.
இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள இக் காட்சிகளை அகற்றுமாறு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக வேண்டுகோள்களை விடுத்து அழுத்தங்களை வழங்கி வருகின்ற போதிலும் அதனைக் கண்டுகொள்ளாத கூகுள் நிறுவனம் அவற்றை அகற்ற முடியாது என மறுப்புத் தெரிவித்துள்ளமை கவலைக்குரியதாகும். அவ்வாறு அதனை ஏனைய ஊடக நிறுவனங்கள் மீள் ஒளிபரப்புச் செய்ய முயல்வதானது கண்டிக்கப்படவேண்டியதாகும்.
கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில் மத நிந்தனைகளுக்கும் மற்றவர்களின் மனங்களைப் புண்படுத்துவதற்கும் கூகுள் நிறுவனம் துணைபோவதானது அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
எனவேதான் இதுவிடயத்தில் கூகுள் நிறுவனம் உடனடியாக தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதுடன் குறித்த வீடியோ காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
அதேபோன்று இத் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதுடன் தொடர்புபட்டுள்ள சகலரையும் அமெரிக்க அரசாங்கம் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் அவர்களுக்கு தக்க தண்டனைகளை வழங்கவும் வேண்டும் என எமது இயக்கம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறது.
அத்துடன் இத் திரைப்படத்துக்கு எதிராக கண்டனங்கள் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளிகளால் ஈடுபடுபவர்கள் இஸ்லாமிய ஷரீஆவின் வரையறைகளை மீறாது மிகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஏனைய சமூகங்களைப் பாதிக்காத வகையிலும் சமய முரண்பாடுகளைத் தோற்றுவிக்காத வகையிலும், வன்முறைகளுக்குத் தூபமிடாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு நபிகளைப் பற்றியும் அவர்கள் இவ்வுலகில் எந்தக் கொள்கையின் பால் மக்களை அழைத்தார்கள் என்பதும் தொடர்பிலும் அடுத்தவர்களுக்கு மிகத் தெளிவாக புரிய வைக்கின்ற முன்னெடுப்புக்களைச் செய்வது நம்முள் உள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். அந்த வரலாற்றுக் கடமையை நாமேல்லோருமாகச் சேர்ந்து நிறைவேற்றத் தயாராவோம் எனவும் எமது இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.
சூறா சபை
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
காத்தான்குடி