யுக்தா முகி, 1999ம் ஆண்டு தனது 20வது வயதில் உலக அழகி பட்டத்தை வென்றார். பின்னர் பாலிவுட் படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து யுக்தா முகிக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு கன்வால் முகி என்ற குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது மும்பை பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் மும்பை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால், எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் நீதிமன்றம் அனுமதி அல்லது உத்தரவின்றி பொலிஸார் செய்ய முடியாது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், யுக்தா முகி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் தண்டனைக்குரிய நடவடிக்கைக்காக அவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.
முன்னாள் உலக அழகி ஒருவர் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.